28 May, 2025
#இடியாப்பம் ஜோக்
எல்லோரும் இடியாப்பம் கதை சொல்லும் போது நாம சொல்லாம இருக்கலாமா?
எங்க தெருவுக்கும் ஒரு இடியாப்பக் காரர் வருவார். ஆனால் வரும் போதே காலை ஒன்பதரை மணி ஆகிடும். கேட்டா தினம் ஒரு கதை சொல்வார். அது உண்மைக் கதையா கற்பனைக் கதையா அவருக்கே வெளிச்சம். நான் சொல்வேன் "எட்டே முக்காலுக்கு உள்ள வந்தாத்தான் நான் வாங்க முடியும். ஒன்பது மணிக்கு என் வீட்டுக்கார்ருக்கு நான் சாப்பாடு கொடுக்கணும்."
ஒரு நாள் ஒன்பது மணிக்கு "இடியாப்பம்" னு சத்தம் கேட்டதும் பாத்திரம் எடுத்துக் கிட்டு வெளியே ஓடினேன். ஆளைக் காணவில்லை. எங்க தெருவின் முக்கில் ஒரு ஹோட்டல் இருக்குது. சரி அங்கே போய் இட்லி வாங்கிடுவோம்னு நடந்தேன். கடையை நெருங்கும் போது " இடியாப்பம்" னு சத்தம்.
அட அடுத்த தெருவுல தான் நிற்கிறார் போல வந்திடுவார்னு நின்னா கொஞ்ச நேரமா காணோம். இங்கே இருந்து இங்கே வர இவ்வளவு நேரமான்னு பார்த்திட்டு கடையில் பாத்திரத்தைக் கொடுத்து இட்லி வையுங்கன்னு சொல்லியாச்சு. நான் பொதுவா பாத்திரம் கொண்டு போயிடுவேன். பார்சல் வாங்குறதில்ல.
அவங்க இட்லி வைக்க ஆரம்பிச்ச உடனே "இடியாப்பம்" இப்போ குரலோடு ஆளும் அவதரித்தார். நான் என்ன செய்யலாம்னு யோசிக்கிறதுக்கு உள்ள கடைக்கார அக்கா இட்லியைத் திருப்பி அவங்க பாத்திரத்திலேயே வைத்து " நீங்க இன்னைக்கு இடியாப்பமே வாங்கிக்கங்க நான் இங்கே தானே இருக்கப் போறேன்" என்றார்கள் பெருந்தன்மையாக.
அவரிடம் இடியாப்பம் கேட்டால் " அவங்க தப்பா நினைச்சுக்க மாட்டாங்கல்ல" என்கிறார். போங்கய்யான்னு மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டு "இல்ல அவங்க தோழி தான் என்றேன்.
ஏகோபித்த ஆதரவைப் பெற்றதைக் கொண்டு இடியாப்பத்தை தேசிய உணவாக்கி எல்லோருக்கும் தங்கு தடை இடையின்றி கிடைக்க வழி வகை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!