Bio Data !!

28 May, 2025

#கவிதை.. நம்பிக்கை வை

என்னைப் பற்றி உன்னிடம் எத்தனை விதமான செய்திகள் வந்து சேர்ந்ததோ! என்னைப் பற்றிய உன் எண்ணம் எத்தனை முறை அழித்து அழித்து எழுதப்பட்டதோ! என் மேலான காதலும் கோபமும் வெறுப்பும் அன்பும் எத்தனை முறை மாறி மாறி நர்த்தனம் ஆடியதோ! இதில் எந்தச் சிக்கலும் எனக்கில்லை. ஏனென்றால் உன்னைப் பற்றி நான் அறிந்து கொள்வது எல்லாமே உன் மூலம் மட்டுமே. ஆண்களின் அந்தரங்கம் அடுத்தவரால் எளிதாக ஜலதரங்கம் ஆக்கப்படுவது தான் பிரச்னையின் ஆணி வேர். நம்பிக்கை என்பது காதலின் அழுத்தமான நங்கூரம். அது மட்டுமே காதலை வாழ வைக்கும். நம்பிக்கை வை. ( கவிதையில் "என்" நானல்ல)

#இடியாப்பம் ஜோக்

எல்லோரும் இடியாப்பம் கதை சொல்லும் போது நாம சொல்லாம இருக்கலாமா? எங்க தெருவுக்கும் ஒரு இடியாப்பக் காரர் வருவார். ஆனால் வரும் போதே காலை ஒன்பதரை மணி ஆகிடும். கேட்டா தினம் ஒரு கதை சொல்வார். அது உண்மைக் கதையா கற்பனைக் கதையா அவருக்கே வெளிச்சம். நான் சொல்வேன் "எட்டே முக்காலுக்கு உள்ள வந்தாத்தான் நான் வாங்க முடியும். ஒன்பது மணிக்கு என் வீட்டுக்கார்ருக்கு நான் சாப்பாடு கொடுக்கணும்." ஒரு நாள் ஒன்பது மணிக்கு "இடியாப்பம்" னு சத்தம் கேட்டதும் பாத்திரம் எடுத்துக் கிட்டு வெளியே ஓடினேன். ஆளைக் காணவில்லை. எங்க தெருவின் முக்கில் ஒரு ஹோட்டல் இருக்குது. சரி அங்கே போய் இட்லி வாங்கிடுவோம்னு நடந்தேன். கடையை நெருங்கும் போது " இடியாப்பம்" னு சத்தம். அட அடுத்த தெருவுல தான் நிற்கிறார் போல வந்திடுவார்னு நின்னா கொஞ்ச நேரமா காணோம். இங்கே இருந்து இங்கே வர இவ்வளவு நேரமான்னு பார்த்திட்டு கடையில் பாத்திரத்தைக் கொடுத்து இட்லி வையுங்கன்னு சொல்லியாச்சு. நான் பொதுவா பாத்திரம் கொண்டு போயிடுவேன். பார்சல் வாங்குறதில்ல. அவங்க இட்லி வைக்க ஆரம்பிச்ச உடனே "இடியாப்பம்" இப்போ குரலோடு ஆளும் அவதரித்தார். நான் என்ன செய்யலாம்னு யோசிக்கிறதுக்கு உள்ள கடைக்கார அக்கா இட்லியைத் திருப்பி அவங்க பாத்திரத்திலேயே வைத்து " நீங்க இன்னைக்கு இடியாப்பமே வாங்கிக்கங்க நான் இங்கே தானே இருக்கப் போறேன்" என்றார்கள் பெருந்தன்மையாக. அவரிடம் இடியாப்பம் கேட்டால் " அவங்க தப்பா நினைச்சுக்க மாட்டாங்கல்ல" என்கிறார். போங்கய்யான்னு மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டு "இல்ல அவங்க தோழி தான் என்றேன். ஏகோபித்த ஆதரவைப் பெற்றதைக் கொண்டு இடியாப்பத்தை தேசிய உணவாக்கி எல்லோருக்கும் தங்கு தடை இடையின்றி கிடைக்க வழி வகை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கிறேன்.

26 May, 2025

"நிர்மலா" நாவல் விமர்சனம்.

