Bio Data !!

17 May, 2025

# நாவல் அவன் ஆனது

நாவல் : அவன் ஆனது. ஆசிரியர் : சா கந்தசாமி. காலச் சுவடு பதிப்பகம். விலை 275 ரூபாய். முதல் பதிப்பு 1981. பக்கங்கள் 215 . கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ஒரு நாவல். முதல் பதிப்பை எதனால் குறிப்பிடுகிறேன் என்றால் இன்றைய நம் அறிவை பயன்படுத்தி குற்றம் கண்டுபிடிக்காமல் அன்றைய காலகட்டத்தில் நம்மை நிறுத்தி வாசிக்க வேண்டும் என்பதால்தான். கதை சிவ ஷண்முகம் என்பவர் தன்மையில் சொல்வதாக எழுதப்பட்டிருக்கிறது. கதை நாயகன் நெடுக "நான்" என்றே எழுதி வருகிறார். அவரது தன்னம்பிக்கை நிறைந்த நண்பன் ராமு. அவரை நன்கு புரிந்து ஏற்றுக் கொண்ட மனைவி கமலா. ராமு கிட்ட எந்த காரியமும் நிற்காது . ஏதாவது புரட்டி பணம் போட்டு நடத்தி முடித்து விடுவார். தன்னிடம் இல்லாத, வெளியே தெரியாத தைரியம் ராமுவிடம் இருந்தது என்கிறார். பொதுவாகவே நட்போ வாழ்க்கைத் துணையோ தன்னிடம் இல்லாதது யாரிடம் இருக்கிறதோ அவரிடம் தான் ஈர்ப்படையும். ராமுவிடம் நாயகனுக்கான ஒட்டுதலுக்கு இது காரணமாய் இருக்கலாம். " எனக்கு ஒன்னும் தெரியாது என்கிறது எனக்கு தெரியும்" என்று சிவஷண்முகம் சொல்வார். ஒன்னும் தெரியாதுங்கறதே தெரிஞ்சுக்காம எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசுறவங்களை சமாளிக்கிறது தான் ரொம்ப கஷ்டம். சிவ ஷண்முகத்தின் தந்தை ஒரு கோபத்தில் தன் மனைவியை கிணற்றில் போட்டு கொன்று விடுவார் அவரைப் பற்றி சொல்லும் போது " அவர் கொலையும் செய்வார். புண்ணியமும் செய்வார். நாளாக ஆக கொலை மறந்து புண்ணியம் மட்டுமே நிலைத்து நிற்கும் என்கிறார். கமலா கோபம் வந்தால் பேச மாட்டாள் ரொம்ப கோபம் வந்தால் சாப்பிட மாட்டாள் ஆனால் இது ரொம்ப நாள் வரை அவள் கணவனுக்குத் தெரியவில்லை. ஏனென்றால் அவளை சாப்பிட்டாளான்னு கேட்கிறது கூட இல்லை . இப்படித்தானே பல பெண்களின் கோபம் அந்தக் காலத்தில், மௌனத்தில் பிறந்து மௌனத்திலேயே முடிந்துவிடும். ஆசிரியர் சிலருடைய குணாதிசயங்களை பற்றி சொல்லும் போது அத்தகையோர் இன்றும் நம்மிடையே இருப்பது தெரிகிறது. திருவேங்கடம் என்னும் நண்பரை பற்றிச் சொல்லும் போது " அவர் தன் மனைவி சொல்றதை எல்லாம் கேட்க மாட்டார். அவர் மனைவி அவரை விட்டுப் பிரிந்ததற்கு அதுவும் காரணமாக இருக்கலாம்" என்கிறார். " யாராவது அழுத்திச் சொன்னால் என்னால் மறுக்க முடிவதில்லை. ஏற்றுக்கொண்டு பின்னால் கவலைப்படுவதே வழக்கமாகிவிட்டது " என்கிறார். பல பெண்களுக்குத் தன் கணவர் மேல் இந்த குறை இருக்கும். அவர் தனித்து இல்லை என்று சமாதானம் பட்டுக் கொள்ளலாம். இந்த கதையில் என்னை கோபப்படுத்திய ஒரு வரி உண்டு. " பொம்பளைங்கறவ யாருன்னா மனசுல ஒருத்தன நெனச்சுக்கிட்டு, இன்னொருத்தனோட பேசிகிட்டு, மூன்றாவது ஆளுக்கு ஜாடை கஆட்டறவன்னு வரும். அட!! அப்போ ஆம்பளைங்கறவன் யாரு? பரம்பரை பரம்பரையா ஒரு குள ணத்தை கொண்டுகிட்டு வர்றதை "சம்பத்" என்கிறார். நானும் இதை நினைப்பதுண்டு. ஒருவர் மிகவும் கோபக்காரரா இருந்தா எத்தனை தலைமுறைக்கு முன்னால இருந்து இதை சுமந்து வாராரோன்னு நினைச்சால் அந்த தனிப்பட்ட நபர் மீது வருத்தம் வராது. பத்மநாபன் என்ற ராமுவின் நண்பரை பற்றிச் சொல்லும்போது அவரது குரல் ரொம்ப ஆச்சரியமானது. மெதுவாக பேசும் குரல் . காது கொடுத்து கேட்டு வைக்கும் குரல் . கொஞ்சம் கவனம் பிசகினாலும் அவர் சொன்னதை இழக்க நேரிடும் . எத்தனை விதமான மனிதர்களைக் கதைக்கு நடுவே நமக்கு அறிமுகம் செய்கிறார். பெண்களுக்கு ரொம்ப விஷயம் ஒரு நிமிஷத்துல தெரியுது. அதுவும் உடம்பு சம்பந்தப்பட்டதுன்னா ரொம்ப நல்லாவே தெரியுது. நான் ரசித்த ஒரு வரி. " சிரிப்பும் ஒரு மொழி தான். வார்த்தையை விட நிறைய விஷயங்களை சொல்லிடுது. கதையின் போக்கு கடைசியில் வேறு விதமாக போகிறது " ஒவ்வொருவருக்கும் ஒரு நியாயம் இருக்கும் . காரண காரியத்தோடு ஒத்து வர்ணம்ங்கிறது இல்ல . ஒரு நியாயம் இருக்கு . அதுபடி தான் வாழ்றாங்க." வித்தியாசமான நாவல். ஆண் நண்பர்கள் நால்வர் . ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். தலைப்பு "அவன் ஆனது" க்கான அர்த்தம் எனக்கு விளங்கவில்லை. என் பதிவை வாணிக்கும் ஆன்றோர் யாராவது அதற்கான பதிலைச் சொல்லலாம்.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!