30 January, 2026
திருச்சியில் ஒரு திருமணம் .
வழக்கம் போல் கணவர் கடின வழியைத் தேர்ந்தெடுத்து மதுரை வரை பஸ்சில் போய் பிறகு அங்கிருந்து இன்னொரு பஸ்சில் திருச்சி செல்லலாம் என்றார்.
நானோ சொகுசுப் பேர்வழி. இன்டர் சிட்டியில திருச்சி போகலாம் என்றேன்.
மனம் இறங்கிய கணவர் என் வழியை ஓகே பண்ணினார். திருச்சியில் இறங்கிய பின் அவரே பயணம் சிறப்பாக இருந்தது என்றார்.
இன்டர் சிட்டி திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டு நெல்லை வருகிறது. 2.45 க்கு மதியம் நெல்லையிலிருந்து புறப்படுகிறது. திருச்செந்தூரில் முருகனுக்கு நேர்ந்து மொட்டை போட்டு வந்த ஒருவர் இன்டர் சிட்டி தானே என உறுதிப்படுத்திக் கொண்டார். "வந்தே பாரத்" தோனு சந்தேகமா இருந்தது
" என்றார். அவ்வளவு சுகமாக இருந்தது பயணம். அந்த அன்பர் ஐந்து வருடமாக குழந்தை இல்லாமல் வேண்டுதல் வைத்து குழந்தை பிறந்த 17 நாட்களில் பாண்டிச்சேரியிலிருந்து திருச்செந்தூர் வந்து வேண்டுதல் செலுத்தி செல்கிறார்.
மதுரையை இரண்டே மணி நேரங்களில் அடைகிறது. அங்கிருந்து திருச்சி செல்ல 2 3/4 மணி நேரம். திண்டுக்கல் வழியாக சுற்றிச் செல்கிறது.
திருச்சியில் இறங்கியதும் ஆட்டோ ஓட்டுனர்களாக நிறைய பெண்களைப் பார்க்க முடிந்தது. சந்தோஷமா இருந்தது. அதனால் திருமண மண்டபத்துக்கு ஒரு பெண் ஓட்டிய ஆட்டோவிலேயே ஏறினோம்.
அந்தப் பெண்ணும் உற்சாகமாகப் பேசிக் கொண்டே வந்தார். பத்து வருடங்களுக்கு மேலாக ஆட்டோ ஓட்டுறாராம். இப்போது அவருக்கு 42 தான் வயது. அப்போ 30+ யிலிருந்து ஓட்டுகிறார். மிகவும் தைர்யமாக பேசிக் கொண்டு வந்தார்.
பத்து வருடங்களில் ஏதும் பிரச்னையை சந்தித்திருக்கிறீர்களா எனக் கேட்டேன். ஏதும் நிகழ்வைச் சொல்வார் எனக் காத்திருக்க இது வரை எந்தப் பிரச்னையும் வந்ததில்லை. என்றார். குடிச்சிட்டு சில சமயம் ஏறுவாங்க நான் பேசிப் பேசியே "பத்திரமா போ தங்கச்சி" ன்னு சொல்ல வச்சிடுவேன்னார்.
இதயத்தில் மூணு ப்ளாக் இருக்கிறது. சிறு வயதிலேயே கணவர் என்னைப் பிரிந்து விட்டதால் நான் சிங்கிள் பேரன்ட் தான் என்று பல அதிர்ச்சிகளை அடுக்கடுக்காக அளித்தார்.
எனக்கு இந்த துணிச்சல்காரி உடன் படமெடுக்க ஆசையேற்பட்டது. முக நூலில் போடவா என்றேன் "தாராளமா போடுங்க. என்னைப் பார்த்து ஒன்றிரண்டு பேர் தைர்யமானால் நல்லது தானே என்றார்.
இறங்கும் போது ஒரு விசிட்டிங் கார்ட் கொடுத்து அடுத்த தடவை வரும் போது என்னை அழையுங்கள். திருச்சியில் உள்ள கோயில்கள் எல்லாம் கூட்டிட்டுப் போய் காட்டுறேன் " என்றார்.
படத்தில் துணிச்சல் காரியுடன் பாவமாக நான். ஏன் பாவம் என்றால் இது வரை என்ன செய்து விட்டேன் என்று என்னை துணிச்சல்காரி என்று நம்பிக் கொண்டிருந்தேன் என்று என் மனச்சாட்சி மண்டையிலடித்து கேள்வி கேட்டதால். தான்..
தேவைப்படும் திருச்சிகாரர்கள் என்னைத் தொடர்பு கொண்டால் விசிட்டிங் கார்ட் புகைப்படம் எடுத்து அனுப்புகிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!