நாவலின் பெயர் : நிர்மலா ஆசிரியர் : பிரேம் சந்த் தமிழில் கா.ஸ்ரீ.ஸ்ரீ. பூம்பாவை பதிப்பகம். விலை ரூ 240/- பக்கங்கள் 312 முதல் பதிப்பு : 1941 இரண்டாம் பதிப்பு : 2019 ரொம்ப முன்னாடி உள்ள கால கட்டத்தில் எழுதிய நாவல்கள் வாசிப்பது எனக்குப் பிடிக்கும். நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையை ஓரளவு தெரிந்து கொள்ளலாம். அதனால் தான். பாபு உதயபானு குடும்பத் தலைவன். கல்யாணி அவர் மனைவி. இவர்களுக்கு நிர்மலா, கிருஷ்ணா என்று இரண்டு பெண் குழந்தைகள். நிர்மலாவுக்கு திருமண ஏற்பாடு நடக்கும் போது தன் தம்பி சந்திரன் மிகவும் குறும்புக்காரனாய் இருக்கிறானே அவனை விரட்டாமல் தன்னை ஏன் வீட்டை விட்டு அனுப்ப அவசரப்படுகிறார்கள் என்று ஆதங்கப் படுகிறாள். திருமணம் செய்விப்பதை தன்னை வீட்டை விட்டு விரட்டுவதாக நினைக்கிறாள். கல்யாணி தன் கணவனிடம் "நான் போடும் சாப்பாடு தவிர வேற வழியில்லை என்று நீங்கள் நினைத்தது தானே இதற்கு காரணம்" என்று தன்னை மதிக்காததை எதிர்த்து பேசும் போது "ஆஹா ஒரு புரட்சிகரமான பெண்ணின் கதை தான் போல" என்று தோன்றியது . திடீரென்று பாபு உதயபானு இறந்து போக நிர்மலாவின் நிச்சயித்த திருமணம் நின்று தோத்தாராம் என்னும் வயதானவர் ஒருவருடன் நடக்கிறது. அவள் கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்து , அவள் சொல்வது எல்லாம் கேட்டு , உடலால் அவளுக்கு தர முடியாத சுகத்தை ஈடு செய்ய நினைக்கிறார் அவர். மனோதத்துவத்தின் மென்மையான பகுதியை ஆசிரியர் தொட்டிருப்பார். தோத்தாராமின் மூத்த மகன் மன் ஸாராம் இப்பொழுது எல்லாம் தனக்கு வேண்டியதை தன்னிடம் இயல்பாக கேட்கிறான் என்று நிர்மலா சொல்ல , அவன் ஏன் அக்காவிடம் கேட்காமல் உன்னிடம் கேட்கிறான் என்பார். காரணம் மன்சா நிர்மலாவை விட ஒன்றிரண்டு வயதே இளையவன். தன் மகனை விட ஒன்று இரண்டு வயதே பெரியவளை மனைவியாக்கும் போது எதுவும் யோசிப்பதில்லை. பின் வயதுப் பிரச்சினையால் கவனிக்காமல் இருந்தால் சித்திக் கொடுமை, கவனித்தால் தப்பான அர்த்தம். இந்த மனநிலை காலம் காலமாய் மாறவில்லையே . பெண் மனம் ஆழமானது என்பார்கள். காரணம் அவள் பிறர் மனதில் இருப்பதை உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசினாலும், எளிதில் படித்து விடுவாள் . ஆனால் வெளிப்படுத்த மாட்டாள். தேவைப்படும்போது ஒற்றை வரியில் எதிராளியின் முகத்திரையை கிழித்து விடுவாள் . மன்ஸாவை நிர்மலாவிடமிருந்து பிரிக்க அவன் பள்ளியில் இருந்தால் நன்றாக படிப்பான், போன்ற பல உப்பு சப்பில்லாத காரணங்களைச் சொல்ல புரிந்துகொண்ட மன்ஸா பள்ளியிலேயே தங்கி விடுவான். ஆனால் அவன் மேல் ஏற்பட்ட சந்தேகத்தால் மேலும் உடல் பலவீனப்பட்டுப் போவதை அறிந்த நிர்மலா தன் கணவனிடம் " ஒருவேளை என் பொருட்டு அவனை வீட்டுக்கு அழைத்து வராமல் இருந்தால் என்னை என் வீட்டுக்கு அனுப்பி விடுங்கள் அவனை இங்கே அழைத்து வாருங்கள் " என்பாள். தோதாராம் நிர்மலாவையும் மன்ஸாவையும் பிரித்து வைக்கப் போட்ட காரணத் தோரணங்கள் வார்வாராய் கிழிந்து தொங்கின. அவர் முகம் வெளுத்து வெளியேறுவார் . அப்போதும் அவர் மனதின் சந்தேகப் பிசாசு கேள்வி கேட்கும் "மன்ஸா உடம்பு சரியில்லை என்று சொன்னது வீட்டிற்கு திரும்பி வருவதற்காகச் சொன்ன நாடகமா?" முன்னும் போக விடமாட்டார்கள். பின்னும் செல்ல விட மாட்டார்கள். இந்த சந்தேக பிராணிகள். இந்த அர்த்தமற்ற சந்தேகத்தால் மகனையே இழக்க நேருகிறது. வீட்டிலிருந்து பள்ளி விடுதியில் போய் சேர்ந்த மகனுக்குத் தன் தந்தையின் விபரீத சந்தேகம் புரிந்ததே இறப்புக்கு காரணமாகிறது. கதை நெடுக மனோதத்துவம் அழகாகத் தொட்டுச் செல்லப்படும். கிழவர்கள் ஏன் சந்தேகக்காரர்களாக இருக்கிறார்கள் என்று