Bio Data !!

05 January, 2026

மாவட்டத் தலைவர் தமுஎச, திரு சேதுராம கிருஷ்ணன் அவர்கள் தலைமை தாங்க , தேவர்பிரான் வரவேற்புரை தொகுத்து வழங்கியவர் சத்யா. நிகழ்வு இளம்பிறை எழுதிய "யாழினியின் புத்தன்" புத்தக வெளியீடு. புத்தகத்தை " தமிழ்ச் சுடர் "தீன் வெளியிட குழந்தைகள், குழலி, காயத்ரி , தன்யா பெற்றுக் கொண்டார்கள். இன்னும் பேசிய மற்றவர்கள் விவரம் அறிய இணைத்துள்ள அறிவிப்பைப் பாருங்கள். "யாழினியின் புத்தன். புத்தன் ஒருவருக்கு உலகம் போற்றும் ஞானியாய்த் தெரிவான். ஒருவருக்கு தன் பெண்டாட்டி பிள்ளைகளைத் தவிக்க விட்டுச் சென்ற பொறுப்பற்றவனாய்த் தெரிவான். ஒருவருக்கு ஆசைகளைத் துறக்க முடிந்த வல்லவனாய்த் தெரிவான். இந்த புத்தகம் யாழினியின் புத்தன் எத்தகையவன் என்பதைச் சொல்லும் என்று நினைத்துத் தொடங்கினேன். ஆசிரியர் இளம்பிறையின் தமிழ் வளம் நான் அவர்களோடு பேசும் போதே நன்கு அறிந்தது. அதே போல் அவர்கள் பேத்தி குழலிக்கு தன்னிடம் பேசுபவர் யாராய் இருந்தாலும் ஈர்க்கும் சக்தி உண்டு. அதுவும் நான் அறிவேன். இளம்பிறை பெரும்பான்மை பெண் சமூகம் நினைப்பதை மாற்றி யோசிப்பவர். சின்ன சின்ன நிகழ்வுகள் கதைகளாக கொடுத்திருக்கிறார்கள். அதுவும் நீதி சார்ந்த கதைகள். கார்த்திகா வரைந்திருக்கும் படங்களும் குழந்தைகளை ஈர்ப்பனவாக உள்ளன. எழுதப்பட்ட பகுதிகளுக்கு பொறுத்தமான தலைப்புகள். காலக் குழந்தைகள் பாட்டி கதைகள் கேட்டு நல்வழிப்பட வாய்ப்பு குறைவு. அதனால் இத்தகைய புத்தகங்களின் அவசியம் ஏற்படுகிறது. இதில் தன் அப்பனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த சரவணன் போல குழந்தைகள் பெரியவர்களுக்கு நல்ல பாடங்களைச் சொல்லிக் கொடுக்கின்றன. அது இன்னும் அவர்களை ஈர்க்கும். ஒவ்வொரு பக்கத்திலும் இறுதியில் கொடுக்கப்பட்ட நீதிக் கருத்துகள் எல்லா பக்கங்களிலும் கொடுத்திருக்கலாம். புத்தகத்தின் அளவு குழந்தைகள் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக உள்ளது. திரு நெல்லைக் கண்ணன் அவர்களின் " மீதமொரு முலை எறி" இருக்கும் வடிவில் இருக்கிறது. அது சரி யாழினியின் புத்தன் யாரு. அவரவர் கற்பனைக்கு தோன்றுபவர் அவரவர் புத்தன். நல்லா இருக்குதுல்ல.அதே போலத் தான் இயேசுவும். இயேசு மாதா போன்றவர்களை வெளிநாட்டு வெள்ளைக் காரர்கள் போலவே ஏன் காட்டணும்னு சில இடங்களில் கருப்பு நிறத்திலும் சிற்பங்கள் செய்து வைக்கிறார்கள். குழந்தைகளுக்கான எழுத்தை அதிகப்படுத்துவோம். இன்னும் கொஞ்ச நாளில் அவர்களே அவர்களுக்காக அதிகம் எழுதத் தொடங்குவார்கள். இப்பவே தொடங்கி விட்டார்கள்.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!