Bio Data !!

24 March, 2025

# சுட்டு விடும் நிஜங்கள். வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்பது போல் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பிள்ளை வாழாமல் தனித்திருப்பது இன்று நம் கண் முன்னே காணும் வருத்தமான நிஜம். குடும்பத்தில் ஆண்கள் பெண்களை அடிப்பதும், அராஜகம் பண்ணுவதும் அன்று வழக்கமாய் இருந்தது. தன் தாய் கஷ்டப்படுவதை பார்த்து வளர்ந்த பெண் குழந்தைகள் நாம் ஆரம்பத்திலேயே இடம் கொடுத்து விடாமல் துணிச்சலாய் இருக்க வேண்டும் என்று எதற்கெடுத்தாலும் எதிர்த்து நிற்பது இன்று பல விவாகரத்துகளுக்குக் காரணம் என்பது சுட்டு விடும் நிஜம் அன்று பெண் குழந்தைகள் கணவரையோ அவர் குடும்பத்தையோ குறை சொல்லி பெற்றவரிடம் வந்தால் "இது பெரிய விஷயமில்லை அனுசரித்து வாழ்" என்று சொல்லிக் கொடுத்தார்கள். இன்றோ " கண்ணின் மணி போல் நாங்கள் பிள்ளையை வளர்த்தது இவர்கள் கஷ்டப்படுத்தவா. முடிஞ்சா பாரு இல்லைன்னா வந்திடு " என்பது இன்றைய பெற்றோரின் போதனையாய் இருப்பதும் விவாகரத்துகளுக்கு ஒரு காரணம் என்பது சுட்டு விடும் நிஜம். வரவுக்கேத்த செலவு செய்யணும் என்பது போய் வானளவு ஆசை வளர்த்து திருமணத்தை ஹெலிகாப்டரில் நடத்துவோமா கப்பலில் நடத்துவோமா என்று யோசிப்பதும், தன் அளவில்லாத ஆசைகளை தீர்க்கக் கூடியவனையே திருமணம் செய்ய காத்திருப்பதும் திருமணமாகாத முதிர் கன்னிகளும் இளைஞர்களும் பலரிருக்கக் காரணம் என்பது சுட்டு விடும் நிஜம். திருமணமாகுமுன் தன் சகோதரிகள் திருமணத்துக்காகவும், தனக்குத் திருமணமான பின் தன் மனைவி மக்களுக்காகவும் உழைப்பது தன் கடமை என நினைத்து வாழ்ந்த தன் தந்தையர் கதை கேட்ட இளைஞர்கள் ஆரம்பத்திலேயே சுதாரிப்பதாய் நினைத்து பொறுப்பவர்களாய் மாறிப் போவதும் அதிகரித்து வரும் விவாகரத்துகளுக்கு ஒரு காரணம் என்பது சுட்டு விடும் நிஜம். வீட்டுக்குள்ளேயே இருக்கும் போது கணவன் சொல்வதையே வேத மந்திரமாய் நினைக்கும் பெண்ணை தாயாய் பார்த்து வளர்ந்த ஆணின், பொருளாதாரத்தில் தன்னைத் தாங்கிப் பிடிக்க வேலைக்குச் செல்லும் பெண் பல விஷயங்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பிருப்பதைப் புரிந்து கொள்ளாத, ஏற்றுக் கொள்ளாத ஈகோவும் பல விவாகரத்துக்களுக்கு காரணம் என்பதும் சுட்டு விடும் நிஜம். இப்படி சொன்ன சிலவும் சொல்லாத பலவும் சுட்டு விடும் நிஜங்கள்.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!