ஒரு கேள்வி கதையில் எழும் . நான் கிழவர்கள் என்ற இடத்தில் கணவர்கள் என்று போட்டுக் கொண்டேன். பதிலைப் பாருங்கள் " நான் இம்மடந்தையை சந்தோஷமாக வைத்துக் கொள்ளவில்லை என்ற திருட்டு உணர்ச்சி தான் ஒன்றும் இல்லாததற்கெல்லாம் அவர்களை சந்தேகப்பட வைக்கிறது" எவ்வளவு நுண்ணிய ஆராய்ச்சி. கதையின் முடிவில் என் எண்ணம் வலுப்பட்டது. ஒரு விஷயத்தைச் சொன்னால் வருத்தப்படுவார்கள் என்று ஊமையாய் இருந்தால் அந்த மௌனம் தரும் கற்பனை இன்னும் கொடுமையானதாக இருக்கும். தான் ஒரு துரதிர்ஷ்ட கட்டை. தன் நிழல் பட்டாலே யாரும் அழிந்து விடுவார்கள் என்று சிலர் நினைப்பார்கள். அப்படி நினைத்து ஒடுங்கும் நிர்மலாவின் கதை தான் " "நிர்மலா"
ஒரு விவாதத்துக்கு உரிய விஷயத்தைத் தான் இன்று எழுதப் போகிறேன். நான் சொல்வது ஒரு நிகழ்வை ஆதரித்தா எதிர்த்தா என்று சந்தேகம் எழும்பலாம். உங்கள் ஆக்டோபஸ் கரங்களை அகல அகல விரித்துக் கொண்டே செல்லாதீர்கள் என்று தான் சொல்ல வருகிறேன். "நீங்கள் உடை உடுத்தும் முறையினால் ஒரு ஆண் தனக்கு கிடைக்கும் குழந்தைகள், முதியபெண்கள் ஆகியவர்களை வரைமுறை இல்லாமல் வன்புணர்வு செய்கிறான் என்று சப்பைக் கட்டு கட்டும் புண்ணியவான்களே!! அவனுக்கு மிக மிக அருகில் இருப்பது அவன் தாயும் சகோதரிகளும் அல்லவா? அவர்களிடம் முறைகேடாக நடக்கக் கூடாது என்று தெரிந்த ஒருவனுக்கு ஒரு குழந்தையிடமோ அந்நியப் பெண்ணிடமோ தவறாக நடக்கக் கூடாது என்ற அறிவு எப்படி இல்லாமல் போகும். Sleeveless blouse அணிந்த ஒரு பெண் வெயிலுக்கு நிறைய தண்ணீர் குடியுங்கள் என்று மேடையில் சொன்னால் " வெயிலுக்குத் தகுந்த உடை தான் நீங்கள் போட்டு இருக்கிறீர்களா? . " என ஒரு பத்திரிகையாளர் கேட்கிறார். அவர் கேட்டது கை இல்லாத உடை அணிந்ததைத் தான். ஆனால் பிரச்னை ஆன உடன் காட்டன் சாரியைக் கேட்டதாக மாற்றி விட்டார்கள். அந்த பெண் புத்திசாலித் தனமாக ஒன்று செய்திருக்கலாம். அவர்கள் கேள்வி புரிந்தாலும் புரியாதது போல் " ஆம் அதனால் தான் பருத்தி புடவை கட்டி வந்திருக்கிறேன்" என்று கடந்து போயிருக்கலாம். அந்தப் பெண்ணின் தைர்யம் தான் அங்குள்ள ஆண்களை அவளுக்கு எதிராகத் திருப்புகிறது. இப்பொழுது என் உடல் என் உரிமை என்று புறப்படுபவர்களிடம் வருகிறேன். ஒரு ஆண் இதே போல் என் உடல் என் உரிமை என தனது பேன்ட்டை எவ்வளவு இறக்கமாக போட முடியுமோ அவ்வளவு இறக்கமாகப் போட்டு உங்கள் முன் நடந்து சென்றால் அருவருப்பீர்களா மாட்டீர்களா? ஆண்கள் சர்ட்டை கழற்றி போட்டால் ஒண்ணும் சொல்வதில்லையே என்கிறீர்கள். நம் வீட்டில் , தெருவில், அக்கம் பக்கத்தில் அப்படி பலரை நாம் பார்க்கிறோம்.்சாதாரணமாகத் தானே கடக்கிறோம்.அதுவும் இதுவும் ஒன்றா? என் உடல் என் உரிமை என்று தானே நினைத்த இடத்தில் மூத்திரம் ஒழித்துக் கொண்டு இருந்தவர்களை ரொம்பக் கஷ்டப்பட்டு இப்போ மாற்றி இருக்கிறார்கள். ஆண் தன் ரசனையையோ அனுபவித்தலையோ நேர்மையான கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும் என்று அழுத்திச் சொல்வதற்குப் பதிலாக பெண் அதை விட மோசமாக இறங்குவது எவ்வகையில் நியாயம். கலாசாரக் காவலர்களே!! மார்பின் பிளவு தெரியக் கூடாது என்றீர்கள் சரி. அடுத்து இடுப்பின் மடிப்பைக் காட்டாதே என்றீர்கள். இப்போ தோள்களைக் காட்டாதே என்பதால் தான் சொல்கிறேன் உங்கள் ஆக்டோபஸ் கரங்களை நீள நீளமாய் நீட்டாதீர்கள். எந்த விஷயமும் அழுத்திக் கட்டுப்படுத்தும் போது வெடித்து மீறி விரியும். இது என்ன பட்டி மன்றத் தீர்ப்புப் போல என எண்ணாதீர்கள் இருவர் பக்கமும் இருக்கும் தவறைச் சுட்டிக் காட்ட விரும்பினேன். (பி.கு: இன்னைக்கு என்னா அடி விழப் போகுதோ. உதவிக்கு உங்களைத் தான் நம்பி இருக்கிறேன். தயாரா இருங்க)

