03 November, 2025
இரண்டு நாட்களுக்கு முன் எனக்கு நிகழ்ந்த நிகழ்வு. நான் மாலையில எங்க தெருவிலிருந்து காரை மெயின் சாலைக்கு எடுக்கிறேன். என் அருகில் என் கணவர் அமர்ந்திருக்கிறார். எங்க தெரு முக்கில் நிறுத்தி இரண்டு பக்கங்களும் ஏதேனும் வாகனங்கள் வருகின்றனவா என்று பார்த்துப் பின் சாலையில் ஏறுகிறேன். வலது பக்கம் ஆறு கடைகள் தாண்டி பைக்கில் ஒருவர் வேகமாக வருகிறார். நம் காரைப் பார்க்கவில்லை என்பதைத் தெரிந்து கொண்டு பலமாக ஹார்ன் சத்தமெழுப்புகிறேன். அவர் போதையில் இருந்தாரோ, சிந்தனையில் இருந்தாரோ கவனித்த மாதிரியே தெரியவில்லை. வேகம் சிறிதும் குறையவில்லை. வேகமாக வந்து என் கார் அருகில் சடன் ப்ரேக் போட்டார். தெய்வாதீனமாக மோதவில்லை.
நான் காரை நிறுத்தி ஜன்னல் கண்ணாடியை இறக்கினேன். அவர் ஒரு அருமையான கேள்வியை எழுப்பினார். "பார்த்து வர வேண்டாமா? " எதே!!!
"நான் பார்த்துகிட்டுத் தாங்க வர்ரேன். நீங்க பார்க்கலைன்னு தான் இவ்வளவு சத்தம் எழுப்புறேன். நீங்க பார்க்காம, வேகமா வந்துட்டு என்னை பார்த்து வரக் கூடாதாங்கறீங்க" என்றேன்.
என் கணவரும் "கார் வர்ரதையே கவனிக்காம எவ்வளவு வேகமா வர்ரீங்க" என்றார். அவர் பேசாமல் வண்டியை நகர்த்தி விட்டார். நகர்த்தி கொஞ்ச தூரம் போய் என் காரின் எண்ணை அலைபேசியில் படமெடுத்துக் கொண்டார்.
நான் கார் ஓட்டப் பழகறேன். என் கணவர் சொல்லித் தரார்னு நினைச்சிருப்பாரோ? . என் வண்டி எண்ணை வைத்து தகவல் பார்த்தால் நான் கார் வாங்கி பதினைந்து வருடங்களுக்கு மேலாகிறது. RTO அலுவலகத்தில் இருந்து இன்னும் ஐந்து வருடங்களுக்கு சான்றிதழும் வாங்கியாச்சுன்னு தெரியும். நான் பதிமூணு வருடங்களாக கார் ஓட்டிக் கொண்டு இருக்கிறேன் என்பது பாவம் தம்பிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. முதல் இரண்டு வருடங்கள் ஓட்டுநர் வைத்திருந்தேன். இடையிடையே கூட்டமில்லாத பகுதியில் மட்டும் நான் ஓட்டுவேன். அப்படியே பழகினேன்.
ஆனாலும் இப்பல்லாம் தப்பு செய்றவங்களை யாரும் கேள்வி கேட்பதில்லையே! அதனால என்னை என்ன கேள்வி கேட்பாங்களோன்னு பயந்து வருது.அடப் போங்கப்பா!!
(பி.கு: கோவையில் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த மூன்று பேரையும் பிடித்து விட்டனர். இவர்கள் மேலும் சில கொலை கொள்ளைகளையும் செய்திருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது)
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!