Bio Data !!

25 January, 2026

சமூக ஊடகம் - மன உறுதி - அவசியம்

சமூக ஊடகங்களில் இன்று பலரும் இயங்கிக் கொண்டு இருக்கிறோம். சமீபத்தில் கேரளாவில் தீபக் என்ற ஆண் ஒரு பெண் தன்னை சோஷியல் மீடியாவில் தவறாகச் சித்தரித்து விட்டாள் என்று தற்கொலை செய்திருக்கிறார். இந்த நேரம் எனக்கு இங்கே உங்களிடம் சொல்ல ஒன்று இருக்கிறது. நான் 2011 இல் இருந்து வலை உலகத்தில் நீந்திக் கொண்டிருக்கிறேன். அப்போ "ப்ளாக்" என்னும் வலைப்பூவில் நம் மனதுக்கு பிடித்த படி எழுதுவோம். அந்தக் காலத்திலேயே நான் இத்தகைய இடரைக் கடந்து வந்திருக்கிறேன். சென்னைக்கு ஒரு முறை போய் வந்த போது சில பிரபலங்களைக் கண்டு வந்ததால் அவர்களைப் பற்றி தினம் ஒரு பதிவாகப் போட்டுக் கொண்டிருத்தேன். எங்கே இவள் பெரியாளாக ஆகி விடுவாளோ என பொறாமைப்பட்ட சிலரின் தூண்டுதலால் ஒரு நபர் வெளிநாட்டிலிருந்து என்னை "அக்கா" என்று அன்பாக அழைப்பவர் என்னைப் பற்றி தப்பும் தவறுமாக ஒரு பதிவு போட்டு விட்டார். தப்புத் தவறும் என்றதும் வேற மாதிரி யோசிக்க வேண்டாம். ரொம்ப மெனக்கெட்டு ஒரு வேலை செய்திருந்தாங்க. தூத்துக்குடியிலிருந்த ஒருவரைத் தொடர்பு கொண்டு நான் பணி புரிந்த இடத்துக்கு போகச் சொல்லி, ( என் கெட்ட நேரம் நான் அப்போ மெயின் அலுவலகத்துக்குப் போயிருந்தேன். ) என் பணி இடம் பற்றிய தகவல்களைச் சேகரித்து விட்டார்கள். அப்போது தான் தாம் சொல்லும் பொய் கொஞ்சம் உண்மை போலத் தெரியும் என்று. அவரது வலைப்பக்கத்தில், நான் என் கீழ் பணி புரிபவர்களை மிகவும் துன்புறுத்துவதாகவும் (😀) என் அராஜகப் போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்றும் பதிந்திருந்தார்கள். நான் கிளார்க்காக இருந்து அதிகாரி ஆனவள். அதனாலேயே என் கீழ் பணி புரிபவர்களிடம் என்னால் ரொம்ப தோழமையாக பழக முடிந்தது. அது தெரியாமல் இப்போது போலவே பதிவின் கீழ் என்னை "சொர்ணாக்கா" ரேஞ்சுக்கு திட்டி பலரும் கமென்ட் போட்டிருந்தார்கள். அந்த பதிவில் என்னைப் பற்றிய ஒரு வரியில் கூட உண்மை கிடையாது. என்னால் இதை வீட்டிலும் பகிர்ந்து கொள்ள முடியாது. சமூக ஊடகத்தில் இயங்குவது பிடிக்காதிருந்தது. மிகுந்த மன உளைச்சலுக்குள்ளானேன். நான் இதைத் தொடர்ந்து ஒரு வருடம் ஏதும் எழுதாமல் வலைப்பூவை விட்டு விலகி இருந்தேன். பின் நண்பர்கள் உண்மையில்லாத ஒரு விஷயத்துக்காக நீங்க ஏன் எழுதாமல் இருக்கணும்னு வற்புறுத்தி , அதன் பின் எழுதத் தொடங்கி இன்று இந்த நிலையில் இருக்கிறேன். என்னை எதிர்த்தவர்கள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை இல்லை. இனி இத்தகைய அவமானங்கள் உண்மைத்தன்மையற்ற செயல்பாடுகள் யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். தப்பு செய்தவன் தண்டனை அடைய இப்போ நிறைய வாய்ப்புகள் இருக்குன்றன. மொத்த உலகத்திலும் சமூக ஊடகங்களில் இயங்குபவர் ரொம்பக் குறைவான பேர் தான் என்பதை பாதிக்கப்பட்டவர் முதலில் நன்கு உணர வேண்டும். அடுத்து காவல் துறையின் தலையீடு தேவைப்பட்டால் அவர்களை அணுக வேண்டும். முதலில் மனதை திடமாக வைத்துக் கொள்ள வேண்டும் . நம்மை நன்கு அறிந்தவர்கள் நம்மைத் தவறாக எண்ண மாட்டார்கள். நம்மை அறியாதவர்கள் நம்மைப் பற்றித் தவறாக நினைத்தால் அதற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை. அன்று தீபக்கைத் திட்டி கமென்ட் இட்டவர்கள் இன்று வீடியோ பகிர்ந்த பெண்ணைத் திட்டுகிறார்கள். நாளை ஒரு வேளை வேறொரு செய்தி வந்தால் மறுபடியும் மாறுவார்கள். இவர்களல்ல நம்மை நியாயத் தீர்ப்பிட வேண்டியவர்கள். இவர்களுக்காக கொடுக்க வேண்டிய அளவு மலிவானதல்ல நம் உயிர். இதுவும் கடந்து போகும் என்று திட மனதோடிருங்கள்.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!