22 May, 2025

# maranamass மலையாளப் படம்

Comedy Thriller இது இப்போ வளர்ந்து வர்ர ஒரு டிரென்ட். Black comedy ங்கிறது இந்த வகை தான்னு நினைக்கிறேன். நான் sony Liv ல "Maranamass" அப்படின்னு ஒரு மலையாளப் படம் பார்த்தேன். அதன் இயக்குநர் கவியூர் சிவபிரசாத்.இவர் இயக்கிய முதல் படம் என நினைக்கிறேன். கதாநாயகி அனிஷ்மா அழ வேண்டியதை, சிரிக்க வேண்டியதை, சரியான நேரத்தில் சரியான அளவில் காட்டுகிறார். ராஜேஷ் மாதவன் போன்ற திறன் மிகு நடிகர்களுக்கு அவர்கள் உடல் வாகு ஒரு கொடை. எல்லா கதாபாத்திரங்களுக்கும் tailor made ஆக இருக்கிறது. பாப் ஆன்டனி என் இளமைக் காலங்களில் , பெண்களின் கனவு இளவரசன். முதுமை என்பது கொடுமை தான். அந்த அழகு எங்கே போச்சுது. தமிழில் "பூவிழி வாசலிலே" படத்தில் வருவார் வில்லனாக. குரு சோம சுந்தரம் ஆமாங்க ஜோக்கர் படத்தில் கலக்குபவர் தான். ஒரு சின்ன ஆனால் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம் ப்ளாக் காமெடி வகை தான். ஒரு சீரியல் கில்லரைக் கண்டுபிடிக்கிறாங்க. அதனால த்ரில்லர். படம் முழுக்க காமெடி விரவிக் கிடக்குது. பேசில் ஜோசஃப். அவருக்கு இது லட்டு போன்ற கதாபாத்திரம். காதலியை கனிவோடு பார்ப்பதாகட்டும், காவல் அதிகாரிகளிடம் கெத்தாக உரையாடுவதாகட்டும், எதிரியிடம் கடுமையாக நடந்து கொள்வதாகட்டும். முடியை மஞ்சள் நிறத்தில் கலரிங் பண்ணி ஒரு கோமாளி வேஷத்தில் சீரியஸாக நடிக்கிறார். தன் மனைவியிடம் ஓவர் உரிமை எடுத்து தகாதபடி நடந்ததாக மகனே தந்தையைக் கொண்டு போய் முதியோர் இல்லத்தில் சேர்த்து விட அங்கிருந்து தப்பி வரும் கிழவர் (புளியாணம் பௌலோஸ்) ஒரு இளம் பெண்ணிடம் அத்து மீற அவள் அடித்த பெப்பர் ஸ்ப்ரேயில் இறந்து போகிறார். படம் நெடுக பிணமாகவே நடிக்கிறார். நாகேஷ் படம் முழுவதும் பிணமாக வருவாரே "மகளிர் மட்டும்" படம் தான் நினைவுக்கு வந்தது. அந்த சீரியல் கில்லரை கண்டு பிடித்துத் தருபவர்களுக்கு பத்து லட்சம் சன்மானம் என அதை அடைய ஒவ்வொருவர் முயற்சி பண்ணுவதும் நகைச்சுவைக்கு சரியான களம். மென்னுணர்வையும் கலந்து, நகைச்சுவையில் தோய்த்து ஒரு சைக்கோ கில்லரை காவல்துறை பிடிப்பதைக் காட்டும் ஜாலியான படம். லாஜிக் பார்க்காமல் கொஞ்ச நேரம் சிரித்து மகிழ்வதற்காக பார்க்கலாம். அது சரிங்க ஊருக்கு ஒரு குப்பை கிடங்கை உரம் போட்டு வளர்த்து வர்ரோமே ( சரி தான் நாங்களா வளர்க்கிறோம்) இது எங்கே போய் முடியப் போகிறது. படத்தில் குப்பை கிடங்கில் ஒரு பைட் இருக்கிறது. Disposal of garbage க்கு ஏதாவது வழி கண்டுபிடிங்க பாஸ்.

