26 May, 2025
"நிர்மலா" நாவல் விமர்சனம்.
நாவலின் பெயர் : நிர்மலா
ஆசிரியர் : பிரேம் சந்த் தமிழில் கா.ஸ்ரீ.ஸ்ரீ.
பூம்பாவை பதிப்பகம்.
விலை ரூ 240/-
பக்கங்கள் 312
முதல் பதிப்பு : 1941
இரண்டாம் பதிப்பு : 2019
ரொம்ப முன்னாடி உள்ள கால கட்டத்தில் எழுதிய நாவல்கள் வாசிப்பது எனக்குப் பிடிக்கும். நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையை ஓரளவு தெரிந்து கொள்ளலாம். அதனால் தான்.
பாபு உதயபானு குடும்பத் தலைவன். கல்யாணி அவர் மனைவி. இவர்களுக்கு நிர்மலா, கிருஷ்ணா என்று இரண்டு பெண் குழந்தைகள்.
நிர்மலாவுக்கு திருமண ஏற்பாடு நடக்கும் போது தன் தம்பி சந்திரன் மிகவும் குறும்புக்காரனாய் இருக்கிறானே அவனை விரட்டாமல் தன்னை ஏன் வீட்டை விட்டு அனுப்ப அவசரப்படுகிறார்கள் என்று ஆதங்கப் படுகிறாள். திருமணம் செய்விப்பதை தன்னை வீட்டை விட்டு விரட்டுவதாக நினைக்கிறாள்.
கல்யாணி தன் கணவனிடம் "நான் போடும் சாப்பாடு தவிர வேற வழியில்லை என்று நீங்கள் நினைத்தது தானே இதற்கு காரணம்" என்று தன்னை மதிக்காததை எதிர்த்து பேசும் போது "ஆஹா ஒரு புரட்சிகரமான பெண்ணின் கதை தான் போல" என்று தோன்றியது .
திடீரென்று பாபு உதயபானு இறந்து போக நிர்மலாவின் நிச்சயித்த திருமணம் நின்று தோத்தாராம் என்னும் வயதானவர் ஒருவருடன் நடக்கிறது. அவள் கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்து , அவள் சொல்வது எல்லாம் கேட்டு , உடலால் அவளுக்கு தர முடியாத சுகத்தை ஈடு செய்ய நினைக்கிறார் அவர்.
மனோதத்துவத்தின் மென்மையான பகுதியை ஆசிரியர் தொட்டிருப்பார். தோத்தாராமின் மூத்த மகன் மன் ஸாராம் இப்பொழுது எல்லாம் தனக்கு வேண்டியதை தன்னிடம் இயல்பாக கேட்கிறான் என்று நிர்மலா சொல்ல , அவன் ஏன் அக்காவிடம் கேட்காமல் உன்னிடம் கேட்கிறான் என்பார். காரணம் மன்சா நிர்மலாவை விட ஒன்றிரண்டு வயதே இளையவன். தன் மகனை விட ஒன்று இரண்டு வயதே பெரியவளை மனைவியாக்கும் போது எதுவும் யோசிப்பதில்லை. பின் வயதுப் பிரச்சினையால் கவனிக்காமல் இருந்தால் சித்திக் கொடுமை, கவனித்தால் தப்பான அர்த்தம். இந்த மனநிலை காலம் காலமாய் மாறவில்லையே .
பெண் மனம் ஆழமானது என்பார்கள். காரணம் அவள் பிறர் மனதில் இருப்பதை உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசினாலும், எளிதில் படித்து விடுவாள் . ஆனால் வெளிப்படுத்த மாட்டாள். தேவைப்படும்போது ஒற்றை வரியில் எதிராளியின் முகத்திரையை கிழித்து விடுவாள் .
மன்ஸாவை நிர்மலாவிடமிருந்து பிரிக்க அவன் பள்ளியில் இருந்தால் நன்றாக படிப்பான், போன்ற பல உப்பு சப்பில்லாத காரணங்களைச் சொல்ல புரிந்துகொண்ட மன்ஸா பள்ளியிலேயே தங்கி விடுவான். ஆனால் அவன் மேல் ஏற்பட்ட சந்தேகத்தால் மேலும் உடல் பலவீனப்பட்டுப் போவதை அறிந்த நிர்மலா தன் கணவனிடம் " ஒருவேளை என் பொருட்டு அவனை வீட்டுக்கு அழைத்து வராமல் இருந்தால் என்னை என் வீட்டுக்கு அனுப்பி விடுங்கள் அவனை இங்கே அழைத்து வாருங்கள் " என்பாள்.
தோதாராம் நிர்மலாவையும் மன்ஸாவையும் பிரித்து வைக்கப் போட்ட காரணத் தோரணங்கள் வார்வாராய் கிழிந்து தொங்கின. அவர் முகம் வெளுத்து வெளியேறுவார் .
அப்போதும் அவர் மனதின் சந்தேகப் பிசாசு கேள்வி கேட்கும் "மன்ஸா உடம்பு சரியில்லை என்று சொன்னது வீட்டிற்கு திரும்பி வருவதற்காகச் சொன்ன நாடகமா?" முன்னும் போக விடமாட்டார்கள். பின்னும் செல்ல விட மாட்டார்கள். இந்த சந்தேக பிராணிகள்.
இந்த அர்த்தமற்ற சந்தேகத்தால் மகனையே இழக்க நேருகிறது. வீட்டிலிருந்து பள்ளி விடுதியில் போய் சேர்ந்த மகனுக்குத் தன் தந்தையின் விபரீத சந்தேகம் புரிந்ததே இறப்புக்கு காரணமாகிறது.
கதை நெடுக மனோதத்துவம் அழகாகத் தொட்டுச் செல்லப்படும். கிழவர்கள் ஏன் சந்தேகக்காரர்களாக இருக்கிறார்கள் என்று ஒரு கேள்வி கதையில் எழும் . நான் கிழவர்கள் என்ற இடத்தில் கணவர்கள் என்று போட்டுக் கொண்டேன். பதிலைப் பாருங்கள் " நான் இம்மடந்தையை சந்தோஷமாக வைத்துக் கொள்ளவில்லை என்ற திருட்டு உணர்ச்சி தான் ஒன்றும் இல்லாததற்கெல்லாம் அவர்களை சந்தேகப்பட வைக்கிறது" எவ்வளவு நுண்ணிய ஆராய்ச்சி.
கதையின் முடிவில் என் எண்ணம் வலுப்பட்டது. ஒரு விஷயத்தைச் சொன்னால் வருத்தப்படுவார்கள் என்று ஊமையாய் இருந்தால் அந்த மௌனம் தரும் கற்பனை இன்னும் கொடுமையானதாக இருக்கும்.
தான் ஒரு துரதிர்ஷ்ட கட்டை. தன் நிழல் பட்டாலே யாரும் அழிந்து விடுவார்கள் என்று சிலர் நினைப்பார்கள். அப்படி நினைத்து ஒடுங்கும் நிர்மலாவின் கதை தான் " "நிர்மலா"
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!