Bio Data !!

31 January, 2026

திருச்சி பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு இவ்வளவு ஆதரவு வரும்னு நான் நினைக்கல. பொதுவா நான் சந்தோஷமாவோ வருத்தமாவோ ஒரு விஷயம் என்னை பாதிச்சா முக நூலில் உடனே பதிந்திடுவேன். அப்படித் தான் இதுவும் நடந்தது. அந்த பெண்ணுக்கு ஏதும் தொந்தரவு வந்திடக் கூடாதுன்னு தான் விசிட்டிங் கார்ட் போடல. ஆனா இப்போ ஏதும் தொந்தரவு வராது. உதவி தான் கிடைக்கும் என்பது நிச்சயமானதால் பதிகிறேன். அவர் பெயர் ஷீலா. திருச்சி ரயில் நிலையத்தில் இருக்கிறார். அவர் தொடர்பு எண் 93442 69075. தேவைப்படுபவர்கள் இவர்களுடைய ஆட்டோவை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நன்றி. ( பி.கு : கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு முன்பிருந்து நெல்லையில் ஆட்டோ ஓட்டும் ஒரு பெண்மணி இருக்கிறார் என்ற செய்தி கிடைத்தது. அடுத்து அவரை சந்தித்து எழுதுகிறேன்)
திருச்சியில் திருமணம் முடித்த கையோடு வேர்களைத் தேடிப் புறப்பட்டோம். என் கணவரோட சித்தப்பா இருப்பது காரைக்குடி அருகே பொய்யா வயல் என்னும் கிராமம். அவர் அப்பா கூடப் பிறந்தவர்களில் எஞ்சி இருப்பவர் இந்த சித்தப்பா மட்டுமே. அங்கே தான் என் மாமனாரோட கல்லறையும் அவங்க அம்மாவோட கல்லறையும் இருக்கின்றன. அனைவரையும் சந்திக்க காரைக்குடி சென்றோம். மறு நாள் பொய்யா வயல் செல்வதாக ஏற்பாடு. காரைக்குடியில் எங்கே தங்கலாம் என விசாரிக்க தெரிந்தவர்களை அழைத்தேன். தெரியவில்லை என்றாலும் "காரைக்குடி" யைத் தன் பெயரில் இணைத்திருந்தவர்களையும் அழைத்துப் பார்த்தேன். ஒருவரும் போனை எடுக்கவில்லை. பிறகு ஒவ்வொருவராக பேசி விட்டார்கள். அதற்குள் அறை முடிவாகி விட்டது. அருகிலுள்ள கடையில் விசாரித்து "சத்குரு" என்னும் லாட்ஜ்க்கு சென்றோம். நாளொன்றுக்கு வாடகை ரூபாய் 2300/- Double bed room. பக்கா ஏற்பாட்டுடன் வாசலில் தண்ணீர் தொட்டியில் தங்க மீன்கள் விரைவாக நீந்திக் கொண்டு இருக்க, செம வைப்பாக இருந்தது. அவர்களே cab book பண்ணுவதற்கான செல் எண்ணையும் கொடுத்து விட , நாங்க பேசி பத்து மணிக்கு வரச் சொன்னோம். மறு நாள் காலை சரியா 9.45 க்கு வந்து தான் வந்து விட்டதைத் தெரிவித்தார் ஓட்டுநர். அப்போதே ஒரு சிறப்பான ஓட்டுநரோடு தான் பயணிக்கப் போகிறோம் என்பது நிச்சயமாகி விட்டது. அடுத்து காரைக்குடி பற்றி பதிவுகள் வருகின்றன. அதையும் தவறாமல் பார்த்திடுங்க.

