Bio Data !!

24 November, 2025

காதலின் ஐந்தாம் நிலை

திருமணத்தோட காதலின் நிலைகள் முடிவதா நினைக்கிறதால தான் காதலும் திருமணத்தோட நின்றிடுது. திரைப்படங்களில் திருமணத்துக்குப் பின்னான காதலின் நிலையைக் காட்டி இருந்தா பல பேர் காதலின் பக்கமே போக மாட்டாங்க. உண்மையான காதல்னா அது தூய்மையான அன்பினால் ஆனதா இருக்கணும். ஒருத்தருக்கு கஷ்டம் வந்தா அடுத்தவங்களுக்கு கண்ணீர் வரணும். சந்தோஷம் வரக் கூடாது. சந்தோஷம் எப்படி வரும்னு கேட்கிறீங்களா? வரும் ஈகோ இருந்தால் வரும். என்னமோ பெரிய ஆளுன்னு நினைச்சியே நல்லா கஷ்டப்படுன்னு மனசு சொன்னால் அது உண்மையான காதல் கிடையாது. இந்த ஈகோ கல்யாணத்துக்குப் பிறகு தான் வரும். உங்களுக்குத் தெரிந்த வெற்றிகரமான தம்பதியரை கவனிச்சுப் பாருங்க அவங்க நடுவில ஈகோ கொஞ்சம் கூட இருக்காது. பல காதல் திருமணங்கள் தான் தோல்வியைத் தழுவுகின்றன. காரணம் அங்கே தான் எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் வருகின்றன. இன்னொரு முக்கியமான பிரச்னை கவனிக்கப்பட வேண்டியது இருக்கிறது. இது முக்கியமா ஆண்கள் சிந்திக்க வேண்டியது. நம்மை சந்திக்க வீட்டுக்குத் தெரியாம வந்தாளே இப்போ நமக்குத் தெரியாம யாரையும் போய் பார்த்திடுவாளோ என்பது குடற் புழு போல் நெளிந்து கொண்டே இருக்கும். இதை அடியோடு நீக்கினால் தான் காதல் பிழைக்கும். இல்லையென்றால் திருமணம் ஆன பின் கூட காதல் சாகும். ஆனால் திருமணத்துக்கு முன்னான நிலைகளில் கூட தோல்விக்குப் பின் காதல் பிழைப்பதற்கான வாய்ப்பு உண்டு. திருமணத்துக்குப் பின் காதல் செத்தால் பாலூற்ற வேண்டியது தான். கதை முடிந்தது. இந்த பதிவுகள் எழுதத் தொடங்கியதும் நண்பர்கள் "எந்த காலத்துல இருக்கீங்க. இப்பல்லாம் இந்தக் காதல் மண்ணாங்கட்டி எல்லாம் கிடையாது. காமம் மட்டும் தான்" னு கூப்பிட்டு சொன்னாங்க. இருக்கட்டுமே நாம சொல்லித் தர்ரதை சொல்லித் தந்துகிட்டே இருப்போம். படிக்கும் போது படிக்கட்டும். (நிறைந்தது)

23 November, 2025

பட்ட மரம்

பட்ட மரம் போலாச்சே என் மனம். சந்தோஷ இலைகள் அத்தனையுமுதிர்த்து. ஒவ்வொரு முறை முடிந்து போனேன் என நான் அலமந்து போகும் போது ஒற்றை இலை துளிர்த்து பிழைத்துக் கொள் என உறுதியூட்டுகிறது. என் மனம் மலர்ந்ததும் சந்தோஷச் சிறகுகள் ஒவ்வொன்றாய் இணைந்து கொள்கின்றன. கிளை கொள்ளா இலைகள் பாரம் தாங்காமல் தள்ளாடினாலும் தாங்கிக் கொள்கிறேன். சந்தோஷ சிறகுகள் எப்படியும் உதிர்ந்து மனசு பட்ட மரம் போலாகும் என்றாலும். அணைத்துக் கொள்கிறேன் அன்னையின் வடிவாய்.

