Bio Data !!

20 November, 2011

"ஆதார்"


"ஆதார்" "UID " இதெல்லாம் கேள்வி பட்டிருக்கீங்களா? இல்லைனா சீக்கிரம் பட்டுருவீங்க.

அகில இந்திய அளவில் இந்த ID  கொடுக்கிறார்கள். ஏற்கனவே இருக்கிற பத்து ID  கூட பதினொண்ணா இதுவும் இருக்கட்டுமுன்னு நான், என் வீட்டுக்காரர், என் மகள் மூவருமாக தேடித் போனோம். ஒரு வீட்டில் தான் அந்தப் பணி நடந்து கொண்டிருந்தது. கூட்டம் பார்த்தால் கொஞ்சம் தான் இருந்த மாதிரி இருந்தது. என்ன ஒரு ஐம்பது பேருக்குள் தான் நின்று கொண்டு இருந்தார்கள். சரி சீக்கிரமா வேலையை முடிச்சிட்டு அன்று மாலையில் கூடுவதாக இருந்த பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளலாம்னு மகிழ்ச்சியில் இருந்தேன்.

ஒரு form கொடுத்திருந்தார்கள். வீட்டில் எத்தனை பேர் இருந்தாலும் ரெண்டே ரெண்டு forms தான். நாம் மேலே தேவை இருந்தால் xerox எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் நம் முகவரிக்கு ஒரு சான்றும், புகைப்படத்துக்கு ஒரு சான்றும் கொண்டு செல்லவேண்டும். அந்த சான்றுகள் இருபது போல லிஸ்ட் கொடுத்திருக்கிறார்கள். அவற்றுள் ஏதாவது ரெண்டு. எல்லாம் சரியாக கொண்டு வரிசையிலும் நின்றாயிற்று. மகிழ்வுப் பேற்றுக்கான பாதையில் இருந்ததால் என் மகளை ஒரு இடம் பார்த்து அமர வைத்து விட்டு நான் வரிசையில் நின்றேன்.

ஒரு ஆணிடமும் ஒரு பெண்ணிடமுமாக மாற்றி மாற்றி வாங்குகிறார்கள். ஆனா என்ன கொடுமைனா ஆண்கள் ஒருவர் ஒரு அப்ளிகேஷன் வைத்திருந்தா  பெண்கள் வீட்டில் உள்ள எல்லோருக்குமாக சேர்த்து அஞ்சு பத்து வைத்திருக்கிறார்கள். வரிசையில் ஒரு பெண் நகர்வதற்குள் ஐந்து ஆண்கள் நகர்ந்து விடுகிறார்கள். போதாதற்கு இடை செருகல் வேறு. இந்த அநியாயம் பொறுக்காமல் ஒருவர் சவுண்ட் விட பாரம் வாங்கிக் கொண்டிருந்தவன், "ஆபீசர் (நம்ம ஆபீசர் இல்ல) வருவார் அவரிடம் இதே சத்தம் கொடுப்பீங்களா?"னு மிரட்டிக் கொண்டிருந்தான். பொதுவாகவே எனது அனுபவப்படி , கூட்டம் சேர்ந்திருக்கும் இடங்களில் நேர்மையாக செயல்பாடு இருந்தால் எவ்வளவு நேரம் ஆனாலும் பொறுமையாக இருப்பார்கள். இல்லை என்றால் ஒரே கூச்சலும் அமளியும் தான்.

முப்பது முப்பது பாரங்கள் வாங்கி மாடிக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்கள், மக்களையும் சேர்த்து தான். மாடியில் நான்கு பேர் கணினியின்  முன் அமர்ந்திருந்தார்கள். நாம் போனதும் கட்டை விரலை தவிர்த்து மீதி நான்கு விரல்களையும் ஒரு கருவியின் மேல் வைத்து அழுத்தச் சொல்கிறார்கள். அரை முழுவதும் "நல்லா அழுத்தும்மா" னு ஒரே சத்தம். அதில் இருந்த டெக்னிக்கை கண்டு பிடித்து விட்டதால் உங்களுக்கும் உதவும் என்று சொல்கிறேன். நாம் விரல்கள் அழுத்தும் இடத்தில் நான்கு 'பச்சை விளக்கு'கள் எரியும். எந்த விளக்கு எரியவில்லையோ அந்த விரலை மட்டும் இன்னும் கொஞ்சம் கூடுதலாக அழுத்தினால் போதும். நான்கு விளக்குகளும் எரிந்த உடன் நம் விரல்களின் ரேகைகள் பதிவாகி விடுகின்றன.

