05 January, 2026
திருப்பலியில முக்கியமான இடம் எழுந்தேற்றம் என்பது. அப்போது இயேசு சிலுவையில் தன் உடலையும் இரத்தத்தையும் நமக்காகக் கொடுத்து மரணித்த நேரம் நினைவுபடுத்தப்படும்.
இது சார்ந்த என் எண்ணங்கள்.
இந்த எழுந்தேற்ற நேரத்தில் எல்லோரும் ரொம்ப பய பக்தியோடு பிரார்த்திப்பார்கள். நான் நெற்றி நிலம் தொட வணங்குவேன். அந்த நேரத்தில் என் நிரந்தரப் பிரார்த்தனை என் இரு மகள்களின் முதுகுத் தண்டுவடம் பலப்பட வேண்டும் என்பதாக இருக்கும். அதன் உடன் அப்போதுள்ள தேவைகளும் இணைந்து கொள்ளும்.
ஒரு வயதான மூதாட்டி அப்போது மிகுந்த சத்தத்தோடு பிரார்த்திப்பார்கள். மற்றவர்களுக்கு இடைஞ்சலாகத் தான் இருக்கும். நான் வந்த புதிதில் அவர்களிடம் சொன்னேன். "அடுத்தவங்களுக்கு தொந்தரவில்லாமல் செபிக்க வேண்டாமா" என. அப்போ என் தோழி சொன்னார்கள் " எத்தனையோ பேர் சொல்லி பார்த்தாச்சு. நீங்க சொல்லியா மாத்தப் போறாங்க" என்று. இன்று வரை மாறவில்லை.
ஆரம்ப காலங்களில் நன்மையை நாவில் தான் வழங்குவார்கள். குருக்கள் மட்டுமே வழங்குவார்கள். இப்போது கன்னியரும் கொடுக்கிறார்கள்.
கொரோனா காலத்தில் நாவில் கொடுப்பது தடை செய்யப்பட்டது. இடது கையில் வாங்கி வலது கையில் எடுத்து நாமே உட் கொள்ள வேண்டும் எனக் கொண்டு வந்தார்கள். எனக்கு இடது கையில் வாங்குவது பிடிக்காது அதனால் வலது கையில் வாங்கி அப்படியே வாயில் இட்டுக் கொள்வேன்.
இப்போ கொரோனா காலம் முடிந்த பிறகு வாயில் கொடுக்கிறார்கள். இதில் குருக்களுக்கு என்ன சங்கடம் என்றால் ஒருவருக்கு வாயில் கொடுக்க வேண்டும் . அடுத்து வருபவர் கையை நீட்டுவர். அதற்கடுத்து வருபவர்களுக்கு கையில் கொடுக்க வேண்டும் என்று எண்ணும் போது திடீரென்று அவருக்கு நின்று வாங்குவது மரியாதைக் குறைவாகத் தெரியும் முழங்கால் போட்டு வாங்குவார். ரொம்ப பாவம் அவங்க. ஒவ்வொருத்தருக்கும் கிண்ணத்தில் எடுத்து கொடுத்தே கை விழுந்து போகும். இதில் இத்தனை வேறுபாடுகள். அதுவும் திருவிழா நாட்களில் மிகுந்த கூட்டம் இருக்கும். அசந்து போய் விடுவார்கள். அதனால் கன்னியாஸ்திரிகளும் கொடுக்கலாம் என்று வந்தது நல்லது தான்.
ஆனால் சொல்லி வைத்தது போல் அத்தனை பேருமே முக்காட்டை கழுத்தில் தான் போடுகிறார்கள். கிறிஸ்தவ முறைப்படி ஆலயத்தினுள் பெண்கள் தலை முடிய தெரிய இருக்கக் கூடாது. அப்படி இருக்க நன்மை வழங்குபவர்கள் இப்படி வருவது உறுத்தலாக இருக்கிறது.
ஒரு சின்ன ஆலோசனை. யாராவது உரியவர்கள் பார்வைக்கு சென்று சேருதா பார்ப்போம். நன்மை கொடுக்கும் போது புடவையை சரி செய்து கொண்டிருப்பது கடினம். ஒரு நெட் தலையில் போட்டு முடிச்சிட்டுக் கொள்ளலாமே.
உறுத்தாத மாற்றங்கள் வரவேற்கத் தக்கதே.!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!