30 January, 2026

திருச்சியில் ஒரு திருமணம் . வழக்கம் போல் கணவர் கடின வழியைத் தேர்ந்தெடுத்து மதுரை வரை பஸ்சில் போய் பிறகு அங்கிருந்து இன்னொரு பஸ்சில் திருச்சி செல்லலாம் என்றார். நானோ சொகுசுப் பேர்வழி. இன்டர் சிட்டியில திருச்சி போகலாம் என்றேன். மனம் இறங்கிய கணவர் என் வழியை ஓகே பண்ணினார். திருச்சியில் இறங்கிய பின் அவரே பயணம் சிறப்பாக இருந்தது என்றார். இன்டர் சிட்டி திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டு நெல்லை வருகிறது. 2.45 க்கு மதியம் நெல்லையிலிருந்து புறப்படுகிறது. திருச்செந்தூரில் முருகனுக்கு நேர்ந்து மொட்டை போட்டு வந்த ஒருவர் இன்டர் சிட்டி தானே என உறுதிப்படுத்திக் கொண்டார். "வந்தே பாரத்" தோனு சந்தேகமா இருந்தது " என்றார். அவ்வளவு சுகமாக இருந்தது பயணம். அந்த அன்பர் ஐந்து வருடமாக குழந்தை இல்லாமல் வேண்டுதல் வைத்து குழந்தை பிறந்த 17 நாட்களில் பாண்டிச்சேரியிலிருந்து திருச்செந்தூர் வந்து வேண்டுதல் செலுத்தி செல்கிறார். மதுரையை இரண்டே மணி நேரங்களில் அடைகிறது. அங்கிருந்து திருச்சி செல்ல 2 3/4 மணி நேரம். திண்டுக்கல் வழியாக சுற்றிச் செல்கிறது. திருச்சியில் இறங்கியதும் ஆட்டோ ஓட்டுனர்களாக நிறைய பெண்களைப் பார்க்க முடிந்தது. சந்தோஷமா இருந்தது. அதனால் திருமண மண்டபத்துக்கு ஒரு பெண் ஓட்டிய ஆட்டோவிலேயே ஏறினோம். அந்தப் பெண்ணும் உற்சாகமாகப் பேசிக் கொண்டே வந்தார். பத்து வருடங்களுக்கு மேலாக ஆட்டோ ஓட்டுறாராம். இப்போது அவருக்கு 42 தான் வயது. அப்போ 30+ யிலிருந்து ஓட்டுகிறார். மிகவும் தைர்யமாக பேசிக் கொண்டு வந்தார். பத்து வருடங்களில் ஏதும் பிரச்னையை சந்தித்திருக்கிறீர்களா எனக் கேட்டேன். ஏதும் நிகழ்வைச் சொல்வார் எனக் காத்திருக்க இது வரை எந்தப் பிரச்னையும் வந்ததில்லை. என்றார். குடிச்சிட்டு சில சமயம் ஏறுவாங்க நான் பேசிப் பேசியே "பத்திரமா போ தங்கச்சி" ன்னு சொல்ல வச்சிடுவேன்னார். இதயத்தில் மூணு ப்ளாக் இருக்கிறது. சிறு வயதிலேயே கணவர் என்னைப் பிரிந்து விட்டதால் நான் சிங்கிள் பேரன்ட் தான் என்று பல அதிர்ச்சிகளை அடுக்கடுக்காக அளித்தார். எனக்கு இந்த துணிச்சல்காரி உடன் படமெடுக்க ஆசையேற்பட்டது. முக நூலில் போடவா என்றேன் "தாராளமா போடுங்க. என்னைப் பார்த்து ஒன்றிரண்டு பேர் தைர்யமானால் நல்லது தானே என்றார். இறங்கும் போது ஒரு விசிட்டிங் கார்ட் கொடுத்து அடுத்த தடவை வரும் போது என்னை அழையுங்கள். திருச்சியில் உள்ள கோயில்கள் எல்லாம் கூட்டிட்டுப் போய் காட்டுறேன் " என்றார். படத்தில் துணிச்சல் காரியுடன் பாவமாக நான். ஏன் பாவம் என்றால் இது வரை என்ன செய்து விட்டேன் என்று என்னை துணிச்சல்காரி என்று நம்பிக் கொண்டிருந்தேன் என்று என் மனச்சாட்சி மண்டையிலடித்து கேள்வி கேட்டதால். தான்.. தேவைப்படும் திருச்சிகாரர்கள் என்னைத் தொடர்பு கொண்டால் விசிட்டிங் கார்ட் புகைப்படம் எடுத்து அனுப்புகிறேன்.

