Bio Data !!

19 January, 2026

திரைப்படம் : அங்கம்மாள். OTT : அமேசான் ப்ரைம். கதை : பெருமாள் முருகனின் “கோடித்துணி” சிறுகதை. அறிமுக இயக்குநர் : விபின் ராதாகிருஷ்ணன் முக்கிய நடிகர்கள் : கீதா கைலாசம் (அங்கம்மாள்) சரண் சக்தி,, பரணி. (அங்கம்மாளின் மகன்கள்) தென்றல் ரகுநாதன் அங்கம்மாளின் மூத்த மருமகள். முல்லையரசி ( மருத்துவர் மகன் காதலிக்கும் ஜாஸ்மின்) மேல் சட்டை போடாத ஆச்சி அல்லது அப்பத்தா அங்கம்மாள். ஒரு fusion ஆக பேத்தியை வைத்து Champ வண்டியோட்டிக் கொண்டே பழங் கதை பேசிப் போகிறார்கள். ஆரம்பமே இந்த படம் நமக்கு நிச்சயமாக பிடிக்கும் என்ற உறுதி அளித்தது. ஒரு சிலேட்டில் அங்கம்மாள் உச்சாணிப் பூவை வரைந்து பார்க்கும் போது , மனதிலேயே ஓராயிரம் கோலங்களோடு வசித்த என் அல்லி அக்காவிடமிருந்து ஒவ்வொரு கோலமாக ஸ்லேட்டில் போட வைத்து , நான் நோட்டுக்கு கொண்டு வந்த கோலங்களின் காட்சி ஞாபகம் வந்தது. அது என்ன உச்சாணிப்பூ. மலை மேல் பல வருடங்களுக்கு ஒரு முறை பூத்து கிராமம் எங்கும் வாசம் பரப்பும் பூ. அங்கம்மாளும் அத்தகைய ஒரு பூ தான். மற்ற பெண்களைப் போல் உண்டு, உறங்கி செத்து மடியும் சாதாரண வாழ்க்கையல்ல அவளுடையது. அங்கம்மாள் மகன் மருத்துவர் பவளம் தான் காதலிக்கும் பெண்ணிடம் ஒரு புகைப்படம் கேட்க “நான் போட்டோவில நல்லா இருக்க மாட்டேன் “ எனச் சொல்ல “நேரில மட்டும்” என்னும் அவனிடம் “சொல்லு, நேரில மட்டும் , என்ன நேர்ல மட்டும்“ என அவள் கேட்க “சொல்றேன். இரு படம் முடியட்டும் என அவளை இழுத்து தன் கன்னத்தில் கிஸ் அடிக்க வைக்கும் காட்சி செம ரொமான்ஸ். பவளத்தின் அப்பாவி அண்ணனாக பரணி நடிக்கிறார். பவளம் தான் காதலிக்கும் பணக்கார வீட்டின் குடும்பத்தினர் வருவார்களாதலால் அம்மா சேலைக்கு சட்டை போட்டு பழக வேண்டும் என்று வற்புறுத்த “என் மகனுக்காக சட்டை என்ன வேட்டி கட்டச் சொன்னாலும் கட்டுவேன்” என்று வெள்ளைத் துணியில் ப்ளவுஸ் தைத்து போட்டுக் கொள்கிறார். ஆனால் அதை ஓரிரு நாட்களிலேயே கழற்றியும் விடுகிறார் படத்தின் சில காட்சிகளில் அன்பும் காதலும் கலந்த கலவையோடு அங்கம்மாள் பார்க்கும் ஒரு முதியவர்( சிறு வயது நண்பராக இருக்கலாம் என்பது என் கணிப்பு. )முன் அந்த ப்ளவுஸும் வெட்கமுமாக நிற்பது போல் ஒரு காட்சி வைத்திருந்தால் இன்னும் எவ்வளவு அழகாக இருந்திருக்கும். பிடிவாதமான, கோபக்கார அங்கம்மா கதாபாத்திரத்துக்கு அவர்கள் போட்டிருக்கும் கருப்பு உதட்டுச் சாயம் அழுத்தமான உதடுகளைக் கொடுத்து , இன்னும் வலிமை சேர்க்கிறது. ஒரு மகனை வயக்காட்டில் வேலைக்கு அனுப்பி அடுத்த மகனை மருத்துவராக்குவது அந்தக் குடும்பத்துக்குள் எவ்வளவு பெரிய ஏற்றத் தாழ்வை உண்டாக்கும் என்பது சிந்திக்க வேண்டிய பிரச்னை. பரணி தாழ்வு மனப்பான்மையை உள் அழுத்தி தன் சோகத்தை நாதஸ்வரம் வாசிக்க கற்றுக் கொள்வதில் சமப்படுத்தும் , கொஞ்சம் கொஞ்சமாக சிறப்பாகவே வாசிக்கும் அண்ணன் கதாபாத்திரத்தில் ஜொலிக்கிறார். திரை உலகம் இவரை இன்னும் அதிகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மருத்துவரின் காதலி குடும்பம் இவர்கள் வீட்டுக்கு வரும் போது அங்கம்மாள் மகன் விருப்பப்படி மேல் சட்டை அணிந்து இருந்தாலும் , வந்த இளம்பெண் கையில்லாத , தோள்களை முழுவதுமாக தெரியும்படி அணிந்திருந்த ஆடை நவ நாகரீகம் என்று ஏற்றுக் கொள்ளும் சமூகத்தைச் சுட்டிக் காட்டி ஒருவர் அணியும் ஆடை அவரவர் விருப்பத்தைப் பொருத்தது. அடுத்தவர் அதைக் கட்டுப் படுத்துவது அவசியமற்றது என்ற கருத்தை வலியுறுத்து இருக்கலாம். செய்யவில்லை. கிராமத்துக்குப் பொருத்தமில்லாத நல்ல நிறமுடைய பையனுக்கு காதலியை மாநிறத்துக்கும் குறைவான நிறமுடைய ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்ததற்கு இயக்குநருக்கு சிறப்பு பாராட்டுகள். படம் முடிவடைந்தாலும் , என் மனம் இத்தகைய போராட்டக் குடும்பத்துக்கு சம்பந்தமே இல்லாத ஒரு இடத்தில் இருந்து மருமகளாக வந்து சந்திக்கப் போகும் பிரச்னைகளை வைத்து அங்கம்மாள் 2 எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டது.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!