Bio Data !!

26 July, 2025

DNA பட விமர்சனம்

#DNA பட விமர்சனம். OTT JIO Hotstar. இயக்குநர் : நெல்சன் வெங்கடேசன். இசை : ஜிப்ரான். முக்கிய கதா பாத்திரங்கள் : அதர்வா, நிமிஷா சஞ்சயன், மற்றும் ரமேஷ் திலக், சரிதாவின் தங்கை விஜி சந்திரசேகர், பிக் பாஸ் டைட்டில் வின்னர் ரித்விகா, வில்லனாக வரும் முகமது ஸீஷன், போஸ் வெங்கட், சேத்தன், பாலாஜி சக்திவேல். கதை ஒரு முக்கியமான பிரச்னையை எடுத்து பேசுகிறது. முன் ஒரு காலத்தில் அரசு மருத்துவமனைகளில் இப்படி நடக்கிறது எனக் கேள்விப் பட்டு இருக்கிறோம். இங்கே தனியார் மருத்துவமனையில் நடப்பதாகக் காட்டி இருக்கிறார்கள். பிறந்த குழந்தைத் திருட்டு தான் அந்தப் பிரச்னை. அதைச் செய்வதாக ஒரு வயதான பெண்மணியைக் காட்டுகிறார்கள். கடத்துவதற்கு எளிதாக இரண்டு பை நிறைய தின்பண்டங்களை நிறைத்து விற்பதற்கு கொண்டு வருவதாகக் காட்டுகிறார்கள். ஒரு நாள் இல்லை ஒரு நாள் குழந்தைகள் அழுது காட்டிக் கொடுத்து விடாதா? ஒரு இடத்தில் குழந்தைக்கு ஏதோ சொட்டு மருந்து கொடுப்பது போல் காட்டி இருக்கிறார்கள். ஆனால் ஜன்னல் வழியாகத் தூக்கும் போது அது கொஞ்சமாவது சிணுங்குவது போல் காட்டி இருக்கலாம்.இது போல் பல இடங்களில் தவற விட்டிருப்பதற்கு படத்தின் நீளம் அதிகமாகி விடும் என்பது காரணமா? ஆனாலும் மனதை ஒரு உலுக்கு உலுக்கித் தான் போகிறது. அதற்கு மனப்பிறழ்வை பார்டரில் நழுவ விட்ட பெண்ணாக , அதர்வாவின் மனைவியாக , துடுக்கான குடும்பப் பெண்ணாக நிமிஷா தன் எடையை வெகுவாய் குறைத்து , கலக்கி இருக்கிறார். அழகழகான புடவைகளில் பாந்தமாக வருகிறார். அதர்வா காதல் தோல்வியால் போதைப் பழக்கத்தில் சிக்கி சீரழிந்து குடும்பத்தாரால் வெறுக்கப்பட்டு , மிகுந்த முயற்சியோடு அந்த பழக்கத்திலிருந்து வெளி வந்து நிமிஷாவைத் திருமணம் செய்யும் ஆனந்தாக வரும் வரை நடிப்பதற்கு அவருக்கு வாய்ப்புகள் மிக அதிகம். பின் பாதி அடிதடி. வில்லனாக வருபவர் ஒரு மோசமான முக அமைப்பு உடையவராகத் தான் இருக்க வேண்டுமா? சமீப காலமாக அப்படி ஒரு கட்டமைப்பு சினிமாவில் இருக்கிறதே என பல சந்தர்ப்பங்களில் கேட்டிருக்கிறோம். அது இயக்குநர் காதில் விழுந்து விட்டது போல. வில்லன் முகமது ஸீஷன் அழகாக இருக்கிறார். இருந்தாலும் மனசு வராமல் விருப்பமில்லாமல் தான் வில்லத் தொழிலில் இறங்குவது போல் காட்டுகிறார்கள். நிமிஷா வெகுளியாக பல இடங்களில் வந்தாலும் தன் குழந்தை மாறி விட்டதை கண்டுபிடித்து மற்றவர்கள் ஒத்துக் கொள்ளாத இடத்தினில் நடிப்பில் ஜொலிக்கிறார். எடிட்டிங்கில் கவனம் செலுத்தி வேண்டாதவைகளை வெட்டி இன்னும் கொஞ்சம் வேண்டியவைகளை சேர்த்திருந்தால் படம் வேற லெவலுக்கு போயிருக்கும். பார்ப்பதை தவற விடாதீர்கள்.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!