25 January, 2026

Adhi Beekara Kamukhan

OTT : Amezon prime Adhi Beekara kaamukan (அதி தீவிர காதலன்) மொழி : மலையாளம். இயக்குநர் : CC நிதின் முக்கிய கதாபாத்திரங்கள்: லுக்மேன், த்ருஷ்யா ரகுநாத் இசை : பிபின் அசோக் ஒரு ஆணும் பெண்ணும் பழகும் போது உணர்வுப் பாதிப்பு இருவருக்கும் சம அளவில் இருக்காது. அது அவரவருடைய கடந்த கால நிகழ்வுகளைப் பொருத்து இருக்கும். அந்த காதல் தோல்வியுற்றால் பாதிப்பும் இருவருக்கும் சம அளவு இருக்காது. அதனாலேயே எதிர் பாலினத்தவரிடம் அக்கரை காட்டும் போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். செல்லம், தங்கம், அழகி என்பது ஒருவருக்கு வெறும் சொற்களாக இருக்கலாம். ஆனால் வேறொருவருக்கோ அவை உயிரை உலுக்கும் உலைக்களனாக இருக்கும். அதே போலத்தான் ஒரு பெண் ஒரு ஆணின் மேல் காட்டும் அக்கரை வெறும் மனிதாபிமானம் சார்ந்ததாக இருக்கலாம். அதுவே எந்த ஒரு பெண்ணின் அன்பையும் அனுபவித்திராத ஆணுக்கு உயிரை உருவி விடும் கொலைக் கருவி ஆகி விடும். இந்தப் படத்தின் கதை அப்படி பாதிக்கப்பட்ட ஒரு ஆணின் நிலையைப் பேசுகிறது. ஒரு விதத்தில் நாம் என்றோ பார்த்து விட்ட முரளி, ஹீரா இணைந்து நடித்த "இதயம்" படம் போல இருந்தாலும் லுக் மேன் தன் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கண்ணாடி போன்ற முகத்தால் நம்மை படத்தோடு ஒன்ற வைக்கிறார். அவர் சிரித்தால் நாம் சிரிக்கிறோம். அவர் தோற்று தெருவோடு அடக்க முடியாமல் அழுது கண்ணீர் வடித்து சென்றால் நாமும் சோர்ந்து போகிறோம். படிப்பில் அதிக ஆர்வமில்லாத அர்ஜுனன் சில வருட இடைவெளிக்குப் பின் ஒரு பேராசிரியரின் உதவியால் கல்லூரியில் சேர்கிறார். தன் கூட்டாளிகளுடன் விளையாடி மகிழ்வாய் பொழுதைப் போக்கியவருக்கு கல்லூரிப் படிப்பு பெரும் பாரமாய் இருக்கிறது. அவனுடைய தாய் அவனைக் கல்லூரியில் விட்டுச் செல்லும் போது காட்டிய பரிவைக் கண்ட ஹீரோயின் அனு அதே அன்பை அவன் மேல் காட்ட அது வரை தன் தாயை மிஞ்சிய அழகி உலகில் இல்லை என நினைத்திருந்த மகன் முதன் முறையாக வேறொரு பெண்ணை தன் தாயை மிஞ்சிய இடத்தில் வைத்து காதலித்து உருகுகிறான். அந்த காதலைப் பெண்ணிடம் சொல்லும் தைர்யம் வராமலே நாட்களைக் கடத்துகிறான். ஆண்களுக்கு சொல்லித் தர வேண்டிய இன்னொரு அறிவுரை உனக்கு ஒரு பெண்ணைப் பிடித்தால் அவளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்.என்ன பேச வேண்டும் என்பதை நீ தான் முடிவு செய்ய வேண்டும். அதைச் சரியாக செய்ய முடியாமல் நண்பனின் வழி காட்டுதலில் நடந்தால் உன் வாழ்வின் தீர்க்கமான முடிவுகளை நீ எப்படி தனியாக எடுக்கப் போகிறாய். கதை என்ற அளவில் பார்த்தால் அறுதப் பழசான இன்ட்ரோவர்ட் பையனின் காதல் தோல்வி தான். அதைத் தன் நடிப்பால் பாவனையால் தூக்கி நிறுத்தி இருக்கிறார் லுக் மேன்.

