26 July, 2025
DNA பட விமர்சனம்
#DNA பட விமர்சனம்.
OTT JIO Hotstar.
இயக்குநர் : நெல்சன் வெங்கடேசன்.
இசை : ஜிப்ரான்.
முக்கிய கதா பாத்திரங்கள் : அதர்வா, நிமிஷா சஞ்சயன்,
மற்றும் ரமேஷ் திலக், சரிதாவின் தங்கை விஜி சந்திரசேகர், பிக் பாஸ் டைட்டில் வின்னர் ரித்விகா, வில்லனாக வரும் முகமது ஸீஷன், போஸ் வெங்கட், சேத்தன், பாலாஜி சக்திவேல்.
கதை ஒரு முக்கியமான பிரச்னையை எடுத்து பேசுகிறது. முன் ஒரு காலத்தில் அரசு மருத்துவமனைகளில் இப்படி நடக்கிறது எனக் கேள்விப் பட்டு இருக்கிறோம். இங்கே தனியார் மருத்துவமனையில் நடப்பதாகக் காட்டி இருக்கிறார்கள்.
பிறந்த குழந்தைத் திருட்டு தான் அந்தப் பிரச்னை. அதைச் செய்வதாக ஒரு வயதான பெண்மணியைக் காட்டுகிறார்கள். கடத்துவதற்கு எளிதாக இரண்டு பை நிறைய தின்பண்டங்களை நிறைத்து விற்பதற்கு கொண்டு வருவதாகக் காட்டுகிறார்கள். ஒரு நாள் இல்லை ஒரு நாள் குழந்தைகள் அழுது காட்டிக் கொடுத்து விடாதா? ஒரு இடத்தில் குழந்தைக்கு ஏதோ சொட்டு மருந்து கொடுப்பது போல் காட்டி இருக்கிறார்கள். ஆனால் ஜன்னல் வழியாகத் தூக்கும் போது அது கொஞ்சமாவது சிணுங்குவது போல் காட்டி இருக்கலாம்.இது போல் பல இடங்களில் தவற விட்டிருப்பதற்கு படத்தின் நீளம் அதிகமாகி விடும் என்பது காரணமா?
ஆனாலும் மனதை ஒரு உலுக்கு உலுக்கித் தான் போகிறது. அதற்கு மனப்பிறழ்வை பார்டரில் நழுவ விட்ட பெண்ணாக , அதர்வாவின் மனைவியாக , துடுக்கான குடும்பப் பெண்ணாக நிமிஷா தன் எடையை வெகுவாய் குறைத்து , கலக்கி இருக்கிறார். அழகழகான புடவைகளில் பாந்தமாக வருகிறார்.
அதர்வா காதல் தோல்வியால் போதைப் பழக்கத்தில் சிக்கி சீரழிந்து குடும்பத்தாரால் வெறுக்கப்பட்டு , மிகுந்த முயற்சியோடு அந்த பழக்கத்திலிருந்து வெளி வந்து நிமிஷாவைத் திருமணம் செய்யும் ஆனந்தாக வரும் வரை நடிப்பதற்கு அவருக்கு வாய்ப்புகள் மிக அதிகம்.
பின் பாதி அடிதடி.
வில்லனாக வருபவர் ஒரு மோசமான முக அமைப்பு உடையவராகத் தான் இருக்க வேண்டுமா? சமீப காலமாக அப்படி ஒரு கட்டமைப்பு சினிமாவில் இருக்கிறதே என பல சந்தர்ப்பங்களில் கேட்டிருக்கிறோம். அது இயக்குநர் காதில் விழுந்து விட்டது போல. வில்லன் முகமது ஸீஷன் அழகாக இருக்கிறார். இருந்தாலும் மனசு வராமல் விருப்பமில்லாமல் தான் வில்லத் தொழிலில் இறங்குவது போல் காட்டுகிறார்கள்.
நிமிஷா வெகுளியாக பல இடங்களில் வந்தாலும் தன் குழந்தை மாறி விட்டதை கண்டுபிடித்து மற்றவர்கள் ஒத்துக் கொள்ளாத இடத்தினில் நடிப்பில் ஜொலிக்கிறார்.
