Bio Data !!

19 December, 2025

அப்பா இறந்த 50 ஆம் ஆண்டு

தேதிய பார்த்தீங்களா? இன்றிலிருந்து சரியாக ஐம்பதாண்டுகளுக்கு முன். ஆனா தேதி. அப்பாவோட இள வயதில் எடுத்தது. ஐம்பதாண்டுகள் என்பது எப்படி சடுதியில் ஓடிப் போய் விட்டது. அன்றிருந்த அப்பா எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அம்மாவை அழகாக எங்களை அலங்காரம் பண்ணி விடச் சொல்லி வித விதமாய் போட்டோ எடுத்துச் சேர்த்த அப்பா. அம்மாவோட சேர்ந்து ஆடைகளை டிஸைன் செய்து தயாரித்து எங்களுக்கு அணிவித்து அழகு பார்த்த அப்பா. இன்று என்னிடம் இருந்து விலக மறுக்கும் மேட்டிமை உருவாகக் காரணமாக இருந்த அப்பா. ஆனால் இப்போ தோணுது அவர் இன்னும் கொஞ்சம் காத்திரமாய் இருந்திருக்கலாமோ? மூன்று பெண் பிள்ளைகளைப் பெற்ற மனம் இவ்வளவு பூஞ்சையாய் வலி தாங்க முடியாததாய், இருந்து உருகி உருகி காதலித்த மனைவியையும் , உயிராய் நினைத்த பிள்ளைகளையும் இப்படி நட்டாற்றில் விட்டது போல் விட்டு போயிருக்கக் கூடாதோ! ஆனாலும் நீந்திக் கரை சேர்ந்து விட்டோம் அப்பா. உங்கள் பேரப் பிள்ளைகள் இன்று வெளிநாட்டிலும். அவர்களின் பிள்ளைகள் அங்கேயும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். என் கவலை எல்லாம் இதையெல்லாம் பார்க்க நீங்கள் இல்லாமல் போனீர்களே என்பது தான். இன்று வரை நீங்கள் இல்லாததால் நாங்கள் கடக்கும் வலிகள் அற்பமானவை அல்ல அப்பா. பொதுவாக பிள்ளைகளை விட பேரப் பிள்ளைகளை அதிகம் நேசிப்போம் என்கிறார்கள். நீங்கள் பிள்ளைகளிடமே பேரன்பைக் காட்டியவர். அந்த மகாப் ப்ரவாக அன்பை உங்கள் பேரப் பிள்ளைகளுக்கு காட்டாமல் மறைந்து போனீர்களே அப்பா. அதற்காகத் தான் சொல்கிறேன். அப்பாக்களே!! கொஞ்சம் காத்திரமாய் இருங்கள். பழகும் மனிதரிடமெல்லாம் உங்கள் அன்பின் சாயலைக் கண்டு பாசத்தில் பற்றிக் கொள்வதும், இடை வழியில் நீங்கள் விட்டுச் சென்றதைப் போலவே அவர்கள் விலகும் போது இளகித் தவிப்பதும் தொடர்கதையாகத் தான் அப்பா இருக்கிறது. எவ்வளவோ துணிவோடு காரியங்கள் செய்தாலும் அன்பு என்ற விஷயத்தில் மட்டும் பலவீனமாகிப் போகிறேன். அன்பைக் காட்டிய நீங்கள் அன்பற்று ஜடமாய் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் சொல்லித் தந்திருக்கலாமே அப்பா. நீங்கள் இல்லாமல் ஐம்பதாண்டுகள் வாழ்ந்து விட்டோம் என்பதே நம்ப முடியாமலிருக்கிறது. இன்னும் எத்தனை ஆண்டுகளோ! இந்த ஒன்றை மட்டும் எப்படியும் படித்து விட வேண்டும். நல்ல மனம் படைத்தோர், நாணயமானோர், கனிவானவர், பண்பானவர், என்னை அரவணைக்க நெருங்கி வருவோர், என்னை வியந்து என் தன்னம்பிக்கையை அதிகரிப்போர் அத்தனை பேரிடமும் இருந்து எட்டி இருக்க பழக வேண்டும். மற்றவர்களின் பிரிவு என்னைப் படுத்துவதே இல்லை என்ற நிலை வர வேண்டும்.் விரைவில் வந்து சேர்ந்து விடுவேன். காத்திருங்க அப்பா.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!