சமூக ஊடகம் - மன உறுதி - அவசியம்

சமூக ஊடகங்களில் இன்று பலரும் இயங்கிக் கொண்டு இருக்கிறோம். சமீபத்தில் கேரளாவில் தீபக் என்ற ஆண் ஒரு பெண் தன்னை சோஷியல் மீடியாவில் தவறாகச் சித்தரித்து விட்டாள் என்று தற்கொலை செய்திருக்கிறார். இந்த நேரம் எனக்கு இங்கே உங்களிடம் சொல்ல ஒன்று இருக்கிறது. நான் 2011 இல் இருந்து வலை உலகத்தில் நீந்திக் கொண்டிருக்கிறேன். அப்போ "ப்ளாக்" என்னும் வலைப்பூவில் நம் மனதுக்கு பிடித்த படி எழுதுவோம். அந்தக் காலத்திலேயே நான் இத்தகைய இடரைக் கடந்து வந்திருக்கிறேன். சென்னைக்கு ஒரு முறை போய் வந்த போது சில பிரபலங்களைக் கண்டு வந்ததால் அவர்களைப் பற்றி தினம் ஒரு பதிவாகப் போட்டுக் கொண்டிருத்தேன். எங்கே இவள் பெரியாளாக ஆகி விடுவாளோ என பொறாமைப்பட்ட சிலரின் தூண்டுதலால் ஒரு நபர் வெளிநாட்டிலிருந்து என்னை "அக்கா" என்று அன்பாக அழைப்பவர் என்னைப் பற்றி தப்பும் தவறுமாக ஒரு பதிவு போட்டு விட்டார். தப்புத் தவறும் என்றதும் வேற மாதிரி யோசிக்க வேண்டாம். ரொம்ப மெனக்கெட்டு ஒரு வேலை செய்திருந்தாங்க. தூத்துக்குடியிலிருந்த ஒருவரைத் தொடர்பு கொண்டு நான் பணி புரிந்த இடத்துக்கு போகச் சொல்லி, ( என் கெட்ட நேரம் நான் அப்போ மெயின் அலுவலகத்துக்குப் போயிருந்தேன். ) என் பணி இடம் பற்றிய தகவல்களைச் சேகரித்து விட்டார்கள். அப்போது தான் தாம் சொல்லும் பொய் கொஞ்சம் உண்மை போலத் தெரியும் என்று. அவரது வலைப்பக்கத்தில், நான் என் கீழ் பணி புரிபவர்களை மிகவும் துன்புறுத்துவதாகவும் (😀) என் அராஜகப் போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்றும் பதிந்திருந்தார்கள். நான் கிளார்க்காக இருந்து அதிகாரி ஆனவள். அதனாலேயே என் கீழ் பணி புரிபவர்களிடம் என்னால் ரொம்ப தோழமையாக பழக முடிந்தது. அது தெரியாமல் இப்போது போலவே பதிவின் கீழ் என்னை "சொர்ணாக்கா" ரேஞ்சுக்கு திட்டி பலரும் கமென்ட் போட்டிருந்தார்கள். அந்த பதிவில் என்னைப் பற்றிய ஒரு வரியில் கூட உண்மை கிடையாது. என்னால் இதை வீட்டிலும் பகிர்ந்து கொள்ள முடியாது. சமூக ஊடகத்தில் இயங்குவது பிடிக்காதிருந்தது. மிகுந்த மன உளைச்சலுக்குள்ளானேன். நான் இதைத் தொடர்ந்து ஒரு வருடம் ஏதும் எழுதாமல் வலைப்பூவை விட்டு விலகி இருந்தேன். பின் நண்பர்கள் உண்மையில்லாத ஒரு விஷயத்துக்காக நீங்க ஏன் எழுதாமல் இருக்கணும்னு வற்புறுத்தி , அதன் பின் எழுதத் தொடங்கி இன்று இந்த நிலையில் இருக்கிறேன். என்னை எதிர்த்தவர்கள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை இல்லை. இனி இத்தகைய