17 October, 2026
#பிரசவம் மறு பிறவி
#பிரசவம் என்பது மறுபிறவி
பிரசவம் என்பது பெண்களுக்கு மறு பிறவி தான். கரு தரிப்பதற்கே இன்று பல தம்பதியர் பெரும் பிரயத்தனம் எடுக்க வேண்டி இருக்கிறது. மன அழுத்தம் நிறைந்த இன்றைய வாழ்க்கைச் சூழல் இயல்பாக நடக்க வேண்டிய ஒன்றிற்கு மருத்துவ மனையில் கால் கடுக்க நிற்க வைத்திருக்கிறது. கை நிறைய பரிசோதனை முடிவுகளோடும் மனம் நிறையப் பாரத்தோடும் வரிசையில் காத்திருக்கும் தம்பதியரைப் பார்க்க மனம் வலிக்கத் தான் செய்கிறது. மாதாந்தர நோவு அவர்களை உடலோடு எவ்வளவு மன வலிகளையும் சுமக்க வைக்கிறது என்பதைச் சொல்லத் தான் வேண்டும்.
காதல் திருமணத்தால் குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்காமலும் , வறுமையினாலும் வயிற்றில் ஏந்திய குழந்தைகளை பத்திரமாக இறக்கி வைக்கும் வரை தாய் படும் பாடு பெறும் பாடு.
தாய் தந்தை பார்த்து செய்த திருமணத்தில் பெற்றவர்களின் அதீத கவனிப்பினால் சதைப் பிடிப்பான குழந்தைகள் உயரம் அதாவது நீளமும் கூடி இருந்தால் வயிற்றில் சுழன்று தலை கீழே இறங்க இடம் பத்தாமல் அதனால் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுக்க வேண்டியும் நேரிடலாம்.
அந்தக் காலத்துல பிள்ளத் தாச்சிய கண்ணு கலங்காம பார்த்துக்கணும் பாங்க. ஆனால் இன்று பல காரணங்களால் மன உளைச்சலுக்கு ஆளாகிற தாய்க்கு ரத்தம் அழுத்தமும் கூடி உரிய காலம் வரை வயிற்றில் வைத்திருக்க முடியாமல் அவசர அவசரமாக அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுக்க வேண்டி வருகிறது.
அறுவை சிகிச்சைக்காக முதுகில் தண்டு வடத்தில் ஊசி குத்த பெண் உடலை வில் போல் வளைப்பார்கள் எத்தனை பேருக்கு இது தெரியும். அப்படி வளைத்துப் போடப்படும் ஊசி குத்திய வலியை அவள் குழந்தை பெற்ற பிறகும் வாழ்நாள் முழுவதும் சுமக்க வேண்டும்.
இதுக்குத் தான் நல்லா உழைக்கணும் அப்பத்தான் இயற்கையா பிரசவம் ஆகும்கிறவங்களுக்கு ஒண்ணு சொல்ல விரும்பறேன். நம் உடலின் உள் பகுதியில் உள்ள உறுப்புகள் எல்லாம் கொஞ்சம் கூட இடம் வீணாகி விடாமல் மிக நேர்த்தியாக அடுக்கப்பட்டிருக்கின்றன. குழந்தை சுமப்பதால் விரிவடையும் கர்ப்பப்பை இயற்கை முறையில் குழந்தை பிறந்த பிறகும் ஒரு சிலருக்கு பல காரணங்களால் தொய்வடைந்து இறங்கி கர்ப்ப வாய் வரை வந்து முட்டும். அத்தகைய பெண்களுக்கு தினசரி பணிகளைச் செய்வதிலும் வேகமாக நடப்பதிலும் பெரும் சிரமம் இருக்கும்.
கர்ப்பப்பை இறங்கியதால் உள்ளே அழகாக அடுக்கப்பட்டிருந்த வரிசை கலைந்து சிறுநீர்ப்பையும் ஒரு சிலருக்கு இறங்கி விடும். இறங்கிய கர்ப்பப்பை தொற்று நோய்க்கிறுமிகளால் பாதிக்கப்பட்டு பின்னாளில் கான்சராகும் வாய்ப்புள்ளதால் அறுபது வயதுக்குப் பிறகு கூட அறுவை சிகிச்சை செய்து கர்ப்பப்பையை நீக்குவார்கள். அப்போதும் மயக்கத்திற்காக அதே வில் வளைப்பு சிகிச்சை நடக்கும்.
இப்பொழுது சொல்லுங்கள். பிரசவம் என்பது மறு பிறவியா இல்லையா. குழந்தை பிறப்பு ரொம்பக் குறைந்து விட்டது தமிழ்நாட்டில் தமிழர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது. ஒன்றோடு நிறுத்தாதீர்கள் என்று சின்னத்திரையில் நிகழ்ச்சி நடத்துகிறோமே மனித குலம் தழைக்க இத்தனை அவலங்களைக் கடந்து வரும் பெண்ணிடம் அனுசரணையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர வைக்கவும் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டாமா?
இது வரை நான் சொன்னது பிரசவம் என்ற ஒரு நதியைப் பற்றி மட்டும் தான். மூட் ஸ்விங், ஹார்மோனல் மாறுபாடு எனப் பேசப் பல கிளை நதிகளும் இருக்கின்றன. கண்டிப்பாகப் பேசுகிறேன்.்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!