எடிட்டிங்கில் கவனம் செலுத்தி வேண்டாதவைகளை வெட்டி இன்னும் கொஞ்சம் வேண்டியவைகளை சேர்த்திருந்தால் படம் வேற லெவலுக்கு போயிருக்கும்.
பார்ப்பதை தவற விடாதீர்கள்.
25 July, 2025
Human error என்று சொல்வது உண்டு் .
அந்த மனிதத் தவறுக்கு ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு கனம் இருக்கும். உதாரணமாக ஒரு நிறுவனத்தில் கணக்கெழுதுபவர் 300 க்குப் பதிலாக 3000 என்று எழுதி விட்டார் என்றால் அது human error. அதை நாள் இறுதியில் கணக்கைச் சரி பார்க்கும் போது கண்டுபிடித்து விடலாம். சரி செய்து விடலாம்.
அதுவே ஒரு வங்கித் தொழிலாளி மூன்று நூறு ரூபாய்த் தாள்கொடுப்பதற்குப் பதிலாக ஒன்றைக் கூடுதலாகக் கொடுத்து விட்டால் நாளின் இறுதியில் கணக்கைச் சரி செய்யும் பொழுது கையிலிருந்து போட வேண்டி வரும். நூறு ரூபாய்த் தாளுக்குப் பதிலாக ஐநூறு ரூபாய்த் தாள் என்றால் தவற் றின் கனம் இன்னும் கூடுதல் .
ஒரு நகைக் கடையில் வியாபாரம் முடிந்து மிச்சமிருக்கும் நகைகளை சரி பார்க்கும் போது ஒருஇடத்தில் வைக்க வேண்டிய பொருள் வேறொரு இடத்தில் வைத்து விட்டால் அது human error. ஒன்றில் குறையும் அதுவே மற்றொன்றில் கூடுதலாய் இருக்கும். தவறு கண்டு பிடிக்கப் பட்டு விட்டால் சரி செய்து விடலாம்.
கம்ப்யூட்டர் , பயன்பாட்டில் வரும் முன்பு எங்கள் அலுவலகத்தில் ஒவ்வொரு தொலைபேசி எண்ணுக்கும் ஒரு ஃபைல் வைத்திருப்போம். அவை நூறு நூறாக அடுக்கப்பட்டு இருக்கும். லட்சக்கணக்கில் இருக்கும். ஒவ்வொரு நாளின் மாலையிலும் வேலை முடிந்த கோப்புகளை அந்தக் கட்டுக்குள் சரியாகக் கொண்டு சேர்க்க வேண்டும். அதைத் தவறுதலாக வேறு கட்டில் வைத்து விட்டால் தேவைப்படும் நேரத்தில் அதை எடுப்பதற்குள் தாவு தீர்ந்து விடும்.
அதைப் போலவே கார் ஓட்டும் போது கவனக்குறைவாக ப்ரேக் பிடிக்க வேண்டிய இடத்தில் ஆக்ஸிலரேட்டரைக் கொடுத்து விட்டால் விபத்து நிகழ்ந்து விடும். அது நடக்கும் இடத்தில் ஒரு மனிதன் நின்று விட்டால் உயிர்ப்பலி நேர்ந்து விடும்.
ரயில்வே லெவல் கிராஸிங்கில் கதவு மூட வேண்டிய நேரத்தில் திறந்தே வைத்திருந்து விட்டால் அந்த மனிதத் தவறு , பல உயிரிழப்புகளுக்குக் காரணமாகும்.
விமானம் ஓட்டுபவர் செய்யும் ஒரு சிறு தவறு கூட பல உயிர்கள் போக காரணமாகிப் போகும்.
எங்கள் தொலைபேசி அலுவலகங்களில் , அல்லது கேபிள் சம்பந்தப்பட்ட வேலைகளிலோ, வயர்கள் அடித்து இணைக்கும் இடங்களிலோ சில சமயம் இந்த மனிதத் தவறுகள் நடக்கலாம். நமக்கு அந்தத் தவறைச் செய்து விட்டேன் என்று வெளிப்படையாகச் சொல்லும் திடம் வேண்டும். தவற்றுக்கான தண்டனையை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் வேண்டும்.