21 November, 2025

Avigitham #malayalam #movie

Hotstar ல Avigitham னு ஒரு மலையாளப் படம் பார்த்தேன். அவிகிதம் என்றால் "சட்டவிரோதமான உறவு" என்று அர்த்தமாம். பேரே தப்பு. இவர்கள் சொல்ல வரும் உறவு இன்றைய தேதியில் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு விட்டது. இயக்குநர் சென்னா ஹெக்டே பொதுவாகவே நான் பார்க்கும் நல்ல படங்களைப் பற்றி மட்டுமே எழுதுவது உண்டு. ஆனால் முதன் முறையாக ஒரு மட்டமான படத்தைப் பற்றி எழுத இருக்கிறேன். ஆம் மஹா மட்டமான கதைக்கரு. ப்ளாக் காமெடி என்ற பெயரில் இதை ஏற்றுக் கொள்ள வைத்திருக்கிறார்கள். எந்த நடிகர்களும் குறிப்பிடத் தக்கவர்களாய் இல்லை. ஒருவன் இரவு நேரத்தில் பக்கத்தில் உள்ள தோட்டத்தில் ஒரு ஆணும் பெண்ணும் சல்லாபிப்பதைப் பார்க்கிறான். ஆணை அடையாளம் தெரிகிறது. பெண்ணை யார் எனத் தெரியவில்லை. அவன் இந்த விஷயத்தை தன் தையல்கார நண்பரிடம் சொல்ல இருவரும் மறு நாள் வந்து பார்க்கும் போது அவர் ஒரு பெண்ணை அடையாளம் சொல்கிறார். அதற்கு அவர் சொல்லும் காரணம் தன் ஊரிலுள்ள பெண்களின் ப்ளவுஸ் அளவு எடுப்பதால் தன்னால் சரியாகச் சொல்ல முடியும் என்கிறார். கருமத்த!! இனி எப்படி ஆண் டெயிலர்களிடம் உறுத்தல் இல்லாம செல்ல. இவர்களை கையும் களவுமாகப் பிடிக்க ஒரு கூட்டமே தயாராகிறது. அந்தக் கூட்டத்தில் தையல்காரர் சொன்ன பெண்ணின் கணவர், கொழுந்தன், மாமனார் அத்தனை பேரும் உண்டு என்பது தான் வருத்தமான விஷயம். இது "மட்டமான படம்" என்று சொன்னதற்கு முக்கியமான காரணம். தன் வீட்டுப் பெண்ணை அவமானப்படுத்துவது தனக்கே ஆன அவமானம் என உணராத ஆண்கள். இவர்கள் கூடி ஒரு பரவசத்தோடு ப்ளான் போட்டு நடத்த அது அவர்களுக்கே அதிர்ச்சி தரும் நிகழ்ச்சியாகிறது. நிகழ்ச்சிகளைக் கோர்த்து இப்படி ஒரு படம் எடுத்த அந்த இயக்குநரின் மன நிலை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. வீட்டுப் பெண்களை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.. அப்படி மதிக்காத பட்சத்தில் அவர்களின் எந்த விதமான நடவடிக்கையையும் ஏற்றுக் கொள்ளத் தயாராகுங்கள். காலம் மாறி விட்டது.

