12 October, 2026
#பிறழ் நாவல்
நாவல் :பிறழ்
ஆசிரியர் : நிஜந்தன்
எதிர் வெளியீடு
விலை : 150 ரூபாய்
முதல் பதிப்பு : டிசம்பர் 2025
ஆசிரியர் நிஜந்தன் ஆரம்பத்தில் மார்க்சிய கோட்பாடுகள் சார்ந்த அல் புனைவுகளை மட்டுமே வாசித்தவர் . பின் ரஷ்ய இலக்கியங்கள் , சுந்தர ராமசாமி எழுதிய ஒரு புளிய மரத்தின் கதை வழியாக தீவிர இலக்கிய வாசகர் ஆகியிருக்கிறார் . பிறழ் இவரது முதல் நாவல் .
மனச்சிதைவு சார்ந்த நாவல் . மனச் சிதைவு என்பது தொலைத்ததை மீண்டும் பெற மனம் எடுத்துக் கொள்ளும் ஒரு பிரயத்தனம். ஒரே நேரத்தில் இருவராக வாழ்ந்துகொண்டிருக்கும் ஒருவனின் கதை.
அணிந்துரையில் திரு கோபி கிருஷ்ணன் முதல் நிலையில் அவன் முடிவு எடுக்கவே மாட்டான். பிறரைச் சார்ந்தே இருப்பான் என்கிறார். மன பாதிப்பின் முதல் அறிகுறியே முடிவெடுக்க முடியாமை தான். மனதை ஒரு நிலைப்படுத்த முடியாது . இன்னொரு நிலையில் தன்னை தலைமைப் பண்பு நிறைந்தவனாக நினைப்பான். இந்த நாவலில் ஒழுங்கையோ காரணங்களையோ தேடாதீர்கள் என்று முன் அறிவிக்கிறார் .
கதை தன்மையில் சொல்லப்பட்டு இருக்கிறது. தனக்கு "குட்டையன்" என்று ஒரு பட்டப் பெயர் இருப்பதாக சொல்கிறான் . கதை ஆரம்பமே தற்கொலை முயற்சி. தடங்கல்.
பள்ளியில் அவன் பீடி பிடித்து மாட்டிக்கொள்ள அம்மாவை வந்து பார்க்கச் சொல்லி இருக்கிறார் ஆசிரியர். பள்ளி சென்று திரும்பிய அம்மாவின் கோபத்தால் அம்மா உடனான நெருக்கம் குறைகிறது. அம்மாவின் கன்னத்தில் கைவைத்துப் படுக்கும் உரிமை பறிபோகிறது. இதெல்லாம் பின்னால் நடக்கும் நிகழ்வுகளை அவன் அம்மாவிடம் பகிர்ந்து கொள்ள முடியாத நெருக்கம் இன்மைக்காக சொல்லப்படுகிறது.
பக்கத்து வீட்டில் பவானி அக்கா டியூஷன் எடுக்கிறார் . அங்கே சேருகிறான். ஆனால் தனியாய் இருக்கும் நேரங்களில் பவானி அக்காவின் பார்வை டியூஷன் வந்திருக்க வேண்டாமோ என நினைக்க வைக்கும். கொஞ்ச நாளிலேயே அக்கா வீடு மாறிப் போய்விட அங்கே போகும் ஒரு குறுக்குச் சந்தில் "கவட்டிக் காலன்" என அழைக்கப்படும் ஒருவனால் வன்மையாக பயன்படுத்தப்படுகிறான்.
அதை பவானியக்காவிடம் சொல்ல துரதிர்ஷ்ட வசமாக அவளாலும் தவறாகப் பயன்படுத்திக் கொள்ளப் படுகிறான்.
இங்கே இரண்டு விஷயங்களை நாம் நினைவு கூற வேண்டும் (1) பெண் குழந்தைகளை மட்டும் பொத்தி பொத்தி வளர்த்து ஆண் குழந்தைகளுக்கு இப்படி ஒரு அகால நிகழ்வுக்கு வாய்ப்பு இருக்கிறது என்பதையே அறிந்து கொள்ளாமல் இருப்பது.
(2) ஒரு குழந்தைக்கு தாயோ தந்தையோ எந்தவித குற்ற உணர்ச்சியும் இன்றி எதையும் பகிர்ந்து கொள்ளலாம் எனும் தைரியத்தை கொடுப்பது .
இதில் சிறுவனின் தவறு எள்ளளவும் இல்லை என்றாலும் அவன் குற்ற உணர்வில் தவிக்கிறான் . அதனால் ஏற்பட்ட மனப்பிறழ்வும் அதன் முடிவும் தான் கதை.
அன்பு உள்ளங்களே !! குழந்தைகளை ஆணானாலும் பெண்ணானாலும் எவ்வளவு கவனத்தோடு பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி உணர்த்தும் நாவல் . தவறவிடாமல் படிக்க வேண்டிய ஒன்று.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!