25 July, 2025
Human error என்று சொல்வது உண்டு் .
அந்த மனிதத் தவறுக்கு ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு கனம் இருக்கும். உதாரணமாக ஒரு நிறுவனத்தில் கணக்கெழுதுபவர் 300 க்குப் பதிலாக 3000 என்று எழுதி விட்டார் என்றால் அது human error. அதை நாள் இறுதியில் கணக்கைச் சரி பார்க்கும் போது கண்டுபிடித்து விடலாம். சரி செய்து விடலாம்.
அதுவே ஒரு வங்கித் தொழிலாளி மூன்று நூறு ரூபாய்த் தாள்கொடுப்பதற்குப் பதிலாக ஒன்றைக் கூடுதலாகக் கொடுத்து விட்டால் நாளின் இறுதியில் கணக்கைச் சரி செய்யும் பொழுது கையிலிருந்து போட வேண்டி வரும். நூறு ரூபாய்த் தாளுக்குப் பதிலாக ஐநூறு ரூபாய்த் தாள் என்றால் தவற் றின் கனம் இன்னும் கூடுதல் .
ஒரு நகைக் கடையில் வியாபாரம் முடிந்து மிச்சமிருக்கும் நகைகளை சரி பார்க்கும் போது ஒருஇடத்தில் வைக்க வேண்டிய பொருள் வேறொரு இடத்தில் வைத்து விட்டால் அது human error. ஒன்றில் குறையும் அதுவே மற்றொன்றில் கூடுதலாய் இருக்கும். தவறு கண்டு பிடிக்கப் பட்டு விட்டால் சரி செய்து விடலாம்.
கம்ப்யூட்டர் , பயன்பாட்டில் வரும் முன்பு எங்கள் அலுவலகத்தில் ஒவ்வொரு தொலைபேசி எண்ணுக்கும் ஒரு ஃபைல் வைத்திருப்போம். அவை நூறு நூறாக அடுக்கப்பட்டு இருக்கும். லட்சக்கணக்கில் இருக்கும். ஒவ்வொரு நாளின் மாலையிலும் வேலை முடிந்த கோப்புகளை அந்தக் கட்டுக்குள் சரியாகக் கொண்டு சேர்க்க வேண்டும். அதைத் தவறுதலாக வேறு கட்டில் வைத்து விட்டால் தேவைப்படும் நேரத்தில் அதை எடுப்பதற்குள் தாவு தீர்ந்து விடும்.
அதைப் போலவே கார் ஓட்டும் போது கவனக்குறைவாக ப்ரேக் பிடிக்க வேண்டிய இடத்தில் ஆக்ஸிலரேட்டரைக் கொடுத்து விட்டால் விபத்து நிகழ்ந்து விடும். அது நடக்கும் இடத்தில் ஒரு மனிதன் நின்று விட்டால் உயிர்ப்பலி நேர்ந்து விடும்.
ரயில்வே லெவல் கிராஸிங்கில் கதவு மூட வேண்டிய நேரத்தில் திறந்தே வைத்திருந்து விட்டால் அந்த மனிதத் தவறு , பல உயிரிழப்புகளுக்குக் காரணமாகும்.
விமானம் ஓட்டுபவர் செய்யும் ஒரு சிறு தவறு கூட பல உயிர்கள் போக காரணமாகிப் போகும்.
எங்கள் தொலைபேசி அலுவலகங்களில் , அல்லது கேபிள் சம்பந்தப்பட்ட வேலைகளிலோ, வயர்கள் அடித்து இணைக்கும் இடங்களிலோ சில சமயம் இந்த மனிதத் தவறுகள் நடக்கலாம். நமக்கு அந்தத் தவறைச் செய்து விட்டேன் என்று வெளிப்படையாகச் சொல்லும் திடம் வேண்டும். தவற்றுக்கான தண்டனையை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் வேண்டும்.
செய்தத் தவறைச் சொல்லி விட்டால் அதைச் சரி செய்வது சுலபமாக இருக்கும். அதுவே நாம் சொன்னால் நம்மைக் குறைவாக நினைப்பார்களே என்றோ தண்டனையின் கடுமையை நினைத்தோ செய்த தவற்றை மறைத்து விட்டால் அதைக் கண்டு பிடித்துச் சரி செய்யப் பல மணி நேரங்கள் ஆகி விடும். சில சமயம் கண்டு பிடிக்கவே முடியாமல் கூட போய் விடும்.
இப்பொழுது நான் சொல்ல வரும் தவற்றின் கனம் புரிந்திருக்கும். ஒவ்வொருவரும் அவர் தம் பணியை மிகுந்த கவனத்தோடு செய்யப் பழகி விட்டால் இழப்புகளை குறைத்து விடலாம். முக்கியமாக உயிரிழப்புகளை.
ஏதோ சொல்லத் தோணுச்சுது. சொல்லிட்டேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!