செய்தத் தவறைச் சொல்லி விட்டால் அதைச் சரி செய்வது சுலபமாக இருக்கும். அதுவே நாம் சொன்னால் நம்மைக் குறைவாக நினைப்பார்களே என்றோ தண்டனையின் கடுமையை நினைத்தோ செய்த தவற்றை மறைத்து விட்டால் அதைக் கண்டு பிடித்துச் சரி செய்யப் பல மணி நேரங்கள் ஆகி விடும். சில சமயம் கண்டு பிடிக்கவே முடியாமல் கூட போய் விடும்.
இப்பொழுது நான் சொல்ல வரும் தவற்றின் கனம் புரிந்திருக்கும். ஒவ்வொருவரும் அவர் தம் பணியை மிகுந்த கவனத்தோடு செய்யப் பழகி விட்டால் இழப்புகளை குறைத்து விடலாம். முக்கியமாக உயிரிழப்புகளை.
ஏதோ சொல்லத் தோணுச்சுது. சொல்லிட்டேன்.
17 July, 2025
# ஆண் சமையல்
# ஆண் சமையல்.
நான் நன்கு அறிந்த ஆண்களில் முதலாவது என் தந்தை. அந்தக் கால மனிதர். இப்போ இருந்திருந்தா 91 வயது இருக்கும். அம்மா வேலைக்குப் போகும் ஒரு சில பெண்களில் ஒருவராய் இருந்ததால், வீட்டில் வேலை செய்ய ஒரு பெண்மணி எப்பவும் இருப்பாங்க. அவங்க சமைச்சு கிட்சனில் வச்சுட்டு போறதை அம்மா கிளம்பறதுக்கு முன்னால டைனிங் டேபிள்ல எடுத்து வச்சுட்டு போகணும். அப்பா கல்லூரியில இருந்து மதியம் வீட்டுக்கு வந்து சாப்பிடுவாங்க. ஏதோ அவசரத்துல ஒண்ணை எடுத்து வைக்க மறந்தாச்சுன்னா அவ்வளவு தான். என்ன எடுத்து வைச்சிருக்காங்களோ அதை மட்டும் சாப்பிட்டுட்டு போயிடுவாங்க. சாப்பிட்ட தட்டிலேயே கை கழுவும் வழக்கம். கிட்சனுக்குள்ள ஆண் வருவதென்பது ரொம்ப மதிப்பில்லாத ஒரு விஷயம். அம்மா என்னிடம் சொல்வாங்க. "கைப்பிள்ள அழுதாலும் இடுப்புல இடுக்கிக்கிட்டுத் தான் பால் ஆத்தணும். " அந்தக் காலத்தில் பெண் சம்பாதித்தாலும் அடுப்படியின் அத்தனை பொறுப்பும் அவளுக்குரியது மட்டுமே.
அடுத்து நான் அறிந்த ஆண் என் கணவர். ரொம்ப காலம் வரை அடுப்படிக்குள் வருவது அவமானம் என நினைத்தவர் தான். நான் மகளுடன் ராஜஸ்தான் போகும் போது , ஒரு இடத்தில் சாப்பாடு கொண்டு வந்து கொடுக்க ஏற்பாடு செய்திருந்தேன். ஆனால் அதைத் தொடர்ந்து சாப்பிட்டால் வயிறு கெட்டுப் போகும் என்று போன் மூலமே எப்படி சமையல் செய்வது என்பதைக் கேட்டறிந்து செய்து பழகினார். சூப்பரா சமைச்சேன்னு சொல்லுவார். என் பிள்ளைகள் " அம்மாவுக்கு சமைச்சு கொடுங்கப்பா. அவங்களும் சூப்பர்னு சொல்லட்டும்" னு சொல்வாங்க. ஒரே ஒரு முறை செய்து கொடுத்தார். சூப்பராத் தான் இருந்தது. ஆனாலும் சமையல் பெண்ணின் வேலை. அத்தியாவசியம் என்றால் மட்டும் ஆண் இறங்கலாம் என்ற அளவில் மனப்பான்மை மாறி இருந்தது. இப்போ ஓய்வு பெற்ற பிறகு ரொம்பவே உதவி செய்கிறார். நான் போதும் உடம்பைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள் என்று சொல்லும் அளவுக்கு.
