Bio Data !!

03 February, 2025

#நம்பிக்கை என் வாழ்வு கட்டமைக்கப்பட்டதே நம்பிக்கை என்னும் சாளரங்களால் தான். எத்தனை எத்தனை செயல்கள். வாழ்வின் எல்லாவிதமான ஏற்ற தாழ்வுகளையும் கடந்து இன்று ஒரு வெற்றிகரமான பெண்மணியாக ஓய்வை நிம்மதியாக கழித்துக் கொண்டு இருக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக சந்தர்ப்பம் கிடைக்கும் போது சொல்கிறேன். நான் எழுதுவதைத் தொகுத்தால் ஒரு புத்தகமே போட்டு விடலாம். அவ்வளவு நிகழ்வுகள். நான் பிறந்த தினத்தன்று அடைந்த மகிழ்வின் உச்சத்தில், ஒரு வீடு வாங்கி தன் பெயரில் பத்திரம் பதிந்திருக்கிறார் எங்க அப்பா. இதைச் சொல்வதற்கு காரணம் இருக்குது. கடைசியில் சொல்றேன். எங்க அப்பாவுக்கு ரொம்ப பிடித்த மகள் நான். மூன்றும் பெண்ணாய்ப் போனதால் என்னை ஆண் பிள்ளை போலவே வளர்த்தார்கள். என் அப்பா கல்லூரிப் பேராசிரியர் . அம்மா பள்ளி ஆசிரியை. அம்மா, அப்பா இல்லாம தனியா வெளியே போக மாட்டாங்க. அது அவர்களது முப்பத்தெட்டு வயது வரை தான். ஏன்னா அதன் பிறகு தனியே மட்டு்ம் தான் போனாங்க. ஆம் அப்போ அம்மாவுக்கு 38. அப்பாவுக்கு 41. இருவரும் மயங்குகிறாள் ஒரு மாது படம் பார்த்திட்டு வந்து படுத்தாங்க. எங்களை அதிகம் அழைத்துச் செல்ல மாட்டாங்க. நடு இரவு மூன்று மணிக்கு ப்ரெயின் ஹெமரேஜ் ஆகி மருத்துமனைக்கு எடுத்துச் சென்ற ஒரு மணி நேரத்தில் இறந்து போனாங்க எங்க அப்பா. அந்த இறப்பை "அப்பாவுக்கு அஞ்சலி" என்று பதிவாக்கி இருக்குறேன். வேறொரு சந்தர்ப்பத்தில் அதைப் பதிகிறேன். எங்க அம்மாவுக்கு கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போலாயிற்று. நடு வயதுப் பெண்மணி மூன்று பெண் குழந்தைகளுடன். தன் வேலையை மட்டுமே ஊன்றுகோலாய் பிடித்து மூவரையும் வளர்த்தார்கள். அப்பா இறக்கும் போது அம்மா கணிதத்தில் B.Sc. B Ed. அதன்பிறகு M A(Eng) M.Sc ( maths) M. Ed என்ற மூன்று முதுகலைப் பட்டம் பெற்றார்கள். மூன்று பெண் குழந்தைகளுமே வளர்ந்து அரசு உத்யோகத்துக்கு வந்தோம். அது எழுதிய அளவிற்கு எளிதானதல்ல. அம்மா எண்பது வயது வரை சந்தோஷமாக வாழ்ந்து இறந்து போனார்கள். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் எங்கள் வீட்டை வாங்கி விட வேண்டும் என்று பக்கத்து வீட்டுக்காரர் முயற்சி செய்தார். ஆண்கள் இல்லாத குடும்பம் என்று ஒரு இளக்காரம். அம்மா இறக்கும் வரை, அந்த வீட்டை அவர் வாங்கும் நிலைக்கு கொண்டு வந்திடாதீங்கன்னு சொல்வாங்க. அதற்கு காரணம் இருந்தது. ஒரு பொதுச் சுவர் சார்ந்த தகராறில் அவர் பயன்படுத்திய கடினமான வார்த்தைகள். அம்மா இறந்து ஏழாண்டுகள் கழித்து வீட்டுக்கான மதிப்பை மூன்று பாகங்களாக்கி என் ஓய்வில் கிடைத்த பணத்தை இரு தங்கைகளுக்கும் பகிர்ந்து கொடுத்து அவர்கள் சம்மதத்தோடு வீட்டை என் பெயரில் பதிவு செய்தேன். அம்மா காலத்துக்கு பிறகு எப்படியும் வீட்டை வாங்கி விடலாம். பெண் பிள்ளைகள் தானே. ஆளுக்கொரு பக்கம் இருப்பார்கள் என்ற ஆசையில் இருந்தவர் ஏமாந்து போனார். எங்க அப்பா எனக்கு என்னுடைய பதினைந்து வயதுக்குள் என் வாழ்நாளுக்குத் தேவையான தன்னம்பிக்கையை கொடுத்துப் போயிருந்தார்கள். நம்பிக்கை தானேங்க வாழ்க்கை. அது ஒண்ணைமட்டும் இறுகப் பற்றிக் கொள்ளுங்கள். வெற்றி பெற்று விடலாம்.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!