15 November, 2025

#காதலின்நான்காம்நிலை

காதலின் நான்காவது நிலையில் போராட்டங்கள் அதிகரிக்கும். இருவருக்கும் தினசரி வாழ்க்கையே திண்டாட்டமாக இருக்கும். எதிர்ப்புகள் வலுக்கும். அதை நேர் கொள்ள இருவரும் இறுக்கமாக கைகளைப் பிணைத்துக் கொள்ள வேண்டும். இவ்வளவு கஷ்டங்கள் தேவை தானா என இருவரில் ஒருவர் நினைத்தாலும் அங்கே காதல் பணால். போராட்டங்கள் அதிகரிக்கும் போது ஒரு சில புல்லுருவிகள் உள் நுழையப் பார்க்கும். அது வரை பெரிதாய் ரசிக்காமல் இருந்தவர்களைக் கூட வேறொருவர் காதலிக்க ஆரம்பித்ததும் தனக்கு வேண்டும் எனத் தோன்றும். எப்படியாவது தட்டிப் பறிக்கத் துடிக்கும். இந்தப் போராட்டங்கள் பல ரூபம் எடுத்து வரும். ஆணவக் கொலைகளாய். பெற்றோரின் உணர்ச்சி மிகுந்த ப்ளாக் மெயில்களாய், மொட்டை கடிதாசிகளாய் , அனானிமஸ் கால்களாய். அன்பு என்பது மிகவும் அழுத்தமாக இருந்தால் மட்டுமே இந்த நிலையைக் கடந்து திருமணம் வரை செல்ல முடியும். அப்பாடா காதலின் நிலைகளை ஒரு வழியா முடிவுக்கு கொண்டு வந்து திருமணத்தில் விட்டுட்டீங்களான்னு கேட்டா இன்னும் முடியலங்க. இன்னும் இருக்குது.

13 November, 2025

காதல் தன் மூன்றாம் நிலைக்கு வரும் போது. இருவருக்கும் ஒருவர் மீது ஒருவருக்கு முழு நம்பிக்கை வருவதால் தம் காதலை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளத் துணிவோம். இதற்கு முன்பே பலர் நம்மைக் கவனித்திருப்பார்கள். நம் உடைகளில் காட்டும் தனிக் கவனம். நம் முகங்களில் ஏற்படும் பொலிவு. இப்படி ஒளிந்து மறைந்து பூக்கும் மலர் கூட தன் மணத்தால் தன்னிருப்பைக் காட்டிக் கொடுப்பது போல நம் உள்ளத்தில் பூத்திருக்கும் அன்"பூ" நம்மை வெளிப்படுத்தி இருக்கும். இப்போது எரிமலை தன் அக்கினிக் குழம்பை வெளியேற்றத் தொடங்கும். ஒருவரைப் பற்றி ஒருவரிடம் வதந்"தீ" பற்ற வைக்கத் தொடங்குவார்கள். "இவங்க அவ்வளவு நல்லவங்க கிடையாது. கவனமா பழகுங்க" என அறிவுறுத்தத் தொடங்குவார்கள். இந்த காதலுக்கு வரும் முட்டுக்கட்டை பல விதமாகத் தொடங்கும். ஒன்று நேரிலேயே குற்றங்குறைகளைச் சொல்வார்கள். அதை இருவரில் ஒருவர் ஏற்றுக் கொண்டாலும் காதல் அங்கேயே சாகும். இதில் அனேகமாக பெண்கள் வெளிப்படையாகவே கோபப்பட்டு பிரிவார்கள். ஆண்கள் தாம் ஏமாற்றப்பட்டோம் என்பது கௌரவக் குறைச்சல் என்பதால் அமைதியாக , கொஞ்சம் கொஞ்சமாகத் தன் உறவை அறுத்துக் கொள்வார்கள். காரணங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமலே தமக்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளாமலே "எதுக்கு வம்பு" என சத்தமில்லாமல் உறவை அறுத்துக் கொள்பவர்கள் உண்டு. ஏன் அறுத்துக் கொள்வார்கள் என்கிறேன் என்றால் பூத்து மணம் வீசிய அன்பு பறித்து எறியப்பட்டதன் காரணம் தெரியாதவர்களுக்கு அது ரணம். உயிர் பிரியும் கொடுமை. இருவருமே ஒருவர் மீது ஒருவர் முழு நம்பிக்கையோடு இருந்தால் பின் அவர்கள் வீட்டுக்குச் செய்தி போகும். பல சமயங்களில் அதற்கு முன்பே அரசல் புரசலாய் செய்தி எட்டி இருக்கும். வெளிப்படையாய் கண்டிக்க சாட்சியங்களுக்கு காத்துக் கொண்டு இருந்திருப்பார்கள். இருவரில் ஒருவர் மிரட்டலுக்கு பயந்து விட்டால் கூட காதல் அங்கேயே தற்கொலை செய்து கொள்ளும். எதிர்க்கும் துணிவும், இந்த அன்பு நிச்சயமாய் தமக்கு வேண்டும் என்ற திடகாத்திரமான பிடிவாதமும் இருந்து , இருவரும் காத்திரமாக தம் காதல்ல தொடர நினைத்தால் காதல் தன் அடுத்த நிலைக்குப் பயணிக்கும். நான்காம் நிலை தொடரும்.