அவமானங்கள் உண்மைத்தன்மையற்ற செயல்பாடுகள் யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். தப்பு செய்தவன் தண்டனை அடைய இப்போ நிறைய வாய்ப்புகள் இருக்குன்றன. மொத்த உலகத்திலும் சமூக ஊடகங்களில் இயங்குபவர் ரொம்பக் குறைவான பேர் தான் என்பதை பாதிக்கப்பட்டவர் முதலில் நன்கு உணர வேண்டும். அடுத்து காவல் துறையின் தலையீடு தேவைப்பட்டால் அவர்களை அணுக வேண்டும். முதலில் மனதை திடமாக வைத்துக் கொள்ள வேண்டும் . நம்மை நன்கு அறிந்தவர்கள் நம்மைத் தவறாக எண்ண மாட்டார்கள். நம்மை அறியாதவர்கள் நம்மைப் பற்றித் தவறாக நினைத்தால் அதற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை. அன்று தீபக்கைத் திட்டி கமென்ட் இட்டவர்கள் இன்று வீடியோ பகிர்ந்த பெண்ணைத் திட்டுகிறார்கள். நாளை ஒரு வேளை வேறொரு செய்தி வந்தால் மறுபடியும் மாறுவார்கள். இவர்களல்ல நம்மை நியாயத் தீர்ப்பிட வேண்டியவர்கள். இவர்களுக்காக கொடுக்க வேண்டிய அளவு மலிவானதல்ல நம் உயிர். இதுவும் கடந்து போகும் என்று திட மனதோடிருங்கள்.

19 January, 2026

திரைப்படம் : அங்கம்மாள். OTT : அமேசான் ப்ரைம். கதை : பெருமாள் முருகனின் “கோடித்துணி” சிறுகதை. அறிமுக இயக்குநர் : விபின் ராதாகிருஷ்ணன் முக்கிய நடிகர்கள் : கீதா கைலாசம் (அங்கம்மாள்) சரண் சக்தி,, பரணி. (அங்கம்மாளின் மகன்கள்) தென்றல் ரகுநாதன் அங்கம்மாளின் மூத்த மருமகள். முல்லையரசி ( மருத்துவர் மகன் காதலிக்கும் ஜாஸ்மின்) மேல் சட்டை போடாத ஆச்சி அல்லது அப்பத்தா அங்கம்மாள். ஒரு fusion ஆக பேத்தியை வைத்து Champ வண்டியோட்டிக் கொண்டே பழங் கதை பேசிப் போகிறார்கள். ஆரம்பமே இந்த படம் நமக்கு நிச்சயமாக பிடிக்கும் என்ற உறுதி அளித்தது. ஒரு சிலேட்டில் அங்கம்மாள் உச்சாணிப் பூவை வரைந்து பார்க்கும் போது , மனதிலேயே ஓராயிரம் கோலங்களோடு வசித்த என் அல்லி அக்காவிடமிருந்து ஒவ்வொரு கோலமாக ஸ்லேட்டில் போட வைத்து , நான் நோட்டுக்கு கொண்டு வந்த கோலங்களின் காட்சி ஞாபகம் வந்தது. அது என்ன உச்சாணிப்பூ. மலை மேல் பல வருடங்களுக்கு ஒரு முறை பூத்து கிராமம் எங்கும் வாசம் பரப்பும் பூ. அங்கம்மாளும் அத்தகைய ஒரு பூ தான். மற்ற பெண்களைப் போல் உண்டு, உறங்கி செத்து மடியும் சாதாரண வாழ்க்கையல்ல அவளுடையது. அங்கம்மாள் மகன் மருத்துவர் பவளம் தான் காதலிக்கும் பெண்ணிடம் ஒரு புகைப்படம் கேட்க “நான் போட்டோவில நல்லா இருக்க மாட்டேன் “ எனச் சொல்ல “நேரில மட்டும்” என்னும் அவனிடம் “சொல்லு, நேரில மட்டும் , என்ன நேர்ல மட்டும்“ என அவள் கேட்க “சொல்றேன். இரு