19 May, 2025

# டிரிப்புக்கு டிப்ஸ்

#டிரிப்புக்கு டிப்ஸ் நான் சொல்ற இந்த டிப்ஸ் நீங்க யாருமே நினைச்சுக் கூட பார்த்திருக்க முடியாது. ஒரு முறை எனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தால் கொடுக்கும் டிப்ஸ். ஒரு முறை சென்னையில் ஒரு உறவினர் திருமணத்துக்குச் சென்றோம். அதனால் முதல் நாள் நிச்சயதார்த்தம், மறுநாள் காலை கல்யாணம், மாலை ரிசப்ஷன் என ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒவ்வொரு நகை போடுவோம் என எடுத்துச் சென்றேன். நமக்கு வேற இப்ப வயசாகிப் போச்சுதா? ரொம்ப மறதி வருது. நடக்காத ஒன்று அப்படியே நடந்த மாதிரியே நல்லா நினைவில் நிற்குது. மாலை நிச்சயத்துக்கு போனவள் பைக்குள்ள கை விட்டு புதையல் தேடிக் கொண்டே இருந்தேன். கொஞ்ச நேரம் பார்த்த என் கணவர் "என்னத்த உருட்டிக் கிட்டே இருக்கிற" என்றார். "கிளம்பும் போது கம்மலை மாத்தினேன் பழைய கம்மலை லாட்ஜ்லேயே வச்சிட்டு வந்துட்டேனா? Bag ல போட்டேனான்னு ஞாபகம் இல்ல. அதான் பைக்குள்ள தேடுறேன்" னு சொன்னதும் டென்ஷன் ஆகிட்டார். "லாட்ஜ்ல வச்சிட்டு வந்தா அது போகும் வரை இருக்குமா? மாத்தி கண்ணாடி கிட்ட டேபிள்ல தானே வச்சிருப்ப. சரி எதுவா இருந்தாலும் போன பிறகு பார்த்துக்கலாம்" னு சொல்லிட்டு நண்பர்களோட பேச ஆரம்பிச்சிட்டார். எனக்கானா கவனமெல்லாம் கம்மல் மேலேயே. அவருக்குத் தெரியாம பைக்குள்ள துளாவிக்கிட்டே இருந்தேன். இடையில் அவர் என்னை முறைத்ததும் தேடுவதை நிறுத்துவேன். ஒரு வழியா function முடிந்து லாட்ஜ்க்கு வந்தாச்சு. பார்த்தா கண்ணாடி முன்னாடி உள்ள டேபிள் துடைச்சு வச்ச மாதிரி இருக்குது. உடனே பதற்றம் பரவ கொண்டு வந்த பையை தலைகீழாக் கவிழ்த்து தேட அங்கேயும் இல்லை. என் கணவர் திட்டத் தொடங்கி விட்டார். " உன்னோட வெளியே கிளம்பி நிம்மதியா வீடு வந்து சேர முடியுமா? கம்மல் எவ்வளவு? ஒரு பவுனா போச்சுது" எனக்கு படபடன்னு வந்து வெளியே உட்கார்ந்து செல்லை எடுத்தேன். கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகலாம் னு காலரியைத் திறந்து பார்த்தேன். முதல் படமாக நான் ஊருக்கு கிளம்பும் முன் ஒரு போட்டோ எடுத்து குடும்ப வாட்ஸ் அப் குரூப்பில் "டா டா. பை பை" னு போடுவேன். திடீர்னு என் காது கண்ணில் பட்டது. "அட! ரிசப்ஷனுக்கு போட்டுட்டு போன கம்மல் தான் வீட்டில இருந்து கிளம்பும் போதே போட்டு இருக்கிறேன். ஆனா லாட்ஜ்ல கம்மலை மாத்தின மாதிரியே இருக்குதே. " அதை சொன்னா மறுபடி திட்டு வாங்கணும். வீட்டுக்குப் போய் இருக்குதான்னு பார்த்த பிறகு சொல்லிக்கலாம்னு சொல்லல. ஆனா மறு நாள் திருமணத்தை அனுபவிக்காம இருப்பாரே. ஒரு திட்டு தான வாங்கிக்கலாம் னு சொல்லிட்டேன். "கம்மலை லாட்ஜ்ல மாத்தல போல வீட்டுல தான் மாத்தி இருக்கிறேன்" னு சொன்னேன். முறைச்சிட்டு ஒண்ணும் சொல்லாம விட்டுட்டார். கணவர்கள் ஸ்பெஷாலிட்டுயே எப்போ அவங்க திட்டுவாங்கன்னு எதிர்பார்க்கும் போது திட்டாம விட்டிடுறது தானே. அப்புறம் வீட்டுக்கு வந்து பார்த்தா கம்மல் என்னைப் பார்த்து பளிச்னு சிரிக்குது. இதுல டிப்ஸ் எங்கே இருக்குன்னு கேட்கிறீங்களா? அன்றிலிருந்து ஊருக்கு கிளம்பும் முன்ன காது கழுத்து எல்லாம் நல்லா தெரியிற மாதிரி போட்டோ எடுத்துக்குவேன். இந்த மாதிரி கன்ஃபூஷன் வந்தா பார்த்துக்கலாம்ல. ஆனாலும் லாட்ஜ்ல கம்மல மாற்றின மாதிரி தாங்க இப்பவும் தோணுது. What an illusion. என்ன சீரியஸா டிப்ஸ் கொடுப்பேன்னு வந்தீங்களா உங்களுக்கு தெரியாததையா நான் சொல்லிடப் போறேன். என்ஜாய்!!!

