Bio Data !!

29 March, 2025

Hotstar இல் "A Thursday" என்றொரு ஹிந்தி படம் பார்த்தேன். படத்தின் இயக்குநர்: Behzad Khambata. பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் பாதிப்பை பேசிப் பேசியே கடந்து போகிறோம். ஆனால் அப்படி, தான் பள்ளிக்கு சென்று வரும் வழியில் வானில் கடைசியாக தனியாக இருக்கும் ஒரு பெண் குழந்தை டிரைவர் மற்றும் ஒருவரால் சீரழிக்கப்பட. குழந்தையின் தாய் பல வருடங்கள் அலைந்தும் காவல் துறையின் நேர்மை அற்ற போக்கினால் குற்றவாளிகள் தண்டிக்கப்படவே இல்லை. பாதிக்கப்பட்ட பெண் ( யாமி கௌதம்) வளர்ந்து, நடத்தும் ஒரு ப்ளே ஸ்கூலுக்கு அதே டிரைவர் ஒரு குழந்தையை அழைத்து வருவதைப் பார்த்து பதினாறு குழந்தைகளுடன் அந்த டிரைவரையும் தற்செயலாக மாட்டிக் கொண்ட ஒரு வேலைக்காரப் பெண்ணையும் சேர்த்து அறையில் அடைத்து வைத்து போலீஸின் கண்ணில் விரலை விட்டு ஆட்டுகிறாள். குழந்தைகளுடன் பேசும் போது முகத்தில் ஒரு குழைவும் அடுத்த நொடி இறுக்கமுமாக அந்த பெண் நடிப்பில் தூள் பரத்துகிறாள். அதே போல் பிரதம மந்திரியாக வருபவரும் ( டிம்பிள் கபாடியா) அழகும் கம்பீரமுமாக நம்மை கவர்ந்து விடுகிறார். வயிற்றில் குழந்தையுடன் பதட்டத்தோடும் பொறுப்போடும் வளைய வரும் காவல் துறை அதிகாரியாக வரும் பெண்ணும் ( Neha Dhupia) நம் மனதை விட்டு நீங்க வெகு நாளாகும். இது பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பால் நேரும் விளைவை விளக்கும் படமாதலால் முக்கியமான கதா பாத்திரங்களை எல்லாமே பெண்களாக படைத்திருப்பார்கள் என நினைக்கிறேன். அதுல் குல்கர்னியும் கரண்வீர் ஷர்மாவும் முக்கிய கதா பாத்திரங்களில் நடித்திரிக்கிறார்கள். குழந்தைகளை விடுவிக்க குற்றவாளி பிரதம மந்திரியிடம் வைக்கும் கோரிக்கை பெண் குழந்தைகளைப் பெற்ற அத்தனை பேருக்கும் ஏன் எல்லோருக்குமே சரியெனவே தோன்றும். தவற விடக் கூடாத ஒரு நல்ல படம்.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!