அடுத்த ஆண் மருமகன். அடுத்த தலைமுறை அல்லவா? வீட்டுக் காரியங்களில் ரொம்ப உதவி. விரும்பிச் செய்வார். அது ரொம்ப முக்கியம் அல்லவா? குடும்பம், மனைவி, மக்களுக்குத் தான் முதலிடம். மற்றவை எல்லாம் அதற்குப் பின் தான். அவங்க அம்மா ரொம்ப அழகா வளர்ந்திருக்காங்க. என் மகளிடம் சொல்வேன் " உன் மகனையும் இதே போல் அனுசரணையான பையனாக வளர்த்து விடு. உனக்கு வரும் மருமகள் உன்னைக் கொண்டாடுவாள் என்பேன்.
நாலாவதா ஒரு ஆண். என் பேரன். ஞாயிற்றுக் கிழமைகளில் எல்லோருக்கும் லெமன் ஜூஸ் போட்டுக் கொடுப்பான். அம்மா உடம்புக்கு சரியில்லைன்னா தேவையான வேலைகளைச் செய்து கொடுப்பான். பான் கேக், கேக், ஐஸ்கிரீம் என்ற வகைகளை செய்து பழகி இருக்கிறான். இன்னும் கொஞ்சம் வளர்ந்தால் முழு சமையலும் சொல்லிக் கொடுத்து விடலாம்.
தலைமுறை மாற மாற அடுப்படி வேலை என்பது ஆணுக்கானதல்ல என்ற மனப்பான்மை கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து போவதைப் பார்க்கிறோம். நல்ல சகுனம் தான்.
அது பெண்ணுக்கானதல்ல என்ற நிலைக்குப் போய் விடக் கூடாது. எப்பவும் ஒரு பாலன்ஸ்டு நிலை தான் நிரந்தரமாய் நிற்கும். மற்றவை எல்லாம் மாறுதலுக்கு உட்பட்டவை.
07 July, 2025
# ரிதன்யா அவினாசி மரணம்
# "ரிதன்யா"
அவங்க அம்மா நாங்க அவளை ரித்துக் குட்டின்னு தான் கூப்பிடுவோம்னு சொன்னாங்க. நான் இன்று வரை மூத்த பெண்ணை ஜெனிம்மான்னும், இளையவளை சிந்து குட்டின்னும் தான் கூப்பிடுவேன். அப்படித் தான் அருமை அருமையா பிள்ளைகளை வளர்த்துறோம்.
ஆனால் நான் ரிதன்யாவைப் பற்றி எழுதி ஓய்ந்து விட்டேன். அதனால் அவளோடு தொடர்புடைய "கவினை" ப்பற்றித் தான் சொல்லப் போகிறேன்.
இத்தனைக்குப் பின்னும் கவினை " மாப்பிள்ளை" என்றே குறிப்பிடும் ரிதன்யாவின் தந்தை மேல் பரிதாபமும் மரியாதையுமே எழுகிறது.
நான் சொல்வது ஒரு சிலருக்குக் கோபம் வரலாம். மாட்டிக் கொண்டதால் கவின் ஒரு அயோக்கியனாகத் தெரிகிறான். அவனைப் போன்ற மன நிலையில் இன்னும் சில இளைஞர்கள் சமுதாயத்தில் இருக்கலாம். அந்த எண்ணிக்கைப் போகப் போக அதிகரிக்கக் கூடச் செய்யலாம். அப்படித் தான் காலம் போய்க் கொண்டிருக்கிறது. எச்சரிக்கும் பெரியவர்களை பூமர் என்று சொல்லி எளிதாகக் கடந்து போகிறோம்.
எங்கள் காலத்தில் கணவனைத் தன்னோடு இருத்திக் கொள்வதற்கு " பகலில் கணவனுக்குத் தாயாகவும் இரவில் தாசியாகவும் இரு" என்று சொல்வதுண்டு. ஆனால் அந்த காலத்தில் கூட தாசி போன்று நடக்க விரும்பிய மனைவியிடம் எதிர்பார்க்காத பல விஷயங்கள் இன்றைய இளைஞர்கள் மனைவியிடம் எதிர்பார்க்கிறார்கள். தான் இணையத்தின் மூலம் அறித்து கொண்ட அரை குறை அறிவைக் கொண்டு பரிசோதிக்க ஒரு பொம்மை கிடைத்ததென்று மகிழ்கிறார்கள்.
