Bio Data !!

29 March, 2025

# தடுமாறிய தருணங்கள். அழகான தலைப்பு. தடுமாறாத மனிதன் யாரு? தடுமாறப் பயந்து இயங்காத மனிதன் வெற்று மனிதன். அவனை விட விழுந்து விழுந்து எழுபவன் எவ்வளவோ மேல். ரொம்ப வருஷங்களுக்கு முன்னால திருச்சியில ஒரு நெருங்கின சொந்தத்தோட திருமணத்துக்கு போனேன் தனியாக. திருச்சிக்குள்ள ஒரு லோக்கல் பஸ்ஸில் ஏறினேன் . உட்கார இடம் கிடைத்த சந்தோஷம். எனக்கு பொதுவாகவே மூணு பேர் அமரும் சீட்டில் நடுவில் உட்காரப் பிடிக்காது. சான்ட்விச் ஆகிடுவோம். அன்று சரியான கூட்டம். வேற வழியில்லை. நடுவில் மாட்டிக் கொண்டேன். அமர்ந்த கொஞ்ச நேரத்தில் கண்ணைக் கிறக்கி விட்டது. அந்த இடைப்பட்ட நேரத்துக்குள் என் அருகில் இருந்த பெண் மெல்ல என் கைப்பையைத் திறந்து பர்ஸை எடுத்து மூடியும் விட்டு இறங்கி விட்டாள். நான் இறங்கினதும் அங்கே ஒரு பரிசுப் பொருள் விற்கும் கடை இருப்பது தெரிந்து வாங்கச் சென்றேன். பரிசுப் பொருளைத் தேர்ந்து எடுத்து விட்டேன். பணம் கொடுக்கத் தேடினால் பர்ஸைக் காணோம்( இப்போ அந்த பிக் பாக்கெட் காரங்க எல்லாம் என்ன வேலைக்குப் போயிருப்பாங்க. இது ஜீபே யுகமாச்சே. ) என் பதற்றத்தைப் பார்த்து கடைக்காரர் "எல்லா பொருளையும் எடுத்து வெளியே வச்சு பொறுமையாத் தேடுங்க"ன்னார். இல்லை பறி போய் விட்டது. அப்போ அந்த கடைக்காரர் செய்த விஷயம் தான் பதிவு எழுதத் தூண்டியது. "நீங்க கொண்டு போங்க. திரும்பி வரும் போது பணம் கொண்டு வந்து கொடுங்க"ன்னார். வெளியூர்க்காரப் பொண்ணான என்னை எது அவரை நம்பத் தூண்டியது. இன்று இது நடக்க வாய்ப்பிருக்கிறதா? அந்த தடுமாறிய தருணத்தில் அவர் எனக்குத் தெய்வமாகத் தோன்றினார். "அங்கே பணம் கிடைக்கலைன்னாலும் பரவாயில்லை. ஊருக்குத் திரும்பிப் போக பணம் தரேன். மொத்தமா மணி ஆர்டர் பண்ணிடுங்க"என்றார். நான் திருமணம் முடிந்து என் அக்காவை அழைத்து விஷயத்தைச் சொல்லி பணம் பெற்றுத் திரும்பும் போது கடையில் கொடுத்து ஊருக்குத் திரும்பினேன். அவ்வளவு அருமையான உலகத்தில் வாழ்ந்த நாம் இப்போ பார்ப்பது என்ன! எவரொருவரையும் சந்தேகக் கண்ணோடே பார்க்கிறோம். ஏமாந்து விடக் கூடாது என்று எப்போதும் உஷாராகவே இருக்கிறோம். காலம் மாறிப் போச்சா? கெட்டுப் போச்சா?

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!