07 December, 2025
எங்கள் நெல்லை ஆயர் மேதகு ஜூட் பால் ராஜ் அவர்கள் ஆயராகி இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவடைந்த விழாவும், கிறிஸ்மஸ் விழாவும் இணைந்து ST.Anne's நடத்தும் மன நலம் குன்றியோர் மறு வாழ்வு இல்லத்தில் வைத்து நற்செய்திக் குழுவினரால் நடத்தப்பட்டது. கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.
இங்கு பல முறை சென்றிருக்கிறேன். கைவிடப்பட்ட முதியோரும் இருப்பார்கள். முதியோர் எண்ணிக்கை குறைந்திருப்பது போல் தோன்றியது. மக்களின் பொருளாதார நிலை உயர்ந்திருப்பது ஒரு காரணமாக இருந்திருக்கலாம். பல பிரச்னைகளுக்கும் அடிப்படை காரணம் பொருளாதாரமாகத் தானே இருக்கிறது.
ஆட்டிஸத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான பள்ளி இங்கிருப்பதாகச் சொன்னார்கள். எவ்வளவு ஞாபகமா ஸ்டெப்ஸ் போடுறாங்க.
ஆட்டிஸம் குழந்தைகள் முன்னால இவ்வளவு இருந்த மாதிரி இல்லையேன்னு தோணியது. அப்போ ஒருவர் சொன்னது நினைவுக்கு வந்தது. முழுமையாக மன நலம் பாதித்தவர்கள் எண்ணிக்கை இப்போ குறைஞ்சிருக்குது. இரண்டிக்கும் ஏதாவது தொடர்பிருக்கலாம் என்று. தெரியல.
ஒரு ஆண் குழந்தையும் இரண்டு பெண் குழந்தைகளும் இணைந்து பாடினார்கள். அந்தப் பையன் பார்க்க பாதிக்கப்பட்டவன் போலயே தெரியவில்லை. நேராக என்னிடம் வந்து "நான் நல்லாப் பாடினேன்" என்றான். நாம "பாடினேனா" எனக் கேட்போம். அந்தக் கடைசி எழுத்து மாற்றத்தில் மட்டுமே தொக்கி நின்றது ஒருவரின் மன நலம்.
அங்குள்ள குழந்தைகளுக்கு புத்தாடையும் எல்லோருக்கும் உணவும் வழங்கப்பட்டன.
ஆயர் அவர்கள் பேசியதில் எனக்கு ரொம்ப பிடித்தது
" பிறப்பவரெல்லாம் மனிதரல்ல. பிறருக்காக வாழ்பவர் மட்டுமே மனிதர்"
"தன்னைப் பற்றி மட்டுமே அக்கரைப் படுபவர்கள் இன்னும் வாழத் தொடங்கவே இல்லை என்பது தான் உண்மை"
அருமையான கருத்துகள் தானே. சமுதாயத்தில் நிறைய மாற்றங்கள் பார்க்கிறோம். சேவை புரியும் இளைஞர்கள் அதிகரித்து விட்டார்கள். நம் மக்களை நாம் தானே தாங்கிப் பிடிப்போம். இணைத்திருக்கும் படங்களும் வீடியோக்களும் சான்று.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!