ஒன்று அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். உன்னைப் போலவே மனநிலையும் எதிர்பார்ப்பும் உள்ள பெண் உனக்கு ஈடு கொடுக்கலாம். ஆனால் அது அவளுக்கு பல அனுபவங்களுக்குப் பின் கிடைத்திருக்கும். அது உனக்கு ஓகேன்னா அப்படிப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்து கொள்.
அப்படி அல்லாமல் மனம் கூட கறைபடாத ரோஜாவைக் கொண்டு வந்து உனக்குப் பிடித்தபடி பயன்படுத்தி கசக்கி எறியாதே.
இப்போ ரிதன்யாவுக்கு வருவோம். எவ்வளவோ புத்திசாலியாக, திறமை மிகுந்தவளாக தெளிவாக இருந்த பெண் தன் கணவனிடம் ஒரு அப் நார்மாலிட்டியை உணர்ந்ததும் தன் தாயிடம் சொல்லி இருக்க வேண்டும். அதில் தயக்கம் என்றால் தன் தாயிடம் தயக்கமின்றி பேசக் கூடிய ஒரு தோழியிடம் சொல்லி பெற்றவர்களுக்குத் தெரிவித்திருக்க வேண்டும். பெரியவர்கள் பக்குவமாக கையாண்டு அந்த சித்திரவதையை முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாம். முதலில் உடல் ரீதியான உழைச்சலை முடிவுக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும்.
இரண்டாவது தான் இறப்பதற்கு ஒரு நாள் முன்பு தான் இந்த உடல் சித்திரவதையைத் தன்னிடம் சொன்னதாகத் தாய் சொல்கிறார். அதன் பின் சனிக்கிழமை கோவிலுக்குத் தனியாக பிள்ளையை
அனுப்பி இருக்கக் கூடாது.
மூன்றாவதாக கொஞ்ச நாள் முன்னதாகவே தன் தம்பியிடம் வெளிப்படையாகச் சொல்லி இருக்கிறாள். அவரும் ஆஸ்திரேலியா வந்து வேலை பார்க்கலாம் என்று சொல்லத் தன் resume அவருக்கு அனுப்பி இருக்கிறாள். ஆனால் இந்தப் பெண்கள் செய்யும் தவறு சொன்ன கையோட யாரிடமும் சொல்லி விடாதே என வாயை அடைத்து விடுவது.
பெட் ரூமில் பெண்ணின் மாமியார் காமரா வைத்திருந்ததாகச் சொல்வதெல்லாம் எனக்கு முழுமையான உண்மையாகத் தோன்றவில்லை.
கடைசி கடைசியாக ஒன்று பணம் என்பது தேவை தான். ஆனால அது ஒன்று மட்டுமே தேவையான ஒன்றல்ல. அந்தப் பகுதி மக்களின் பேச்சு காசு, பணம், வசதி என்பதைப பற்றி மட்டுமே சுற்றி வருகிறது. அது எல்லாவற்றையும் விட முக்கியமானது உயிர். மற்றவை போனால் கிடைக்கும். ஆனால் உயிர் போனால் போனது தான்.
இனியாவது சிந்தியுங்கள் தோழமைகளே!!
02 July, 2025
நாவலின் பெயர். : இடிந்த கோபுரம்.
ஆசிரியர். : கு. ராஜவேலு.
LKM Publications.
விலை : ரூ 80/-
முதல் பதிப்பு ஜூன் 2006.
கதை தன்னிலையில் "நான்" என்று சொல்லப்படுகிறது. திடீரென்று வீட்டு வாசலில் முழுவதும் மழையில் நனைந்த ஒரு இள மங்கை நிற்கிறாள். கட்டாயப்படுத்தி வீட்டில் தங்க வைத்தால் மறு நாள் விடியற்காலையிலேயே எழுந்து போய் கடலில் குதித்து தற்கொலை செய்யப் பார்க்கிறாள். கதையின் ஆரம்பமே ஆவலைத் தூண்டும் விதமாய் இருக்கிறது.
அந்தப் பெண்ணின் பெயர் பொற்கொடி. மடத்துக்குச் சென்ற தம்பி சேவற்கொடியோன் தான் திரும்பி வருவதாகத் தந்தி கொடுத்திருக்கிறான். கதை நிச்சயமாக நாம் எதிர்பார்க்காத திசையில் தான் பயணிக்கப் போகிறது என்ற நம்பிக்கையைத் தருகிறது.