10 November, 2025

#எண்ணச்சிதறல்கள். ஜாய் கிறிஸ்சில்டா. ஒரு காலத்தில் நடிகை விஜயலக்ஷ்மி வீடியோவா போட்டு ஓஞ்ச மாதிரி இப்போ இந்தப் பொண்ணு போட்டு கிட்டு இருக்கிறாங்க. அவங்க பேசுறதுல ஏமாற்றப்பட்ட ஆதங்கம் தெரியுது. வயிற்றில் குழந்தையோட ஏகப்பட்ட பிரச்னைகள் சந்திச்சதால குழந்தையின் உடல் நலத்திலும் குறைபாடு. முதல் கணவரிடத்தில் இருந்து விவாகரத்து வாங்கும் போது தன் மகனுக்கு ஒரு பாதுகாப்பு ஏற்படுத்திக் கொடுக்க நினைத்திருக்கிறார். அப்போ விவாகரத்து காலம தாழ்த்தப்படுதுங்கிறதால "உன்னையும் உன் மகனையும் நான் நல்லா கவனிச்சுக்கிறேன் . ஏன் compensation கேட்டு டிலே பண்றன்னு சொன்னதால ம்யூச்சுவலா விவாகரத்துக்குக் கையெழுத்து போட்டு கொடுத்ததா சொல்றாங்க. இப்போ இவரும் ஏதோ சூழலில் வயிற்றில் ஒரு குழந்தையையும் கொடுத்து விட்டு ஒதுங்கி விட்டார். அந்த ஆற்றாமை தான் பேச்சில் தெரிகிறது. பிள்ளைகளை வளர்த்தெடுக்கும் பொறுப்பு தாய்க்கு மட்டும் தானா? DNA test எல்லாம் இருக்கும் இந்த காலத்திலேயே என் பிள்ளை தானா என்ற கேள்வியை எழுப்புகிறார்கள். அப்போ அந்தக் காலம்??? நினைச்சே பார்க்க முடியவில்லை நம் முது பெரும. கிழவிகள் பட்டிருக்கக் கூடிய பாடுகளை. தான் பெரிய நடிகர்களுக்கு உடைகளைத் தேர்வு செய்யும் பணியில் இருந்ததாகவும் , ரங்கராஜ் ரொம்ப பொஸ்ஸஸிவ்வாக இருந்ததால் வேலையை விட்டு விட்டு வீட்டிலேயே இருந்து முழு நேரமாக அவரைக் கவனித்துக் கொண்டதாகச் சொல்கிறார்கள். அதே போல் ரங்கராஜ் பக்க செய்திகளும் இருக்கலாம். நமக்கு எது உண்மை எது பொய்யென சரியாகத் தெரியாத போது அதைப் பற்றி கருத்து சொல்ல நான் வரவில்லை. **இந்த நிகழ்விலிருந்து நாம் படிக்க வேண்டிய படிப்பினையை மட்டும் சொல்ல நினைக்கிறேன். நாம் சம்பந்தப்பட்ட என்ன முடிவை எடுக்க வேண்டும் என்றாலும் அதை அடுத்தவர் தீர்மானிப்பதையோ , அல்லது நம்மை அந்த முடிவுக்கு உந்தித் தள்ளுவதையோ நாம் அனுமதிக்கக் கூடாது. ** **நமக்கான முடிவை நாம் தான் எடுக்க வேண்டும். ஏற்கனவே திருமணம் ஆனவருடன் ரிலேஷன்ஷிப்பில் வர நேர்ந்தால் சட்டப்படி பிரிந்திருக்கிறார்களா என்பதை நிச்சயம் செய்து கொண்டே உறவில் இறங்க வேண்டும். At least குழந்தை உண்டாகும் முன்னாவது உறுதி செய்து கொள்ள வேண்டும்.** எந்த ஒரு கால கட்டத்திலும் அவர்கள் போடும் "தங்கங்களையும், தேவதைகளையும் , அழகிகளையும்" நம்பி நம் வேலையை விட்டு கொடுக்கவே கூடாது. பெற்றவர்கள் எவ்வளவு ஆசையோடு தம் பிள்ளைகளை தம் காலில் நிற்க வைக்கிறார்கள். அதை அவ்வளவு சுலபமாக உதறித் தள்ளி விடக் கூடாது. சில விஷயங்களை நிர்ப்பந்தித்தால் கூட, ஆரம்பத்தில் நாம் மாட்டோம் என்று அழுத்திச் சொல்லி விட்டால் அவர்கள் அதை ஏற்றுக் கொண்டு விடுவார்கள். அட்லீஸ்ட் இழப்பு கொஞ்சம் குறைவாகவாவது இருக்கும். சோஷியல் மீடியா நமக்கு நியாயம் பெற்றுத் தராது. அடுத்தடுத்த விஷயங்களுக்கு மாறி மாறிப் போய்க் கொண்டே இருப்பார்கள். அதனால் சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதைச் சரியாக செய்த பிறகே ஒரு உறவுக்குள் இறங்க வேண்டும். **மூன்றாவது நம் எதிர் பாலினர் அழகாக இருப்பதாலேயே அவர்கள் சொல்வதெல்லாம் உண்மையாக இருக்க வேண்டிய கட்டாயமில்லை. அழகையும் உண்மையையும் இணைத்தே சிந்திக்கிறோம். அதை முதன் முதலாக நிறுத்த வேண்டும். ** கவனமாக இருங்கள். யாருமே 100% அக்மார்க் நல்லவர்களல்ல. 100% நம்பத் தகுந்தவர்களுமல்ல. உஷாரா இருங்க.

