Bio Data !!

13 December, 2025

வழக்கறிஞர் கருப்பையா நினைவஞ்சலி

அரிகேசவநல்லூர் என்னும் ஊரைச் சார்ந்த கருப்பையா வழக்கறிஞர் அவர்கள் தனது 76 ஆவது வயதில் இறந்த பிறகு அவர் மகன் ஆயிரம் K செல்வகுமார் என்பவர் ஆயிரம் பௌன்டேஷன் என்பதை நடத்தி வருகிறார். அவர் வழக்கறிஞர் கருப்பையா நினைவுச் சொற்பொழிவும் நடத்தி வருகிறார். 11 ஆம் ஆண்டு நினைவு சொற்பொழிவு இன்று நடந்தது. நண்பர் தீன் அவர்களால் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.என் அருகில் அமர்ந்திருந்த அவர் மகளிடம் அது என்ன "ஆயிரம்" என்று கேட்டேன். எங்க தாத்தா பெயர் என்று சொன்னார்கள். இன்றைய நிகழ்வில் கருப்பையா அவர்களைப் பற்றி நான் அறிந்து கொண்டது. இவர் நகைச்சுவையாக பேசக் கூடியவர். மிகச் சிறந்த வாசிப்பாளர். தமிழ் இலக்கியத்திலே ஆழ்ந்து நெறிப்பட்டவர். அவர் சொன்னதாக வழக்கறிஞர் மணி அவர்கள் சொன்னது " Irwing Wallace அவர்கள் எழுதிய The Second Lady வாசிக்கச் சொன்னார்" . நான் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு முன் வாசித்த அருமையான புத்தகம். ஆயிரம் நடராஜன் என்ற அவருடைய தம்பி Ernest Hemingway யின் நாவல்களைத் தமிழில் மொழி பெயர்த்திருப்பதாகச் சொன்னார்கள். மூத்த வழக்கறிஞர் தீன் அவர்கள் பேசும் போது மனிதர்களில் பொதுவாக இரண்டு வகை உண்டு அதுவாவது . Introvert, extravert. Bava அவர்கள் வெளிப்பார்வைக்கு introvert ஆகத் தெரிவார். ஆனால் அவருடைய தயக்கமற்ற செயல்களில் extrovert ஆக வெளிப்படுவார். மூன்றாவதாக உள்ள உளவியல் தத்துவமான omnivert ஆகவும் தெரிவார் என்றார். "இலக்கியம் என்பது பூரணம். ஒரு அகலைக் கொண்டு ஆயிரம் அகல்கள் ஏற்றலாம். வெளிச்சம் குறையாது. அதைப் போன்றது இலக்கியம் " என்று வழக்கறிஞர் கருப்பையா அவர்கள் சொல்வார்கள் என்றார். வழக்கறிஞர்கள் இறந்த பிறகு அவர்களைப் பற்றி பேசுபவர்கள் இருக்க மாட்டார்கள். ஆனால் ஆயிரம் K செல்வகுமார் தன் தந்தையைப் பற்றி பலரும் பேசும் விதமாக செயல் புரிந்திருக்கிறார் என்று பாராட்டினார். அடுத்து "மானுடம் வெல்லும் " என்னும் தலைப்பில் சிறப்பு உரை ஆற்ற வந்த பவா செல்லத்துரை தொடக்கத்திலேயே " நல்ல மேடைப் பேச்சாளர்கள் எவ்வளவு சத்தம் இருந்தாலும் பேசுவார்கள். நான் எழுத்தாளன். அமைதியான சூழலில் தான் என்னால் பேச முடியும் என்றார். கூட்டம் குண்டூசி விழுந்தாலும் கேட்குமளவு அமைதி காத்து அவர் உரையைக் கேட்டது. ஆசிரியத் தொழில் செய்த தன் தந்தையை நினைத்து தான் எதுவும் செய்ததில்லை என்று வருத்தமாகக் கூறினார். இவர் தந்தை தன் 21 ஆவது வயதில் தீபத்தன்று தற்கொலைக்கு முயன்று தப்பித்திருக்கிறார். தொங்கி விட வேண்டுமென கயிறு கட்டிய நிலையில் வானத்தில் வாண வேடிக்கைகளைக் கண்டதும் மனம் மாறி வீடு திரும்பி இருக்கிறார். நமக்கு இப்படி ஒரு அருமையான கதை சொல்லி அவர் வழியாக வர இருக்கும் போது மரணம் எப்படி அவரைத் தழுவும். ஆனால் பல வருடங்களுக்குப் பிறகு தீபத்தன்றே அவர் இறந்தார் என்றார். நிறைய விழுமியங்களை தந்தையிடமிருந்து பெற்றேன் என றார். அப்பாவைக் கெட்டியாக பிடித்துக் கொள்ளுதல் நம்மை நெறிப்படுத்தும் என்ற தல்ல ஒரு கருத்தையும் சொன்னார். நேர்மை அறத்துக்கு இன்னும் இடமிருக்கிறது என்று உணர்த்திய சுதந்திர தியாகி பற்றிய அருமையான "தியாகி" கதை சொன்னார். எத்தனை எத்தனை சிறு கதைகளை நினைவுகளின் அடுக்கில் சேமித்து வைத்திருக்கிறார். வாசிப்பு மட்டும் தான் நம்மை தினம் தினம் கழுவிச் சுத்தப்படுத்தும் என்றார். பல சிறுகதைகளைக் கேட்டு பலர் வாழ்வின் ஆகச் சிறந்த முடிவுகளை எடுத்திருக்கிறார்கள் என்றார். இன்றைய பொழுதை இந்த நிகழ்வு சின்ன நெருடலோடு கூடிய ஆகச் சிறந்த பொழுதாக்கியது.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!