சேவற்கொடியோனுக்கு பொற்கொடியை கல்லூரியில் பார்த்தது போல் இருக்கிறது. ஆனால் அவள் அது தான் இல்லை என மறுக்கிறாள். அவனுக்கு புண்ணிய கோடி என்ற ஒரு கல்லூரித் தோழன். அவனும் தானும் கல்லூரியில் பார்த்ததாக உறுதி செய்கிறான். ஆனால் பொற்கொடி தனக்கு அவர்கள் இருவரையும் தெரியாது என்று உறுதியாக மறுத்து விடுகிறாள்.
பொற்கொடி மேல் ஈடுபாடு வந்து அந்த "நான்" தன் மனத்தை வெளிப்படுத்தும் போது "நான் என்றும் உங்களுடைய தூய உள்ளம் படைத்த அடிமை. குடியின் பெருமைக்கு மாசு ஏற்படாமல் உங்களுக்கு குற்றேவல் செய்வேன்" என்கிறாள். இது பலருக்கு வாய்ப்பதில்லை. தனக்குப் பிடித்த ஒருவரின் குடும்பத்தில் தன்னால் பிரச்னை வரும் போலிருந்தால் முருமையாக விலகத் தான் தோன்றுகிறது. இந்த ஒரு இடத்தைத தவிர வேற எங்கிலும் மனத் தடுமாற்றம் இல்லை. பொற்கொடி அக் குடும்பத்தின் உறுப்பினர் போலத் தான் நடமாடி வருகிறாள். பின் அந்த நிகழ்வுக்கான அவசியம் புரியவில்லை.
"சில எண்ணங்கள் மாந்தரைப் பழி வாங்கி விடும். அதனால் தான் எண்ணங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று பெரியோர்கள் கூறுகிறார்கள். அது முடியாதவர்கள் எதிர் மறை சிந்தனை உடையோரிடமிருந்து விலகியே இருக்க வேண்டும்.
இவர்கள் இல்லாமல் அறவாழி, மணவாளர், பாரதி என்று மூன்று கதாபாத்திரங்கள் உண்டு. மணவாளரின் மனைவி பாரதி. பாரதியின் கல்லூரிப் பேராசிரியர் அறவாழி. கயவன். இவரது பேச்சில் மயங்கி பாரதி தன் கணவரையும் கைக் குழந்தையையும் விட்டு அறவாழியின் பின் செல்கிறாள்.
அவள் நகைகள், பணத்தை பிடிங்கிக் கொண்டு தனிமையில் விடும்போது தான் அவன் கயமை எண்ணம் புரிந்து திருந்தி திரும்பி தன் மேன்மை மிகு கணவரிடமே வந்து சேர்கிறாள். அப் போது இவ்வாறு சொல்கிறாள். " கல்லூரியில் எங்களுக்கு விளங்காத பாடப் பகுதிகளை இப்படித் தான் சொல்லால் மூடி வைத்து மூடுவார். அவருக்கும் அது விளங்காத பகுதி என்பது எங்களுக்குத் தெரியும். அதே நிலையில் தான் இப்பவும் பேசினார். நான் ஏமாறத் தயாராக இல்லை"
கல்லூரியில் அறவாழி மதிப்பெண்ணில் கை வைத்து விடுவேன் என்று பாரதியை அச்சுறுத்தியதும் அல்லாமல் அவள் மூலம் பிற மாணவிகளையும் வரவழைத்து பாழ்படுத்தி விடுவார். அந்த வலையில் சிக்காமல் தான் தப்பித்த பொற்கொடி ஒரு மழை நாளில் வாசலில் வந்து நிற்பாள்.
எனக்கு கொஞ்ச வருடங்கள் முன்பு மதுரையில் ஒரு பேராசிரியர் இதே போல் மாணவிகளைப் பயன்படுத்தியதற்காக சிறை சென்றது ஞாபகம் வந்தது. கல்வித் துறையில் கயமை காலம் காலமாக இப்படி நடந்து கொண்டு தான் இருக்கிறது போலும்.