09 November, 2025

#காதலின் இரண்டாம் நிலை

காதலின் முதல் நிலையிலேயே பல காரணங்களால் நிறுத்திக் கொள்பவர்களும் உண்டு. இரண்டு பேருக்கும் ஒருவரை ஒருவர் பிடிக்கும். ஆனா செட் ஆகாதுன்னு மேலே கொண்டு போகல என்பார்கள். நமக்குப் பிடித்தவர்களுக்கு நம்மைப் பிடித்திருக்கிறது என்பதே போதுமானதாய் இருக்கும். காதலின் இரண்டாம் நிலை. இருவருக்கும் பிடித்திருந்தாலும் உள்ளூற ஒரு சந்தேகம் ஊடாடிக் கொண்டே இருக்கும். உண்மையிலேயே நம்மைப் பிடிக்குமா? நம்மைப் போலவே பலரையும் பிடித்திருக்குமா? நம்மை நமக்காகவே பிடிக்குமா? வேறு ஏதேனும் hidden agenda இருக்குமா? இது இரண்டு பேருக்கு உள்ளுமே தனித் தனியாய் ஓடும். ஆனால் அதை மறைத்தபடியே பழகிக் கொண்டிருப்பார்கள். ஆரம்பப் பழக்கத்தில் எல்லோருமே நல்லவர்கள். தம் எதிர் மறை பகுதிகளை மறைத்துக் கொள்வார்கள். சிலர் நேர்மையாய் இருக்க விரும்புபவர்கள் தம் குறைகளைச் சொல்வார்கள். ஆனால் அந்த ஆரம்ப மோகத்தில் அது பெரிதாய்த் தெரியாது. நெருக்கமாக இருப்பது போல் தெரிந்தாலும் உள்ளுக்குள் கொஞ்சம் விலகியே இருப்பார்கள். ஆணோ பெண்ணோ இதைப் பெருமையாய் எடுத்துக் கொண்டு பிறரிடம் பறை சாற்றுபவர்களும் உண்டு. இருவருமே வெளியே தெரியாமல் கொண்டு போவதும் உண்டு. இந்த இரண்டாம் நிலை நீடிக்கும் போது ஆரம்ப ப்ரியம் குறைந்து விலகிக் கொள்வோம் இது நாம் நினைத்த அளவுக்கு அபூர்வமானதல்ல என்று நாகரீகமாக பிரிந்து விடுபவர்களும் உண்டு. நாம் இருவரும் ஒருவருக்காகவே ஒருவர் படைக்கப் பட்டு இருக்கிறோம். இவர் தான் என் குறைகளை நிறைவு செய்பவர். என் பலவீனத்தில் இவருக்கு பலம். என் பலத்தில் இவருக்குப் பலவீனம் எனப் புரிந்து ஈகோ இல்லாமல் இருந்தாலோ , இல்லை ஈகோ இல்லாதது போல் காட்டிக் கொண்டாலோ காதல் தன் மூன்றாம் நிலைக்கு நகரும்.

