26 May, 2025
ஒரு விவாதத்துக்கு உரிய விஷயத்தைத் தான் இன்று எழுதப் போகிறேன்.
நான் சொல்வது ஒரு நிகழ்வை ஆதரித்தா எதிர்த்தா என்று சந்தேகம் எழும்பலாம். உங்கள் ஆக்டோபஸ் கரங்களை அகல அகல விரித்துக் கொண்டே செல்லாதீர்கள் என்று தான் சொல்ல வருகிறேன்.
"நீங்கள் உடை உடுத்தும் முறையினால் ஒரு ஆண் தனக்கு கிடைக்கும் குழந்தைகள், முதியபெண்கள் ஆகியவர்களை வரைமுறை இல்லாமல் வன்புணர்வு செய்கிறான் என்று சப்பைக் கட்டு கட்டும் புண்ணியவான்களே!! அவனுக்கு மிக மிக அருகில் இருப்பது அவன் தாயும் சகோதரிகளும் அல்லவா? அவர்களிடம் முறைகேடாக நடக்கக் கூடாது என்று தெரிந்த ஒருவனுக்கு ஒரு குழந்தையிடமோ அந்நியப் பெண்ணிடமோ தவறாக நடக்கக் கூடாது என்ற அறிவு எப்படி இல்லாமல் போகும்.
Sleeveless blouse அணிந்த ஒரு பெண் வெயிலுக்கு நிறைய தண்ணீர் குடியுங்கள் என்று மேடையில் சொன்னால் " வெயிலுக்குத் தகுந்த உடை தான் நீங்கள் போட்டு இருக்கிறீர்களா? . " என ஒரு பத்திரிகையாளர் கேட்கிறார். அவர் கேட்டது கை இல்லாத உடை அணிந்ததைத் தான். ஆனால் பிரச்னை ஆன உடன் காட்டன் சாரியைக் கேட்டதாக மாற்றி விட்டார்கள். அந்த பெண் புத்திசாலித் தனமாக ஒன்று செய்திருக்கலாம். அவர்கள் கேள்வி புரிந்தாலும் புரியாதது போல் " ஆம் அதனால் தான் பருத்தி புடவை கட்டி வந்திருக்கிறேன்" என்று கடந்து போயிருக்கலாம். அந்தப் பெண்ணின் தைர்யம் தான் அங்குள்ள ஆண்களை அவளுக்கு எதிராகத் திருப்புகிறது.
இப்பொழுது என் உடல் என் உரிமை என்று புறப்படுபவர்களிடம் வருகிறேன். ஒரு ஆண் இதே போல் என் உடல் என் உரிமை என தனது பேன்ட்டை எவ்வளவு இறக்கமாக போட முடியுமோ அவ்வளவு இறக்கமாகப் போட்டு உங்கள் முன் நடந்து சென்றால் அருவருப்பீர்களா மாட்டீர்களா? ஆண்கள் சர்ட்டை கழற்றி போட்டால் ஒண்ணும் சொல்வதில்லையே என்கிறீர்கள். நம் வீட்டில் , தெருவில், அக்கம் பக்கத்தில் அப்படி பலரை நாம் பார்க்கிறோம்.்சாதாரணமாகத் தானே கடக்கிறோம்.அதுவும் இதுவும் ஒன்றா?
என் உடல் என் உரிமை என்று தானே நினைத்த இடத்தில் மூத்திரம் ஒழித்துக் கொண்டு இருந்தவர்களை ரொம்பக் கஷ்டப்பட்டு இப்போ மாற்றி இருக்கிறார்கள்.
ஆண் தன் ரசனையையோ அனுபவித்தலையோ நேர்மையான கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும் என்று அழுத்திச் சொல்வதற்குப் பதிலாக பெண் அதை விட மோசமாக இறங்குவது எவ்வகையில் நியாயம்.
கலாசாரக் காவலர்களே!! மார்பின் பிளவு தெரியக் கூடாது என்றீர்கள் சரி. அடுத்து இடுப்பின் மடிப்பைக் காட்டாதே என்றீர்கள். இப்போ தோள்களைக் காட்டாதே என்பதால் தான் சொல்கிறேன் உங்கள் ஆக்டோபஸ் கரங்களை நீள நீளமாய் நீட்டாதீர்கள்.
எந்த விஷயமும் அழுத்திக் கட்டுப்படுத்தும் போது வெடித்து மீறி விரியும்.
இது என்ன பட்டி மன்றத் தீர்ப்புப் போல என எண்ணாதீர்கள் இருவர் பக்கமும் இருக்கும் தவறைச் சுட்டிக் காட்ட விரும்பினேன்.
(பி.கு: இன்னைக்கு என்னா அடி விழப் போகுதோ. உதவிக்கு உங்களைத் தான் நம்பி இருக்கிறேன். தயாரா இருங்க)
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!