Bio Data !!

01 May, 2025

45 ஆண்டுகளுக்கு முன் இது போன்ற ஒரு இளங்காலையில் அவசரமாக எழுந்தேன். அன்று எங்களுக்குத் திருமணம். அலங்காரமும் பரபரப்பும் சலசலப்புமாக இயங்கும் திருமண மண்டபம் இல்லை. எந்த ஆணும் பெண்ணும் அந்த ஒரு நாள் மட்டும் அத்தனை பேர் முன்னாலும் கதாநாயகர்களாக நடமாடுவார்கள். அந்த வாய்ப்பு எங்களுக்கு இல்லை. ஆனால் துணிச்சலாக என் தாயிடம் பேசிப் பார்த்தும் அவர்கள் " உன் முடிவை நீ எடுத்துக் கொள். என் சம்மதம் உனக்கில்லை" என்று சொன்னதால் வீட்டை விட்டு கிளம்பி வந்தேன். அதனால் எங்கே கண்டு பிடித்து விடுவார்களோ என்ற அச்சமுமில்லை. புதுத் துணி இல்லை. ஆனால் நெடு நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது என்ற நிம்மதி மட்டும் இருந்தது. கையில் ஒரு அரசுப்பணி இருந்ததால் எப்படியும் வாழ்ந்து காட்டுவோம் என்ற துணிச்சல் இருந்தது. என்னுடன் என் ஒரே ஒரு தோழி நாகர்கோயிலில் பணி புரிந்ததால் உடன் இருந்தாள். அவருடன் தந்தை, சகோதரன், நண்பர்கள் எனப் பலர் இருந்தனர். ஒரு காஃபி அருந்தி விட்டு திருமண பதிவு அலுவலகம் செல்லலாம் என எல்லோரும் கிளம்பினோம். டீக்கடையில் தொங்க விட்டிருந்த செய்தித் தாளில் அதிர்ச்சி தலைப்புச் செய்தி. " நடிகை ஷோபா தற்கொலை செய்து கொண்டார்" (02.05.1980) தற்கொலைக்குக் காரணம் காதல் தான். எனக்கு ஏன் எங்கள் இருவருக்குமே ரொம்ப பிடித்த நடிகை. எங்கள் மன நிலை எப்படி இருந்திருக்கும். அப்புறம் எல்லாம் சுமுகமாகவே நடந்தது. என் மாமனார் திருமணத்தை முன்னின்று நடத்தி வாழ்த்தி " மகளே!! இனி உன் சமத்து" என்று நெல்லை திரும்பி விட்டார். நாங்கள் நாகர்கோயிலில் தங்கி விட்டோம் நண்பர் ஒருவர் ஏற்பாடு செய்திருந்த வீட்டில் ஆளுக்கு ஒரு சூட்கேசுடன். இனி தான் ஒவ்வொரு பொருளாக வாங்கி அந்த அறைகளை சேர்த்து வீடாக்க வேண்டும். இன்று நினைத்து பார்க்கிறேன்.இன்றைய என் வாழ்க்கை எவ்வளவு உயரத்தில் இருக்கிறது. அங்கிருந்து இங்கே வர எத்தனை போராட்டங்கள். எத்தனை அதிர்ச்சி நிகழ்வுகள். எத்தனை தோல்விகள். அதை விட அதிகமாய் எத்தனை வெற்றிகள். நண்பர்களே இன்று 46 ஆவது திருமண நாளைக் கொண்டாடத் தொடங்கி இருக்கும் எங்களை வாழ்த்துங்களேன். நல்ல ஆரோக்கியத்தோடு எங்கள் வாழ்வைத் தொடர வேண்டும் என்று.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!