படம் முடியட்டும் என அவளை இழுத்து தன் கன்னத்தில் கிஸ் அடிக்க வைக்கும் காட்சி செம ரொமான்ஸ். பவளத்தின் அப்பாவி அண்ணனாக பரணி நடிக்கிறார். பவளம் தான் காதலிக்கும் பணக்கார வீட்டின் குடும்பத்தினர் வருவார்களாதலால் அம்மா சேலைக்கு சட்டை போட்டு பழக வேண்டும் என்று வற்புறுத்த “என் மகனுக்காக சட்டை என்ன வேட்டி கட்டச் சொன்னாலும் கட்டுவேன்” என்று வெள்ளைத் துணியில் ப்ளவுஸ் தைத்து போட்டுக் கொள்கிறார். ஆனால் அதை ஓரிரு நாட்களிலேயே கழற்றியும் விடுகிறார் படத்தின் சில காட்சிகளில் அன்பும் காதலும் கலந்த கலவையோடு அங்கம்மாள் பார்க்கும் ஒரு முதியவர்( சிறு வயது நண்பராக இருக்கலாம் என்பது என் கணிப்பு. )முன் அந்த ப்ளவுஸும் வெட்கமுமாக நிற்பது போல் ஒரு காட்சி வைத்திருந்தால் இன்னும் எவ்வளவு அழகாக இருந்திருக்கும். பிடிவாதமான, கோபக்கார அங்கம்மா கதாபாத்திரத்துக்கு அவர்கள் போட்டிருக்கும் கருப்பு உதட்டுச் சாயம் அழுத்தமான உதடுகளைக் கொடுத்து , இன்னும் வலிமை சேர்க்கிறது. ஒரு மகனை வயக்காட்டில் வேலைக்கு அனுப்பி அடுத்த மகனை மருத்துவராக்குவது அந்தக் குடும்பத்துக்குள் எவ்வளவு பெரிய ஏற்றத் தாழ்வை உண்டாக்கும் என்பது சிந்திக்க வேண்டிய பிரச்னை. பரணி தாழ்வு மனப்பான்மையை உள் அழுத்தி தன் சோகத்தை நாதஸ்வரம் வாசிக்க கற்றுக் கொள்வதில் சமப்படுத்தும் , கொஞ்சம் கொஞ்சமாக சிறப்பாகவே வாசிக்கும் அண்ணன் கதாபாத்திரத்தில் ஜொலிக்கிறார். திரை உலகம் இவரை இன்னும் அதிகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மருத்துவரின் காதலி குடும்பம் இவர்கள் வீட்டுக்கு வரும் போது அங்கம்மாள் மகன் விருப்பப்படி மேல் சட்டை அணிந்து இருந்தாலும் , வந்த இளம்பெண் கையில்லாத , தோள்களை முழுவதுமாக தெரியும்படி அணிந்திருந்த ஆடை நவ நாகரீகம் என்று ஏற்றுக் கொள்ளும் சமூகத்தைச் சுட்டிக் காட்டி ஒருவர் அணியும் ஆடை அவரவர் விருப்பத்தைப் பொருத்தது. அடுத்தவர் அதைக் கட்டுப் படுத்துவது அவசியமற்றது என்ற கருத்தை வலியுறுத்து இருக்கலாம். செய்யவில்லை. கிராமத்துக்குப் பொருத்தமில்லாத நல்ல நிறமுடைய பையனுக்கு காதலியை மாநிறத்துக்கும் குறைவான நிறமுடைய ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்ததற்கு இயக்குநருக்கு சிறப்பு பாராட்டுகள். படம் முடிவடைந்தாலும் , என் மனம் இத்தகைய போராட்டக் குடும்பத்துக்கு சம்பந்தமே இல்லாத ஒரு இடத்தில் இருந்து மருமகளாக வந்து சந்திக்கப் போகும் பிரச்னைகளை வைத்து அங்கம்மாள் 2 எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டது.