07 November, 2025

விளக்கம் சொல்; விலகிச் செல்.

என்னை அன்பு செய்தாய். காதலால் கனிவித்தாய். காரணங்கள் நான் தேடவில்லை. இப்போது விலகிச் செல்கிறாய். ஏன்? ஏன்? ஏன்? என அலைபாய்கிறது மனது. வலிக்கிறது தோழா விளக்கம் சொல். விலகிச் செல்.

03 November, 2025

இரண்டு நாட்களுக்கு முன் எனக்கு நிகழ்ந்த நிகழ்வு. நான் மாலையில எங்க தெருவிலிருந்து காரை மெயின் சாலைக்கு எடுக்கிறேன். என் அருகில் என் கணவர் அமர்ந்திருக்கிறார். எங்க தெரு முக்கில் நிறுத்தி இரண்டு பக்கங்களும் ஏதேனும் வாகனங்கள் வருகின்றனவா என்று பார்த்துப் பின் சாலையில் ஏறுகிறேன். வலது பக்கம் ஆறு கடைகள் தாண்டி பைக்கில் ஒருவர் வேகமாக வருகிறார். நம் காரைப் பார்க்கவில்லை என்பதைத் தெரிந்து கொண்டு பலமாக ஹார்ன் சத்தமெழுப்புகிறேன். அவர் போதையில் இருந்தாரோ, சிந்தனையில் இருந்தாரோ கவனித்த மாதிரியே தெரியவில்லை. வேகம் சிறிதும் குறையவில்லை. வேகமாக வந்து என் கார் அருகில் சடன் ப்ரேக் போட்டார். தெய்வாதீனமாக மோதவில்லை. நான் காரை நிறுத்தி ஜன்னல் கண்ணாடியை இறக்கினேன். அவர் ஒரு அருமையான கேள்வியை எழுப்பினார். "பார்த்து வர வேண்டாமா? " எதே!!! "நான் பார்த்துகிட்டுத் தாங்க வர்ரேன். நீங்க பார்க்கலைன்னு தான் இவ்வளவு சத்தம் எழுப்புறேன். நீங்க பார்க்காம, வேகமா வந்துட்டு என்னை பார்த்து வரக் கூடாதாங்கறீங்க" என்றேன். என் கணவரும் "கார் வர்ரதையே கவனிக்காம எவ்வளவு வேகமா வர்ரீங்க" என்றார். அவர் பேசாமல் வண்டியை நகர்த்தி விட்டார். நகர்த்தி கொஞ்ச தூரம் போய் என் காரின் எண்ணை அலைபேசியில் படமெடுத்துக் கொண்டார். நான் கார் ஓட்டப் பழகறேன். என் கணவர் சொல்லித் தரார்னு நினைச்சிருப்பாரோ? . என் வண்டி எண்ணை வைத்து தகவல் பார்த்தால் நான் கார் வாங்கி பதினைந்து வருடங்களுக்கு மேலாகிறது. RTO அலுவலகத்தில் இருந்து இன்னும் ஐந்து வருடங்களுக்கு சான்றிதழும் வாங்கியாச்சுன்னு தெரியும். நான் பதிமூணு வருடங்களாக கார் ஓட்டிக் கொண்டு இருக்கிறேன் என்பது பாவம் தம்பிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. முதல் இரண்டு வருடங்கள் ஓட்டுநர் வைத்திருந்தேன். இடையிடையே கூட்டமில்லாத பகுதியில் மட்டும் நான் ஓட்டுவேன். அப்படியே பழகினேன். ஆனாலும் இப்பல்லாம் தப்பு செய்றவங்களை யாரும் கேள்வி கேட்பதில்லையே! அதனால என்னை என்ன கேள்வி கேட்பாங்களோன்னு பயந்து வருது.அடப் போங்கப்பா!! (பி.கு: கோவையில் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த மூன்று பேரையும் பிடித்து விட்டனர். இவர்கள் மேலும் சில கொலை கொள்ளைகளையும் செய்திருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது)