17 May, 2025

# நாவல் அவன் ஆனது

நாவல் : அவன் ஆனது. ஆசிரியர் : சா கந்தசாமி. காலச் சுவடு பதிப்பகம். விலை 275 ரூபாய். முதல் பதிப்பு 1981. பக்கங்கள் 215 . கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ஒரு நாவல். முதல் பதிப்பை எதனால் குறிப்பிடுகிறேன் என்றால் இன்றைய நம் அறிவை பயன்படுத்தி குற்றம் கண்டுபிடிக்காமல் அன்றைய காலகட்டத்தில் நம்மை நிறுத்தி வாசிக்க வேண்டும் என்பதால்தான். கதை சிவ ஷண்முகம் என்பவர் தன்மையில் சொல்வதாக எழுதப்பட்டிருக்கிறது. கதை நாயகன் நெடுக "நான்" என்றே எழுதி வருகிறார். அவரது தன்னம்பிக்கை நிறைந்த நண்பன் ராமு. அவரை நன்கு புரிந்து ஏற்றுக் கொண்ட மனைவி கமலா. ராமு கிட்ட எந்த காரியமும் நிற்காது . ஏதாவது புரட்டி பணம் போட்டு நடத்தி முடித்து விடுவார். தன்னிடம் இல்லாத, வெளியே தெரியாத தைரியம் ராமுவிடம் இருந்தது என்கிறார். பொதுவாகவே நட்போ வாழ்க்கைத் துணையோ தன்னிடம் இல்லாதது யாரிடம் இருக்கிறதோ அவரிடம் தான் ஈர்ப்படையும். ராமுவிடம் நாயகனுக்கான ஒட்டுதலுக்கு இது காரணமாய் இருக்கலாம். " எனக்கு ஒன்னும் தெரியாது என்கிறது எனக்கு தெரியும்" என்று சிவஷண்முகம் சொல்வார். ஒன்னும் தெரியாதுங்கறதே தெரிஞ்சுக்காம எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசுறவங்களை சமாளிக்கிறது தான் ரொம்ப கஷ்டம். சிவ ஷண்முகத்தின் தந்தை ஒரு கோபத்தில் தன் மனைவியை கிணற்றில் போட்டு கொன்று விடுவார் அவரைப் பற்றி சொல்லும் போது " அவர் கொலையும் செய்வார். புண்ணியமும் செய்வார். நாளாக ஆக கொலை மறந்து புண்ணியம் மட்டுமே நிலைத்து நிற்கும் என்கிறார். கமலா கோபம் வந்தால் பேச மாட்டாள் ரொம்ப கோபம் வந்தால் சாப்பிட மாட்டாள் ஆனால் இது ரொம்ப நாள் வரை அவள் கணவனுக்குத் தெரியவில்லை. ஏனென்றால் அவளை சாப்பிட்டாளான்னு கேட்கிறது கூட இல்லை . இப்படித்தானே பல பெண்களின் கோபம் அந்தக் காலத்தில், மௌனத்தில் பிறந்து மௌனத்திலேயே முடிந்துவிடும். ஆசிரியர் சிலருடைய குணாதிசயங்களை பற்றி சொல்லும் போது அத்தகையோர் இன்றும் நம்மிடையே இருப்பது தெரிகிறது. திருவேங்கடம் என்னும் நண்பரை பற்றிச் சொல்லும் போது " அவர் தன் மனைவி சொல்றதை எல்லாம் கேட்க மாட்டார். அவர் மனைவி அவரை விட்டுப் பிரிந்ததற்கு அதுவும் காரணமாக இருக்கலாம்" என்கிறார். " யாராவது அழுத்திச் சொன்னால் என்னால் மறுக்க முடிவதில்லை. ஏற்றுக்கொண்டு பின்னால் கவலைப்படுவதே வழக்கமாகிவிட்டது " என்கிறார். பல பெண்களுக்குத் தன் கணவர் மேல் இந்த குறை இருக்கும். அவர் தனித்து இல்லை என்று சமாதானம் பட்டுக் கொள்ளலாம். இந்த கதையில் என்னை கோபப்படுத்திய ஒரு வரி உண்டு. " பொம்பளைங்கறவ யாருன்னா மனசுல ஒருத்தன நெனச்சுக்கிட்டு, இன்னொருத்தனோட பேசிகிட்டு, மூன்றாவது ஆளுக்கு ஜாடை கஆட்டறவன்னு வரும். அட!! அப்போ ஆம்பளைங்கறவன் யாரு? பரம்பரை பரம்பரையா ஒரு குள ணத்தை கொண்டுகிட்டு வர்றதை "சம்பத்" என்கிறார். நானும் இதை நினைப்பதுண்டு. ஒருவர் மிகவும் கோபக்காரரா இருந்தா எத்தனை தலைமுறைக்கு முன்னால இருந்து இதை சுமந்து வாராரோன்னு நினைச்சால் அந்த தனிப்பட்ட நபர் மீது வருத்தம் வராது. பத்மநாபன் என்ற ராமுவின் நண்பரை பற்றிச் சொல்லும்போது அவரது குரல் ரொம்ப ஆச்சரியமானது. மெதுவாக பேசும் குரல் . காது கொடுத்து கேட்டு வைக்கும் குரல் . கொஞ்சம் கவனம் பிசகினாலும் அவர் சொன்னதை இழக்க நேரிடும் . எத்தனை விதமான மனிதர்களைக் கதைக்கு நடுவே நமக்கு அறிமுகம் செய்கிறார். பெண்களுக்கு ரொம்ப விஷயம் ஒரு நிமிஷத்துல தெரியுது. அதுவும் உடம்பு சம்பந்தப்பட்டதுன்னா ரொம்ப நல்லாவே தெரியுது. நான் ரசித்த ஒரு வரி. " சிரிப்பும் ஒரு மொழி தான். வார்த்தையை விட நிறைய விஷயங்களை சொல்லிடுது. கதையின் போக்கு கடைசியில் வேறு விதமாக போகிறது " ஒவ்வொருவருக்கும் ஒரு நியாயம் இருக்கும் . காரண காரியத்தோடு ஒத்து வர்ணம்ங்கிறது இல்ல . ஒரு நியாயம் இருக்கு . அதுபடி தான் வாழ்றாங்க." வித்தியாசமான நாவல். ஆண் நண்பர்கள் நால்வர் . ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். தலைப்பு "அவன் ஆனது" க்கான அர்த்தம் எனக்கு விளங்கவில்லை. என் பதிவை வாணிக்கும் ஆன்றோர் யாராவது அதற்கான பதிலைச் சொல்லலாம்.