05 January, 2026

திருப்பலியில முக்கியமான இடம் எழுந்தேற்றம் என்பது. அப்போது இயேசு சிலுவையில் தன் உடலையும் இரத்தத்தையும் நமக்காகக் கொடுத்து மரணித்த நேரம் நினைவுபடுத்தப்படும். இது சார்ந்த என் எண்ணங்கள். இந்த எழுந்தேற்ற நேரத்தில் எல்லோரும் ரொம்ப பய பக்தியோடு பிரார்த்திப்பார்கள். நான் நெற்றி நிலம் தொட வணங்குவேன். அந்த நேரத்தில் என் நிரந்தரப் பிரார்த்தனை என் இரு மகள்களின் முதுகுத் தண்டுவடம் பலப்பட வேண்டும் என்பதாக இருக்கும். அதன் உடன் அப்போதுள்ள தேவைகளும் இணைந்து கொள்ளும். ஒரு வயதான மூதாட்டி அப்போது மிகுந்த சத்தத்தோடு பிரார்த்திப்பார்கள். மற்றவர்களுக்கு இடைஞ்சலாகத் தான் இருக்கும். நான் வந்த புதிதில் அவர்களிடம் சொன்னேன். "அடுத்தவங்களுக்கு தொந்தரவில்லாமல் செபிக்க வேண்டாமா" என. அப்போ என் தோழி சொன்னார்கள் " எத்தனையோ பேர் சொல்லி பார்த்தாச்சு. நீங்க சொல்லியா மாத்தப் போறாங்க" என்று. இன்று வரை மாறவில்லை. ஆரம்ப காலங்களில் நன்மையை நாவில் தான் வழங்குவார்கள். குருக்கள் மட்டுமே வழங்குவார்கள். இப்போது கன்னியரும் கொடுக்கிறார்கள். கொரோனா காலத்தில் நாவில் கொடுப்பது தடை செய்யப்பட்டது. இடது கையில் வாங்கி வலது கையில் எடுத்து நாமே உட் கொள்ள வேண்டும் எனக் கொண்டு வந்தார்கள். எனக்கு இடது கையில் வாங்குவது பிடிக்காது அதனால் வலது கையில் வாங்கி அப்படியே வாயில் இட்டுக் கொள்வேன். இப்போ கொரோனா காலம் முடிந்த பிறகு வாயில் கொடுக்கிறார்கள். இதில் குருக்களுக்கு என்ன சங்கடம் என்றால் ஒருவருக்கு வாயில் கொடுக்க வேண்டும் . அடுத்து வருபவர் கையை நீட்டுவர். அதற்கடுத்து வருபவர்களுக்கு கையில் கொடுக்க வேண்டும் என்று எண்ணும் போது திடீரென்று அவருக்கு நின்று வாங்குவது மரியாதைக் குறைவாகத் தெரியும் முழங்கால் போட்டு வாங்குவார். ரொம்ப பாவம் அவங்க. ஒவ்வொருத்தருக்கும் கிண்ணத்தில் எடுத்து கொடுத்தே கை விழுந்து போகும். இதில் இத்தனை வேறுபாடுகள். அதுவும் திருவிழா நாட்களில் மிகுந்த கூட்டம் இருக்கும். அசந்து போய் விடுவார்கள். அதனால் கன்னியாஸ்திரிகளும் கொடுக்கலாம் என்று வந்தது நல்லது தான். ஆனால் சொல்லி வைத்தது போல் அத்தனை பேருமே முக்காட்டை கழுத்தில் தான் போடுகிறார்கள். கிறிஸ்தவ முறைப்படி ஆலயத்தினுள் பெண்கள் தலை முடிய தெரிய இருக்கக் கூடாது. அப்படி இருக்க நன்மை வழங்குபவர்கள் இப்படி வருவது உறுத்தலாக இருக்கிறது. ஒரு சின்ன ஆலோசனை. யாராவது உரியவர்கள் பார்வைக்கு சென்று சேருதா பார்ப்போம். நன்மை கொடுக்கும் போது புடவையை சரி செய்து கொண்டிருப்பது கடினம். ஒரு நெட் தலையில் போட்டு முடிச்சிட்டுக் கொள்ளலாமே. உறுத்தாத மாற்றங்கள் வரவேற்கத் தக்கதே.!!
