25 January, 2026
Adhi Beekara Kamukhan
OTT : Amezon prime
Adhi Beekara kaamukan
(அதி தீவிர காதலன்)
மொழி : மலையாளம்.
இயக்குநர் : CC நிதின்
முக்கிய கதாபாத்திரங்கள்: லுக்மேன், த்ருஷ்யா ரகுநாத்
இசை : பிபின் அசோக்
ஒரு ஆணும் பெண்ணும் பழகும் போது உணர்வுப் பாதிப்பு இருவருக்கும் சம அளவில் இருக்காது. அது அவரவருடைய கடந்த கால நிகழ்வுகளைப் பொருத்து இருக்கும். அந்த காதல் தோல்வியுற்றால் பாதிப்பும் இருவருக்கும் சம அளவு இருக்காது.
அதனாலேயே எதிர் பாலினத்தவரிடம் அக்கரை காட்டும் போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். செல்லம், தங்கம், அழகி என்பது ஒருவருக்கு வெறும் சொற்களாக இருக்கலாம். ஆனால் வேறொருவருக்கோ அவை உயிரை உலுக்கும் உலைக்களனாக இருக்கும். அதே போலத்தான் ஒரு பெண் ஒரு ஆணின் மேல் காட்டும் அக்கரை வெறும் மனிதாபிமானம் சார்ந்ததாக இருக்கலாம். அதுவே எந்த ஒரு பெண்ணின் அன்பையும் அனுபவித்திராத ஆணுக்கு உயிரை உருவி விடும் கொலைக் கருவி ஆகி விடும்.
இந்தப் படத்தின் கதை அப்படி பாதிக்கப்பட்ட ஒரு ஆணின் நிலையைப் பேசுகிறது.
ஒரு விதத்தில் நாம் என்றோ பார்த்து விட்ட முரளி, ஹீரா இணைந்து நடித்த "இதயம்" படம் போல இருந்தாலும் லுக் மேன் தன் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கண்ணாடி போன்ற முகத்தால் நம்மை படத்தோடு ஒன்ற வைக்கிறார். அவர் சிரித்தால் நாம் சிரிக்கிறோம். அவர் தோற்று தெருவோடு அடக்க முடியாமல் அழுது கண்ணீர் வடித்து சென்றால் நாமும் சோர்ந்து போகிறோம்.
படிப்பில் அதிக ஆர்வமில்லாத அர்ஜுனன் சில வருட இடைவெளிக்குப் பின் ஒரு பேராசிரியரின் உதவியால் கல்லூரியில் சேர்கிறார். தன் கூட்டாளிகளுடன் விளையாடி மகிழ்வாய் பொழுதைப் போக்கியவருக்கு கல்லூரிப் படிப்பு பெரும் பாரமாய் இருக்கிறது.
அவனுடைய தாய் அவனைக் கல்லூரியில் விட்டுச் செல்லும் போது காட்டிய பரிவைக் கண்ட ஹீரோயின் அனு அதே அன்பை அவன் மேல் காட்ட அது வரை தன் தாயை மிஞ்சிய அழகி உலகில் இல்லை என நினைத்திருந்த மகன் முதன் முறையாக வேறொரு பெண்ணை தன் தாயை மிஞ்சிய இடத்தில் வைத்து காதலித்து உருகுகிறான். அந்த காதலைப் பெண்ணிடம் சொல்லும் தைர்யம் வராமலே நாட்களைக் கடத்துகிறான்.
ஆண்களுக்கு சொல்லித் தர வேண்டிய இன்னொரு அறிவுரை உனக்கு ஒரு பெண்ணைப் பிடித்தால் அவளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்.என்ன பேச வேண்டும் என்பதை நீ தான் முடிவு செய்ய வேண்டும். அதைச் சரியாக செய்ய முடியாமல் நண்பனின் வழி காட்டுதலில் நடந்தால் உன் வாழ்வின் தீர்க்கமான முடிவுகளை நீ எப்படி தனியாக எடுக்கப் போகிறாய்.
கதை என்ற அளவில் பார்த்தால் அறுதப் பழசான இன்ட்ரோவர்ட் பையனின் காதல் தோல்வி தான். அதைத் தன் நடிப்பால் பாவனையால் தூக்கி நிறுத்தி இருக்கிறார் லுக் மேன்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!