04 May, 2025

# திரைப்பட விமர்சனம். # Tourist family திரைப்படங்களுக்கு தமிழ்ப் பெயர் வைப்பதற்கு சலுகைகள் இருந்த காலத்தில் அழகழகான தமிழ்ப் பெயர்கள் இருந்தன. இப்போ தேவையோ இல்லையோ ஆங்கிலப் பெயர்கள் தான். இப்படத்தின் இளம் இயக்குநர் : அபிஷன் ஜீவித் இசை : ஷான் ரோல்டன். "'ஆகாஷ் ஆஜாலே" நம்மை ஆட வைக்கும் பாடல் . ஒளிப்பதிவு : அரவிந்த் விஸ்வநாதன். எடிட்டர் : பரத் முக்கிய நடிகர்கள் : சசிக்குமார், சிம்ரன். எம் எஸ். பாஸ்கர், யோகி பாபு, மிதுன் ஜெய் ஷங்கர், கமலேஷ். முதல் கமென்ட்டில் ஒரு யூட்யூப் லிங்க் தந்திருக்கிறேன். அதில் இருக்கும் இந்த அழகான தொடக்க காட்சியை திரைப்படத்தில் எடுத்து விட்டார்கள். ஏன் என்று தெரியவில்லை. ஒரு குடும்பம் இலங்கையில் இருந்து அனுமதி இல்லாமல் கள்ளத் தோணி ஏறி இந்தியா வந்து விடுகிறது. அப்பா ( சசிக் குமார்.) , அம்மா ( சிம்ரன்) , இரண்டு பையன்கள் என்று அழகான குடும்பம். கேசவா காலனியில் குடியேறி விடுகிறார்கள். இரண்டரை மணி நேரம் அவர்களோடு கேசவா காலனியில் சந்தோஷமாக இருப்பதற்காவது இந்த படத்தை தியேட்டரில் பார்க்க வேண்டும். வரும் வழியில் ஏட்டை ரமேஷின் மனதோடு சேர்த்து நம் மனதையும் கொள்ளை கொண்டு விடுகிறான் அந்த இரண்டாவது மகன் முரளி. நேரத்துக்கு தகுந்த கதை சொல்வதில் கில்லாடி. சின்னவன் சிரித்தே மயக்கினால் மூத்த மகன் பிறந்து வளர்ந்த நாட்டோடு காதலையும் இழந்த துக்கத்தை அழுத்தமாக முகத்தில் காட்டி மயக்குறான். ஆல் தோட்ட பூபதி ஆடிய சிம்ரன் இந்த படத்தில் ஆடாமலிருந்தால் நல்லா இருக்குமா? அதற்காக மேடையில் சின்ன சின்ன ஸ்டெப் போட வைத்திருக்கிறார் இயக்குநர். படம் முழுவதும் இலங்கைத் தமிழ் கொஞ்சுகிறது. ஓரிடத்தில் வெடிகுண்டு வீசப்பட சந்தேகம் அனுமதி இல்லாமல் நுழைந்து விட்ட குடும்பத்தின் மேல் படர்கிறது. லாஜிக் எதுவும் ஆராயாமல் பார்த்தால், ரொம்ப நேர் மறை கருத்துகள் பதித்து அழகாகத் தொடங்கப்பட்டு, அழகாக முடிக்கப்பட்ட இது ஒரு அழகோவியம்.