ரசித்த பகுதிகள்:
-> " நீரிலே நித்திலத்தின் ஒளிகாட்டி நீந்துகிற மீனைப் போல எண்ணற்ற பருந்துகள் எழிற் கோல வானிலே மிக எளிதாக மிதந்து கொண்டு இருந்தன"
-> " அங்கே எண்ணற்ற விண் மீன்கள் கார்வானை வைரம் பரப்பி வைத்த நீல விதானமாக எழில் செய்த வண்ணம் ஒளி வீசிக் கொண்டிருந்தன."
-> " இந்த உண்மை தான் குழந்தையைப் போல எவ்வளவு மென்மையானது. எவ்வளவு விரைவில் கூம்பி விடுகிறது. பின் எத்தனைச் சடுதியில் மலர்ந்தும் விடுகிறது."
இந்த ஆசிரியர் எழுதியதில் நான் வாசித்த முதல் நாவல். மனதைக் கவர்ந்தது.
01 July, 2025
58 வயதில் விவாகரத்துப் பெற்ற ஒரு பெண்ணைப் பற்றி சொல்றேன்னு நேற்று எழுதி இருந்தேன். அந்த கதை இது தான். முப்பது வருடங்களுக்கு முந்தைய கதை.
அப்போ நான் முருகன்குறிச்சியில் Customer Service Centre ல் பணி புரிந்து கொண்டு இருந்தேன். ஒரு வயதான பெண் லேன்ட் லைன் வாங்க வந்திருந்தாங்க. Application fill up பண்ணிக் கொடுத்தாங்க. அதில் கணவர் பெயர் என்ற காலம் எழுதாமல் இருந்தது. நான் அதை நிரப்பச் சொல்லும் போது "வேண்டாம்மா" என்றார்கள். நான் "இல்லையா" என்ற போது அதை நிரப்பாமலே விட்டிடலாம்னு சொன்னாங்க. நான் அதற்கு மேல் வற்புறுத்தவில்லை.
மதியம் மறுபடி வந்தாங்க. அப்போ கூட்டம் குறைவா இருந்தது. " காலையில கூட்டமா இருந்ததால சொல்லல. உன்னிடம் சொல்லணும் போல இருந்தது. அதான் வந்தேன்னாங்க. அப்போ நான் இப்படி வயதானவர்களின் pet ஆக இருந்தேன். என்னிடம் கொஞ்ச நேரம் பேசிட்டு போகலாம்னு வர்ரவங்க உண்டு. " நீ பேசுறது என் இறந்து போன பேத்தி பேசுற மாதிரியே இருக்குன்னு" கண் கலங்க சொல்லிட்டு போன வயதானவர் உண்டு. இன்னும் பலப்பல உணர்வு பூர்வமான அனுபவங்கள் உண்டு.
சரி விஷயத்துக்கு வருவோம். வந்த பெண்மணி ஒரு ஐந்து வரை உள்ள பள்ளியின் தலைமையாசிரியை. திருமணமாகி இருந்தது. குழந்தைகள் இல்லை. கணவர் நெல்லையில இருந்து தென்காசி போய் பணி புரிந்து வந்திருக்கிறார். இவருக்கு அங்கே ஒரு பெண்ணோடு தொடர்பு இருந்ததும், அவர்கள் கணவன் மனைவியாக வாழ்ந்து வருவதும் இவருக்குத் தெரிந்திருக்கிறது.
அவரை விட்டு பிரிந்து விட வேண்டும் என்று வேகம் வந்திருக்கிறது. தன் பள்ளி மாணவிகள் தன் மேல் மிகுந்த மரியாதை வைத்து தன்னை ஒரு ரோல் மாடலாக பார்க்கிறார்கள். தான் விவாகரத்து செய்தால் ஒரு தவறான முன்னுதாரணம் ஆகி விடுவோம் என்று தான் ஓய்வு பெறும் வரை பல்லைக் கடித்துக் கொண்டு பொருத்திருந்திருக்கிறார்கள்.
ஓய்வு பெற்றதும் விவாகரத்துக்கு விண்ணப்பித்து வாங்கி விட்டார்கள். "இவ்வளவு நாள் பொறுத்து விட்டீர்கள். இப்போ போய் ஏன்மா " னு நான் கேட்டேன். " அவர் எனக்குச் செய்தது மிகப் பெரிய துரோகம். என்னுடைய கடின உழைப்பில் சேர்த்த பணம் அவருக்குக் கிடைக்கக் கூடாது. It is my hard earned money.
