Bio Data !!

17 July, 2025

# ஆண் சமையல்

# ஆண் சமையல். நான் நன்கு அறிந்த ஆண்களில் முதலாவது என் தந்தை. அந்தக் கால மனிதர். இப்போ இருந்திருந்தா 91 வயது இருக்கும். அம்மா வேலைக்குப் போகும் ஒரு சில பெண்களில் ஒருவராய் இருந்ததால், வீட்டில் வேலை செய்ய ஒரு பெண்மணி எப்பவும் இருப்பாங்க. அவங்க சமைச்சு கிட்சனில் வச்சுட்டு போறதை அம்மா கிளம்பறதுக்கு முன்னால டைனிங் டேபிள்ல எடுத்து வச்சுட்டு போகணும். அப்பா கல்லூரியில இருந்து மதியம் வீட்டுக்கு வந்து சாப்பிடுவாங்க. ஏதோ அவசரத்துல ஒண்ணை எடுத்து வைக்க மறந்தாச்சுன்னா அவ்வளவு தான். என்ன எடுத்து வைச்சிருக்காங்களோ அதை மட்டும் சாப்பிட்டுட்டு போயிடுவாங்க. சாப்பிட்ட தட்டிலேயே கை கழுவும் வழக்கம். கிட்சனுக்குள்ள ஆண் வருவதென்பது ரொம்ப மதிப்பில்லாத ஒரு விஷயம். அம்மா என்னிடம் சொல்வாங்க. "கைப்பிள்ள அழுதாலும் இடுப்புல இடுக்கிக்கிட்டுத் தான் பால் ஆத்தணும். " அந்தக் காலத்தில் பெண் சம்பாதித்தாலும் அடுப்படியின் அத்தனை பொறுப்பும் அவளுக்குரியது மட்டுமே. அடுத்து நான் அறிந்த ஆண் என் கணவர். ரொம்ப காலம் வரை அடுப்படிக்குள் வருவது அவமானம் என நினைத்தவர் தான். நான் மகளுடன் ராஜஸ்தான் போகும் போது , ஒரு இடத்தில் சாப்பாடு கொண்டு வந்து கொடுக்க ஏற்பாடு செய்திருந்தேன். ஆனால் அதைத் தொடர்ந்து சாப்பிட்டால் வயிறு கெட்டுப் போகும் என்று போன் மூலமே எப்படி சமையல் செய்வது என்பதைக் கேட்டறிந்து செய்து பழகினார். சூப்பரா சமைச்சேன்னு சொல்லுவார். என் பிள்ளைகள் " அம்மாவுக்கு சமைச்சு கொடுங்கப்பா. அவங்களும் சூப்பர்னு சொல்லட்டும்" னு சொல்வாங்க. ஒரே ஒரு முறை செய்து கொடுத்தார். சூப்பராத் தான் இருந்தது. ஆனாலும் சமையல் பெண்ணின் வேலை. அத்தியாவசியம் என்றால் மட்டும் ஆண் இறங்கலாம் என்ற அளவில் மனப்பான்மை மாறி இருந்தது. இப்போ ஓய்வு பெற்ற பிறகு ரொம்பவே உதவி செய்கிறார். நான் போதும் உடம்பைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள் என்று சொல்லும் அளவுக்கு. அடுத்த ஆண் மருமகன். அடுத்த தலைமுறை அல்லவா? வீட்டுக் காரியங்களில் ரொம்ப உதவி. விரும்பிச் செய்வார். அது ரொம்ப முக்கியம் அல்லவா? குடும்பம், மனைவி, மக்களுக்குத் தான் முதலிடம். மற்றவை எல்லாம் அதற்குப் பின் தான். அவங்க அம்மா ரொம்ப அழகா வளர்ந்திருக்காங்க. என் மகளிடம் சொல்வேன் " உன் மகனையும் இதே போல் அனுசரணையான பையனாக வளர்த்து விடு. உனக்கு வரும் மருமகள் உன்னைக் கொண்டாடுவாள் என்பேன். நாலாவதா ஒரு ஆண். என் பேரன். ஞாயிற்றுக் கிழமைகளில் எல்லோருக்கும் லெமன் ஜூஸ் போட்டுக் கொடுப்பான். அம்மா உடம்புக்கு சரியில்லைன்னா தேவையான வேலைகளைச் செய்து கொடுப்பான். பான் கேக், கேக், ஐஸ்கிரீம் என்ற வகைகளை செய்து பழகி இருக்கிறான். இன்னும் கொஞ்சம் வளர்ந்தால் முழு சமையலும் சொல்லிக் கொடுத்து விடலாம். தலைமுறை மாற மாற அடுப்படி வேலை என்பது ஆணுக்கானதல்ல என்ற மனப்பான்மை கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து போவதைப் பார்க்கிறோம். நல்ல சகுனம் தான். அது பெண்ணுக்கானதல்ல என்ற நிலைக்குப் போய் விடக் கூடாது. எப்பவும் ஒரு பாலன்ஸ்டு நிலை தான் நிரந்தரமாய் நிற்கும். மற்றவை எல்லாம் மாறுதலுக்கு உட்பட்டவை.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!