#செங்கொடி by பாக்யராஜ்

நாறும்பூநாதன் மறைவு கொஞ்சம் என்னை அதிகமாகவே தாக்கியதால் இரண்டு மூணு போஸ்ட் அந்த சமயத்தில் எழுதினேன். அது அடைந்து கொடுத்த இன்னொரு நட்பு. அப்போ முதல் நட்பு??? சொல்றேன். இது வீர தீர சூரன் 2 வந்த பிறகு 1 வர்ர மாதிரி. தோழர் டைரக்டர் பாக்யராஜ் ( பூர்ணிமா கணவர் பாக்கியராஜ் அல்ல. ) என்னைத் தொடர்பு கொண்டார். முக நூல் தான் இப்போ எல்லோரையும் சந்தேகிக்கும் " நல்ல பழக்கத்தை????" சொல்லிக் கொடுத்திருக்கிறதே. கொஞ்சம் தயக்குத்துக்குப் பின் பேசினேன். ஆனால் அவர் நிஜமாகவே இயக்குநர் தான்.அவர் "செங்கொடி " என்றொரு படம் எடுத்திருப்பதாகவும் அது கேன்ஸ் விழாவில் பங்கெடுத்திருப்பதாகவும் சொன்னார். அதன் டிரெயிலரின் யூட்யூப் லிங்க் அனுப்பி வைத்தார். இணைத்திருக்கிறேன். பாருங்கள். நல்ல படங்கள் எடுப்பவர்களை ஆதரித்தால் தான் நல்ல படங்கள் எடுப்பது அதிகரிக்கும். ஆதரிப்போம். https://youtu.be/NVEHJhpywtU?si=9C6dIxja0RmQIbVu

01 May, 2025

45 ஆண்டுகளுக்கு முன் இது போன்ற ஒரு இளங்காலையில் அவசரமாக எழுந்தேன். அன்று எங்களுக்குத் திருமணம். அலங்காரமும் பரபரப்பும் சலசலப்புமாக இயங்கும் திருமண மண்டபம் இல்லை. எந்த ஆணும் பெண்ணும் அந்த ஒரு நாள் மட்டும் அத்தனை பேர் முன்னாலும் கதாநாயகர்களாக நடமாடுவார்கள். அந்த வாய்ப்பு எங்களுக்கு இல்லை. ஆனால் துணிச்சலாக என் தாயிடம் பேசிப் பார்த்தும் அவர்கள் " உன் முடிவை நீ எடுத்துக் கொள். என் சம்மதம் உனக்கில்லை" என்று சொன்னதால் வீட்டை விட்டு கிளம்பி வந்தேன். அதனால் எங்கே கண்டு பிடித்து விடுவார்களோ என்ற அச்சமுமில்லை. புதுத் துணி இல்லை. ஆனால் நெடு நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது என்ற நிம்மதி மட்டும் இருந்தது. கையில் ஒரு அரசுப்பணி இருந்ததால் எப்படியும் வாழ்ந்து காட்டுவோம் என்ற துணிச்சல் இருந்தது. என்னுடன் என் ஒரே ஒரு தோழி நாகர்கோயிலில் பணி புரிந்ததால் உடன் இருந்தாள். அவருடன் தந்தை, சகோதரன், நண்பர்கள் எனப் பலர் இருந்தனர். ஒரு காஃபி அருந்தி விட்டு திருமண பதிவு அலுவலகம் செல்லலாம் என எல்லோரும் கிளம்பினோம். டீக்கடையில் தொங்க விட்டிருந்த செய்தித் தாளில் அதிர்ச்சி தலைப்புச் செய்தி. " நடிகை ஷோபா தற்கொலை செய்து கொண்டார்" (02.05.1980) தற்கொலைக்குக் காரணம் காதல் தான். எனக்கு ஏன் எங்கள் இருவருக்குமே ரொம்ப பிடித்த நடிகை. எங்கள் மன நிலை எப்படி இருந்திருக்கும். அப்புறம் எல்லாம் சுமுகமாகவே நடந்தது. என் மாமனார் திருமணத்தை முன்னின்று நடத்தி வாழ்த்தி " மகளே!! இனி உன் சமத்து" என்று நெல்லை திரும்பி விட்டார். நாங்கள் நாகர்கோயிலில் தங்கி விட்டோம் நண்பர் ஒருவர் ஏற்பாடு செய்திருந்த வீட்டில் ஆளுக்கு ஒரு சூட்கேசுடன். இனி தான் ஒவ்வொரு பொருளாக வாங்கி அந்த அறைகளை சேர்த்து வீடாக்க வேண்டும். இன்று நினைத்து பார்க்கிறேன்.இன்றைய என் வாழ்க்கை எவ்வளவு உயரத்தில் இருக்கிறது. அங்கிருந்து இங்கே வர எத்தனை போராட்டங்கள். எத்தனை அதிர்ச்சி நிகழ்வுகள். எத்தனை தோல்விகள். அதை விட அதிகமாய் எத்தனை வெற்றிகள். நண்பர்களே இன்று 46 ஆவது திருமண நாளைக் கொண்டாடத் தொடங்கி இருக்கும் எங்களை வாழ்த்துங்களேன். நல்ல ஆரோக்கியத்தோடு எங்கள் வாழ்வைத் தொடர வேண்டும் என்று.