மாவட்டத் தலைவர் தமுஎச, திரு சேதுராம கிருஷ்ணன் அவர்கள் தலைமை தாங்க , தேவர்பிரான் வரவேற்புரை தொகுத்து வழங்கியவர் சத்யா. நிகழ்வு இளம்பிறை எழுதிய "யாழினியின் புத்தன்" புத்தக வெளியீடு. புத்தகத்தை " தமிழ்ச் சுடர் "தீன் வெளியிட குழந்தைகள், குழலி, காயத்ரி , தன்யா பெற்றுக் கொண்டார்கள். இன்னும் பேசிய மற்றவர்கள் விவரம் அறிய இணைத்துள்ள அறிவிப்பைப் பாருங்கள். "யாழினியின் புத்தன். புத்தன் ஒருவருக்கு உலகம் போற்றும் ஞானியாய்த் தெரிவான். ஒருவருக்கு தன் பெண்டாட்டி பிள்ளைகளைத் தவிக்க விட்டுச் சென்ற பொறுப்பற்றவனாய்த் தெரிவான். ஒருவருக்கு ஆசைகளைத் துறக்க முடிந்த வல்லவனாய்த் தெரிவான். இந்த புத்தகம் யாழினியின் புத்தன் எத்தகையவன் என்பதைச் சொல்லும் என்று நினைத்துத் தொடங்கினேன். ஆசிரியர் இளம்பிறையின் தமிழ் வளம் நான் அவர்களோடு பேசும் போதே நன்கு அறிந்தது. அதே போல் அவர்கள் பேத்தி குழலிக்கு தன்னிடம் பேசுபவர் யாராய் இருந்தாலும் ஈர்க்கும் சக்தி உண்டு. அதுவும் நான் அறிவேன். இளம்பிறை பெரும்பான்மை பெண் சமூகம் நினைப்பதை மாற்றி யோசிப்பவர். சின்ன சின்ன நிகழ்வுகள் கதைகளாக கொடுத்திருக்கிறார்கள். அதுவும் நீதி சார்ந்த கதைகள். கார்த்திகா வரைந்திருக்கும் படங்களும் குழந்தைகளை ஈர்ப்பனவாக உள்ளன. எழுதப்பட்ட பகுதிகளுக்கு பொறுத்தமான தலைப்புகள். காலக் குழந்தைகள் பாட்டி கதைகள் கேட்டு நல்வழிப்பட வாய்ப்பு குறைவு. அதனால் இத்தகைய புத்தகங்களின் அவசியம் ஏற்படுகிறது. இதில் தன் அப்பனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த சரவணன் போல குழந்தைகள் பெரியவர்களுக்கு நல்ல பாடங்களைச் சொல்லிக் கொடுக்கின்றன. அது இன்னும் அவர்களை ஈர்க்கும். ஒவ்வொரு பக்கத்திலும் இறுதியில் கொடுக்கப்பட்ட நீதிக் கருத்துகள் எல்லா பக்கங்களிலும் கொடுத்திருக்கலாம். புத்தகத்தின் அளவு குழந்தைகள் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக உள்ளது. திரு நெல்லைக் கண்ணன் அவர்களின் " மீதமொரு முலை எறி" இருக்கும் வடிவில் இருக்கிறது. அது சரி யாழினியின் புத்தன் யாரு. அவரவர் கற்பனைக்கு தோன்றுபவர் அவரவர் புத்தன். நல்லா இருக்குதுல்ல.அதே போலத் தான் இயேசுவும். இயேசு மாதா போன்றவர்களை வெளிநாட்டு வெள்ளைக் காரர்கள் போலவே ஏன் காட்டணும்னு சில இடங்களில் கருப்பு நிறத்திலும் சிற்பங்கள் செய்து வைக்கிறார்கள். குழந்தைகளுக்கான எழுத்தை அதிகப்படுத்துவோம். இன்னும் கொஞ்ச நாளில் அவர்களே அவர்களுக்காக அதிகம் எழுதத் தொடங்குவார்கள். இப்பவே தொடங்கி விட்டார்கள்.