சட்டப்படி அவரை விட்டு நான் பிரிந்தால் தான் இது நடக்கும். அதனால் தான் விவாகரத்து வாங்கினேன் என்றார்கள்.
இவ்வளவு பொறுமையாகவும் நிதானமாகவும் ஆனால் அதே சமயம் தன் தன்மானத்தைக் காக்கும் விதமாகவும் நடக்கும் பொறுமை இந்தக் கால பிள்ளைகளுக்கு உண்டா?
நம் வீட்டில் இருக்கும் வரை தேவதைகளாக வளர்த்து விடுகிறோம். திருமணமான தொடக்கத்தில் எல்லா வீடுகளிலும் பிரச்னை வரும். அதை நம் பிள்ளைகள் சொல்லும் போது உணர்ச்சி வசப்படாமல் " நாங்கள் இருக்கிறோம். என்ன நடந்தாலும் பயப்படாதே" என்ற தைர்யத்தை பெற்றவர்கள் கொடுக்க வேண்டும்.
அதுவே அவர்களை மரண முடிவிலிருந்து மாற்றி விடும். பெற்ற குழந்தைகள் ஒரு முடிவைத் தேட நாமே வழி வகுக்கக் கூடாது. எவ்வளவு தான் பேசினாலும் விதி என்பது எப்படியோ அப்படி நடந்து விடும்.
நாமும் சில காலம் வருந்தி விட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போயிடுவோம். என்னவோ போங்க.
#அவினாசிப் பெண்ணின் மரண துயரம்.
போ.து.ம்.ங்.க
சமீபத்தில் பர்வீன் சுல்தானா பேசிய ஒரு வீடியோ பார்த்தேன். 57 வயதில் விவாகரத்துக் கேட்ட ஒரு பெண்ணைப் பற்றிப் பேசினார். நீதிபதி பல காரணங்களைச் சொல்லிக் கேட்கிறார். இந்தப் பெண் எந்த வித கெட்ட பழக்கங்களும் தன் கணவருக்கு இல்லைன்னு சொல்றாள். விவாகரத்துக்கு சொல்லும் காரணம் "24 மணி்நேரமும் அவருக்கு சமைத்துப் போடுவதையே சிந்தனையில் நிறைத்திருக்க வேண்டி இருக்கிறது. போதும்ங்க." என்பது தான். இதற்கு சில பெண்களே கூட "சமைக்கிறத தவிர ஒரு பெண்ணுக்கு வேறென்ன வேலைன்னு" கேட்கலாம்.
அவள் தனி உயிர். அவளுக்கென ஒரு வாழ்க்கை இருக்கிறது. அதை அனுபவிக்க அவளுக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்கிக் கொடுங்கள்.
இப்போ திருமணமான 78 நாளில் ஒரு பெண் " போதும்" என்பதை உணர்ந்து தற்கொலை தான் வழி என முடிவெடுத்திருக்கிறாள். ( எந்தப் பிரச்னைக்கும் தற்கொலை ஒரு தீர்வல்ல). போதும்ப்பா இந்த வாழ்க்கை என்னால முடியலைன்னு அவள் பேசிய ஒரு ஆடியோ வலம் வருகிறது. பறி கொடுத்த பின் புலம்பி என்ன பயன்.
எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி ஓய்வு பெற்ற பின் விவாகரத்துக்கு நீதி மன்றம் நாடினார். அவரைப் பற்றி நாளை எழுதுகிறேன்.
அதனால் "போதும்" என்ற உணர்வு ஒரு பெண்ணுக்கு எதனால், யாரால் எப்பொழுது வரும் என்பதை வரையறை செய்ய முடியாது.
குட்டக் குட்ட குனிகிறாள் என்பதாலே ஒருவரை வலுவற்றவர் என நினைக்காதீர்கள். உங்கள் மேல் உள்ள பாசத்தாலோ, தன் பெற்றவர் மேல் உள்ள மரியாதையாலோ, சமுதாய அழுத்தத்தாலோ கூட குனிந்து இருக்கலாம். " போ.து.ம்" என்று தோணும் போது வெடித்துச் சிதறுவாள்.
Subscribe to:
Posts (Atom)