#காதலின் முதல் நிலை

காதலில் பல நிலைகள் உள்ளன. ஒவ்வொரு நிலையாய் கடந்து, after crossing different levels of filteration எஞ்சி நிற்பதென்பது வெகு அபூர்வம். அதைப் புரிந்து கொண்டோம் என்றால் நாம் மறுதலிக்கப் படும் போது இயல்பாய் ஏற்றுக் கொள்வோம். ஆஸிட் ஊற்றுவது, பொதுவெளியில் அவமானப்படுத்துவது, உச்ச கட்டமாய் போய் கொலை செய்வது, போன்றவை நிகழாது. முதல் நிலை. காதலில் வெற்றி பெறுவது என்பது அவ்வளவு சுலபமானதல்ல. நாம் நாளும் எத்தனையோ பேரைப் பார்க்கிறோம். எத்தனையோ பேரிடம் பழகுகிறோம். ஆனால் திடீரென்று ஒருவரைப் பிடித்துப் போகிறது. அது அனேகமாக நாம் அடிக்கடி பார்ப்பவருள் ஒருவராக இருக்கலாம். நமக்குப் பிடிப்பவருக்கு நம்மைப் பிடிக்க வேண்டும் என்று அவசியமில்லை. 1) நம்மை அவர் சாதாரணமாகக் கடந்து போகலாம். 2) நம்மை அவருக்குப் பிடிக்காமல் போகலாம். 3) மூன்றாவதாக அவருக்கும் நம்மைப் பிடித்துப் போகலாம்.் முதல் நிலையில் கொஞ்ச நாள் காத்திருப்போம். அவர் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்வோம். அங்கேயும் மூன்று நிலைகள் வரும். 1) நம் முயற்சி வெற்றி பெறலாம். அவருக்கும் நம்மைப் பிடித்துப் போகலாம். 2) நம் கவன ஈர்ப்பு அவரின் வெறுப்புக்குள்ளாக்கலாம். 3) அவர் அதற்கு பெரிதும் முக்கியத்துவம் கொடுக்காமல் கடந்து போகலாம். நம் முக நூலை வைத்தே விளக்குகிறேன். எத்தனையோ பதிவுகளை நாளும் கடக்கிறோம். ஒரு சில ப்ரோஃபைல் படங்கள் பிடிக்கலாம். அவர்கள் பகிரும் புகைப்படங்கள் பிடிக்கலாம். அவர்கள் எழுதும் பதிவுகள் கூட பிடித்துப் போகலாம். நம்மை அவர்கள் கவனிக்க வேண்டும் என்பதற்காக குறுஞ்செய்தி " கள்" அனுப்புகிறோம். அதை அவர்கள் just like that கடந்து போகலாம். அவர்களுக்குப் பிடிக்காமல் போய் ப்ளாக் செய்யலாம். அபூர்வமாக பிடித்தும் போகலாம். ஒருவரை நமக்கு முதல் பார்வையிலோ முயற்சிக்குப் பின்னோ பிடித்து, அவருக்கு நம்மைப் பிடித்துப் போவது முதல் நிலை. நாளை இரண்டாம் நிலையைப் பார்ப்போம்.