பின் இரு கட்டை விரல்களையும் சேர்த்து அந்த கருவியில் அழுத்த சொல்கிறார்கள். அதன் பின் கணினியின் முன் உள்ள நாற்காலியில் அமரச் சொல்லி இரு கண்களை விரித்து நோக்க சொல்கிறார்கள். எவ்வளவு விரித்தாலும் "இன்னும்,இன்னும்" என்கிறார்கள். ஒரு வழியா கண்களின் ரேகைகளும் பதிவாகி விடுகின்றன.


நமக்கு எதிரே இருக்கும் காமிராவைப் பார்க்க சொல்கிறார்கள். அங்கே தான் வருது வில்லங்கம். நம்ம "அழகு திருமுகம்" கணினியில் தெரிஞ்சுடுதா அங்கேயே நம் பார்வை போகுது. பணியாளரும் "நேராப் பாருங்க"னு ரெண்டு மூணு தடவை சொல்லிப் பார்க்கிறார். பிறகு" என்னவோ போங்க"னு வர்ற திருமுகத்தை எடுத்து விடுகிறார். "சார் ரீடேக் உண்டா"னு கேட்டேன் முறைத்தார்.

அதன் பின் நாம் நிரப்பி கொண்டு சென்றுள்ள பாரத்தில் உள்ள தகவல்களை ஆங்கிலத்திலும் தமிழிலுமாக நிரப்புகிறார். அவரிடம் உள்ள கணினியில் நிரப்ப நிரப்ப நமக்கும் தெரிவதால் உடனுக்குடனேயே திருத்திக் கொள்ளலாம். அதனால் நமது வாக்கு சீட்டுக்களில் வருவது போல் தப்பும் தவறுமாக வருவதில்லை. இதில் தப்பு வந்தால் தவறு நமது மீது தான். பார்த்து குறிப்பிட்டு சொன்னால் சரியான தகவல்கள் வரும்.

எல்லாம் முடிந்தபின் நமது புகைப்படம், ரேகைகள், தகவல்களுடன் ஒரு பிரிண்ட் எடுத்து நம்மிடமும், மற்றொன்றை பாரத்துடனும் இணைத்துக் கொள்கிறார்கள். ID நமது முகவரிக்கு கூரியரில் வரும் என்று சொல்கிறார்கள். இது இந்திய அளவிலான ID என்பதால் உங்கள் பகுதியில் கொடுக்கும் இடங்களுக்கு சென்று கண்டிப்பாக பெற்றுக் கொள்ளுங்கள். இன்னும் சில நாட்களில் தபால் அலுவலகங்களிலும் கொடுப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது.

டிஸ்கி: போட்டோ எடுக்கும் போது மட்டும் கணினியைப் பார்த்து விடாதீர்கள். அகத்தின் அழகு முகம். முகத்தின் அழகு கண்கள் தானே!

13 comments:

  1. தகவலுக்கு நன்றி ..

    ReplyDelete
  2. நானும் இதுபற்றியபதிவு செப்டம்பரிலே போட்டிருக்கேன்.

    ReplyDelete
  3. நல்ல அனுபவம், நானும் இந்த கொடுமையை அனுபவிச்சு இருக்கேன்...!!!

    ReplyDelete
  4. இன்னும் நான் விண்ணப்பிக்கவில்லை,சுவையோ சுவையாக இருக்கிறது அனுபவம்.

    ReplyDelete
  5. நன்றி கோவை நேரம் மற்ற ஸ்டேட்ஸ் போகும் போது உதவும் அதனால் எல்லோரும் வைத்துக் கொள்வது நல்லது

    ReplyDelete
  6. உங்கள் பதிவையும் படித்து விட்டேன் லக்ஷ்மி அம்மா. மும்பைக்கும் நெல்லைக்கும் இடைவெளி மூன்று மாதங்கள்

    ReplyDelete
  7. என்ன மனோ profile போட்டோ அடிக்கடி மாறுது

    ReplyDelete
  8. 'ஆதார்' அடையாள அட்டை குறித்த அனுபவபூர்வ விளக்க தகவல்கள் அருமை.

    ReplyDelete
  9. நேற்று நானும் இந்த ’ஆதார்’ கார்டிற்கு பதிவு செய்துவிட்டேன். இது பற்றி இன்னும் நிறைய விழிப்புணர்வு நம் மக்களிடம் வரவேண்டும். தொடங்கிவிட்டீர்கள், தொடரும். நன்றி.

    ReplyDelete
  10. ஆளாளுக்கு ஆஃபிசர்னா நம்மை வம்பிழுக்க ஆரம்பிச்சுட்டீங்களே! அவ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  11. நன்றி FOOD . நீங்க நெல்லைக்கே ஆபிசர் ஆச்சே ! அப்போ எனக்கும் தானே!

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!