07 July, 2025
# ரிதன்யா அவினாசி மரணம்
# "ரிதன்யா"
அவங்க அம்மா நாங்க அவளை ரித்துக் குட்டின்னு தான் கூப்பிடுவோம்னு சொன்னாங்க. நான் இன்று வரை மூத்த பெண்ணை ஜெனிம்மான்னும், இளையவளை சிந்து குட்டின்னும் தான் கூப்பிடுவேன். அப்படித் தான் அருமை அருமையா பிள்ளைகளை வளர்த்துறோம்.
ஆனால் நான் ரிதன்யாவைப் பற்றி எழுதி ஓய்ந்து விட்டேன். அதனால் அவளோடு தொடர்புடைய "கவினை" ப்பற்றித் தான் சொல்லப் போகிறேன்.
இத்தனைக்குப் பின்னும் கவினை " மாப்பிள்ளை" என்றே குறிப்பிடும் ரிதன்யாவின் தந்தை மேல் பரிதாபமும் மரியாதையுமே எழுகிறது.
நான் சொல்வது ஒரு சிலருக்குக் கோபம் வரலாம். மாட்டிக் கொண்டதால் கவின் ஒரு அயோக்கியனாகத் தெரிகிறான். அவனைப் போன்ற மன நிலையில் இன்னும் சில இளைஞர்கள் சமுதாயத்தில் இருக்கலாம். அந்த எண்ணிக்கைப் போகப் போக அதிகரிக்கக் கூடச் செய்யலாம். அப்படித் தான் காலம் போய்க் கொண்டிருக்கிறது. எச்சரிக்கும் பெரியவர்களை பூமர் என்று சொல்லி எளிதாகக் கடந்து போகிறோம்.
எங்கள் காலத்தில் கணவனைத் தன்னோடு இருத்திக் கொள்வதற்கு " பகலில் கணவனுக்குத் தாயாகவும் இரவில் தாசியாகவும் இரு" என்று சொல்வதுண்டு. ஆனால் அந்த காலத்தில் கூட தாசி போன்று நடக்க விரும்பிய மனைவியிடம் எதிர்பார்க்காத பல விஷயங்கள் இன்றைய இளைஞர்கள் மனைவியிடம் எதிர்பார்க்கிறார்கள். தான் இணையத்தின் மூலம் அறித்து கொண்ட அரை குறை அறிவைக் கொண்டு பரிசோதிக்க ஒரு பொம்மை கிடைத்ததென்று மகிழ்கிறார்கள்.
ஒன்று அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். உன்னைப் போலவே மனநிலையும் எதிர்பார்ப்பும் உள்ள பெண் உனக்கு ஈடு கொடுக்கலாம். ஆனால் அது அவளுக்கு பல அனுபவங்களுக்குப் பின் கிடைத்திருக்கும். அது உனக்கு ஓகேன்னா அப்படிப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்து கொள்.
அப்படி அல்லாமல் மனம் கூட கறைபடாத ரோஜாவைக் கொண்டு வந்து உனக்குப் பிடித்தபடி பயன்படுத்தி கசக்கி எறியாதே.
இப்போ ரிதன்யாவுக்கு வருவோம். எவ்வளவோ புத்திசாலியாக, திறமை மிகுந்தவளாக தெளிவாக இருந்த பெண் தன் கணவனிடம் ஒரு அப் நார்மாலிட்டியை உணர்ந்ததும் தன் தாயிடம் சொல்லி இருக்க வேண்டும். அதில் தயக்கம் என்றால் தன் தாயிடம் தயக்கமின்றி பேசக் கூடிய ஒரு தோழியிடம் சொல்லி பெற்றவர்களுக்குத் தெரிவித்திருக்க வேண்டும். பெரியவர்கள் பக்குவமாக கையாண்டு அந்த சித்திரவதையை முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாம். முதலில் உடல் ரீதியான உழைச்சலை முடிவுக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும்.
இரண்டாவது தான் இறப்பதற்கு ஒரு நாள் முன்பு தான் இந்த உடல் சித்திரவதையைத் தன்னிடம் சொன்னதாகத் தாய் சொல்கிறார். அதன் பின் சனிக்கிழமை கோவிலுக்குத் தனியாக பிள்ளையை
அனுப்பி இருக்கக் கூடாது.
மூன்றாவதாக கொஞ்ச நாள் முன்னதாகவே தன் தம்பியிடம் வெளிப்படையாகச் சொல்லி இருக்கிறாள். அவரும் ஆஸ்திரேலியா வந்து வேலை பார்க்கலாம் என்று சொல்லத் தன் resume அவருக்கு அனுப்பி இருக்கிறாள். ஆனால் இந்தப் பெண்கள் செய்யும் தவறு சொன்ன கையோட யாரிடமும் சொல்லி விடாதே என வாயை அடைத்து விடுவது.
பெட் ரூமில் பெண்ணின் மாமியார் காமரா வைத்திருந்ததாகச் சொல்வதெல்லாம் எனக்கு முழுமையான உண்மையாகத் தோன்றவில்லை.
கடைசி கடைசியாக ஒன்று பணம் என்பது தேவை தான். ஆனால அது ஒன்று மட்டுமே தேவையான ஒன்றல்ல. அந்தப் பகுதி மக்களின் பேச்சு காசு, பணம், வசதி என்பதைப பற்றி மட்டுமே சுற்றி வருகிறது. அது எல்லாவற்றையும் விட முக்கியமானது உயிர். மற்றவை போனால் கிடைக்கும். ஆனால் உயிர் போனால் போனது தான்.
இனியாவது சிந்தியுங்கள் தோழமைகளே!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!