Bio Data !!

02 July, 2025

நாவலின் பெயர். : இடிந்த கோபுரம். ஆசிரியர். : கு. ராஜவேலு. LKM Publications. விலை : ரூ 80/- முதல் பதிப்பு ஜூன் 2006. கதை தன்னிலையில் "நான்" என்று சொல்லப்படுகிறது. திடீரென்று வீட்டு வாசலில் முழுவதும் மழையில் நனைந்த ஒரு இள மங்கை நிற்கிறாள். கட்டாயப்படுத்தி வீட்டில் தங்க வைத்தால் மறு நாள் விடியற்காலையிலேயே எழுந்து போய் கடலில் குதித்து தற்கொலை செய்யப் பார்க்கிறாள். கதையின் ஆரம்பமே ஆவலைத் தூண்டும் விதமாய் இருக்கிறது. அந்தப் பெண்ணின் பெயர் பொற்கொடி. மடத்துக்குச் சென்ற தம்பி சேவற்கொடியோன் தான் திரும்பி வருவதாகத் தந்தி கொடுத்திருக்கிறான். கதை நிச்சயமாக நாம் எதிர்பார்க்காத திசையில் தான் பயணிக்கப் போகிறது என்ற நம்பிக்கையைத் தருகிறது. சேவற்கொடியோனுக்கு பொற்கொடியை கல்லூரியில் பார்த்தது போல் இருக்கிறது. ஆனால் அவள் அது தான் இல்லை என மறுக்கிறாள். அவனுக்கு புண்ணிய கோடி என்ற ஒரு கல்லூரித் தோழன். அவனும் தானும் கல்லூரியில் பார்த்ததாக உறுதி செய்கிறான். ஆனால் பொற்கொடி தனக்கு அவர்கள் இருவரையும் தெரியாது என்று உறுதியாக மறுத்து விடுகிறாள். பொற்கொடி மேல் ஈடுபாடு வந்து அந்த "நான்" தன் மனத்தை வெளிப்படுத்தும் போது "நான் என்றும் உங்களுடைய தூய உள்ளம் படைத்த அடிமை. குடியின் பெருமைக்கு மாசு ஏற்படாமல் உங்களுக்கு குற்றேவல் செய்வேன்" என்கிறாள். இது பலருக்கு வாய்ப்பதில்லை. தனக்குப் பிடித்த ஒருவரின் குடும்பத்தில் தன்னால் பிரச்னை வரும் போலிருந்தால் முருமையாக விலகத் தான் தோன்றுகிறது. இந்த ஒரு இடத்தைத தவிர வேற எங்கிலும் மனத் தடுமாற்றம் இல்லை. பொற்கொடி அக் குடும்பத்தின் உறுப்பினர் போலத் தான் நடமாடி வருகிறாள். பின் அந்த நிகழ்வுக்கான அவசியம் புரியவில்லை. "சில எண்ணங்கள் மாந்தரைப் பழி வாங்கி விடும். அதனால் தான் எண்ணங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று பெரியோர்கள் கூறுகிறார்கள். அது முடியாதவர்கள் எதிர் மறை சிந்தனை உடையோரிடமிருந்து விலகியே இருக்க வேண்டும். இவர்கள் இல்லாமல் அறவாழி, மணவாளர், பாரதி என்று மூன்று கதாபாத்திரங்கள் உண்டு. மணவாளரின் மனைவி பாரதி. பாரதியின் கல்லூரிப் பேராசிரியர் அறவாழி. கயவன். இவரது பேச்சில் மயங்கி பாரதி தன் கணவரையும் கைக் குழந்தையையும் விட்டு அறவாழியின் பின் செல்கிறாள். அவள் நகைகள், பணத்தை பிடிங்கிக் கொண்டு தனிமையில் விடும்போது தான் அவன் கயமை எண்ணம் புரிந்து திருந்தி திரும்பி தன் மேன்மை மிகு கணவரிடமே வந்து சேர்கிறாள். அப் போது இவ்வாறு சொல்கிறாள். " கல்லூரியில் எங்களுக்கு விளங்காத பாடப் பகுதிகளை இப்படித் தான் சொல்லால் மூடி வைத்து மூடுவார். அவருக்கும் அது விளங்காத பகுதி என்பது எங்களுக்குத் தெரியும். அதே நிலையில் தான் இப்பவும் பேசினார். நான் ஏமாறத் தயாராக இல்லை" கல்லூரியில் அறவாழி மதிப்பெண்ணில் கை வைத்து விடுவேன் என்று பாரதியை அச்சுறுத்தியதும் அல்லாமல் அவள் மூலம் பிற மாணவிகளையும் வரவழைத்து பாழ்படுத்தி விடுவார். அந்த வலையில் சிக்காமல் தான் தப்பித்த பொற்கொடி ஒரு மழை நாளில் வாசலில் வந்து நிற்பாள். எனக்கு கொஞ்ச வருடங்கள் முன்பு மதுரையில் ஒரு பேராசிரியர் இதே போல் மாணவிகளைப் பயன்படுத்தியதற்காக சிறை சென்றது ஞாபகம் வந்தது. கல்வித் துறையில் கயமை காலம் காலமாக இப்படி நடந்து கொண்டு தான் இருக்கிறது போலும். ரசித்த பகுதிகள்: -> " நீரிலே நித்திலத்தின் ஒளிகாட்டி நீந்துகிற மீனைப் போல எண்ணற்ற பருந்துகள் எழிற் கோல வானிலே மிக எளிதாக மிதந்து கொண்டு இருந்தன" -> " அங்கே எண்ணற்ற விண் மீன்கள் கார்வானை வைரம் பரப்பி வைத்த நீல விதானமாக எழில் செய்த வண்ணம் ஒளி வீசிக் கொண்டிருந்தன." -> " இந்த உண்மை தான் குழந்தையைப் போல எவ்வளவு மென்மையானது. எவ்வளவு விரைவில் கூம்பி விடுகிறது. பின் எத்தனைச் சடுதியில் மலர்ந்தும் விடுகிறது." இந்த ஆசிரியர் எழுதியதில் நான் வாசித்த முதல் நாவல். மனதைக் கவர்ந்தது.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!