Bio Data !!

04 May, 2025

# திரைப்பட விமர்சனம். # Tourist family திரைப்படங்களுக்கு தமிழ்ப் பெயர் வைப்பதற்கு சலுகைகள் இருந்த காலத்தில் அழகழகான தமிழ்ப் பெயர்கள் இருந்தன. இப்போ தேவையோ இல்லையோ ஆங்கிலப் பெயர்கள் தான். இப்படத்தின் இளம் இயக்குநர் : அபிஷன் ஜீவித் இசை : ஷான் ரோல்டன். "'ஆகாஷ் ஆஜாலே" நம்மை ஆட வைக்கும் பாடல் . ஒளிப்பதிவு : அரவிந்த் விஸ்வநாதன். எடிட்டர் : பரத் முக்கிய நடிகர்கள் : சசிக்குமார், சிம்ரன். எம் எஸ். பாஸ்கர், யோகி பாபு, மிதுன் ஜெய் ஷங்கர், கமலேஷ். முதல் கமென்ட்டில் ஒரு யூட்யூப் லிங்க் தந்திருக்கிறேன். அதில் இருக்கும் இந்த அழகான தொடக்க காட்சியை திரைப்படத்தில் எடுத்து விட்டார்கள். ஏன் என்று தெரியவில்லை. ஒரு குடும்பம் இலங்கையில் இருந்து அனுமதி இல்லாமல் கள்ளத் தோணி ஏறி இந்தியா வந்து விடுகிறது. அப்பா ( சசிக் குமார்.) , அம்மா ( சிம்ரன்) , இரண்டு பையன்கள் என்று அழகான குடும்பம். கேசவா காலனியில் குடியேறி விடுகிறார்கள். இரண்டரை மணி நேரம் அவர்களோடு கேசவா காலனியில் சந்தோஷமாக இருப்பதற்காவது இந்த படத்தை தியேட்டரில் பார்க்க வேண்டும். வரும் வழியில் ஏட்டை ரமேஷின் மனதோடு சேர்த்து நம் மனதையும் கொள்ளை கொண்டு விடுகிறான் அந்த இரண்டாவது மகன் முரளி. நேரத்துக்கு தகுந்த கதை சொல்வதில் கில்லாடி. சின்னவன் சிரித்தே மயக்கினால் மூத்த மகன் பிறந்து வளர்ந்த நாட்டோடு காதலையும் இழந்த துக்கத்தை அழுத்தமாக முகத்தில் காட்டி மயக்குறான். ஆல் தோட்ட பூபதி ஆடிய சிம்ரன் இந்த படத்தில் ஆடாமலிருந்தால் நல்லா இருக்குமா? அதற்காக மேடையில் சின்ன சின்ன ஸ்டெப் போட வைத்திருக்கிறார் இயக்குநர். படம் முழுவதும் இலங்கைத் தமிழ் கொஞ்சுகிறது. ஓரிடத்தில் வெடிகுண்டு வீசப்பட சந்தேகம் அனுமதி இல்லாமல் நுழைந்து விட்ட குடும்பத்தின் மேல் படர்கிறது. லாஜிக் எதுவும் ஆராயாமல் பார்த்தால், ரொம்ப நேர் மறை கருத்துகள் பதித்து அழகாகத் தொடங்கப்பட்டு, அழகாக முடிக்கப்பட்ட இது ஒரு அழகோவியம்.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!