13 November, 2025
காதல் தன் மூன்றாம் நிலைக்கு வரும் போது. இருவருக்கும் ஒருவர் மீது ஒருவருக்கு முழு நம்பிக்கை வருவதால் தம் காதலை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளத் துணிவோம். இதற்கு முன்பே பலர் நம்மைக் கவனித்திருப்பார்கள். நம் உடைகளில் காட்டும் தனிக் கவனம். நம் முகங்களில் ஏற்படும் பொலிவு. இப்படி ஒளிந்து மறைந்து பூக்கும் மலர் கூட தன் மணத்தால் தன்னிருப்பைக் காட்டிக் கொடுப்பது போல நம் உள்ளத்தில் பூத்திருக்கும் அன்"பூ" நம்மை வெளிப்படுத்தி இருக்கும்.
இப்போது எரிமலை தன் அக்கினிக் குழம்பை வெளியேற்றத் தொடங்கும். ஒருவரைப் பற்றி ஒருவரிடம் வதந்"தீ" பற்ற வைக்கத் தொடங்குவார்கள். "இவங்க அவ்வளவு நல்லவங்க கிடையாது. கவனமா பழகுங்க" என அறிவுறுத்தத் தொடங்குவார்கள்.
இந்த காதலுக்கு வரும் முட்டுக்கட்டை பல விதமாகத் தொடங்கும். ஒன்று நேரிலேயே குற்றங்குறைகளைச் சொல்வார்கள். அதை இருவரில் ஒருவர் ஏற்றுக் கொண்டாலும் காதல் அங்கேயே சாகும். இதில் அனேகமாக பெண்கள் வெளிப்படையாகவே கோபப்பட்டு பிரிவார்கள். ஆண்கள் தாம் ஏமாற்றப்பட்டோம் என்பது கௌரவக் குறைச்சல் என்பதால் அமைதியாக , கொஞ்சம் கொஞ்சமாகத் தன் உறவை அறுத்துக் கொள்வார்கள்.
காரணங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமலே தமக்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளாமலே "எதுக்கு வம்பு" என சத்தமில்லாமல் உறவை அறுத்துக் கொள்பவர்கள் உண்டு. ஏன் அறுத்துக் கொள்வார்கள் என்கிறேன் என்றால் பூத்து மணம் வீசிய அன்பு பறித்து எறியப்பட்டதன் காரணம் தெரியாதவர்களுக்கு அது ரணம். உயிர் பிரியும் கொடுமை.
இருவருமே ஒருவர் மீது ஒருவர் முழு நம்பிக்கையோடு இருந்தால் பின் அவர்கள் வீட்டுக்குச் செய்தி போகும். பல சமயங்களில் அதற்கு முன்பே அரசல் புரசலாய் செய்தி எட்டி இருக்கும். வெளிப்படையாய் கண்டிக்க சாட்சியங்களுக்கு காத்துக் கொண்டு இருந்திருப்பார்கள்.
இருவரில் ஒருவர் மிரட்டலுக்கு பயந்து விட்டால் கூட காதல் அங்கேயே தற்கொலை செய்து கொள்ளும். எதிர்க்கும் துணிவும், இந்த அன்பு நிச்சயமாய் தமக்கு வேண்டும் என்ற திடகாத்திரமான பிடிவாதமும் இருந்து , இருவரும் காத்திரமாக தம் காதல்ல தொடர நினைத்தால் காதல் தன் அடுத்த நிலைக்குப் பயணிக்கும்.
நான்காம் நிலை தொடரும்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!