Bio Data !!

14 April, 2025

எழுத்தாளர் நாறும்பூநாதனைப் பற்றி சொல்ல விட்டுப் போன சில விஷயங்கள். மனிதாபிமானம் மிகுந்த ஒரு மனிதரைப் பற்றி நாம் அறிந்தவற்றை விட்டு விடாமல் எல்லாவற்றையும் சொல்லி விட வேண்டும் என நினைப்பதாலேயே பல பதிவுகள். ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக நட்பாக இருந்த உதயசங்கர் சார் பேசும் போது அவர் மனிதர்களை எவ்வளவு மதித்திருந்திருக்கிறார் நேசித்திருந்திருக்கிறார் என்பது புரிந்தது. ->அவர் மகன் திலக் பேசும் போது " எங்க அப்பா வீட்டைக் கவனிக்காம வெளியே அதிகம் போனதாக ஒரு சிலர் சொல்றாங்க. அவர் எங்களுக்கும் செய்ய வேண்டிய எல்லாம் செய்தார். என் அப்பா எல்லாவற்றையும் சரியாகத் தான் செய்தார். அவரைப் பற்றி யாராவது தவறாகச் சொன்னால் நிச்சயம் 100% சொல்பவர் தான் தவறானவராக இருக்க வேண்டும்" பெற்ற பிள்ளை சரியாகப் புரிந்து கொண்ட பிறகு வேறென்ன வேண்டும். -> நாதன் சாருடைய அண்ணன் மணி ஒரு விஷயம் சொன்னார். நாதன் காரை மிக நிதானமாக ஓட்டுவாராம். ஒரு முறை எல்லோரும் போய்க் கொண்டிருந்த போது காரை ஒரு ஓரமாக நிறுத்தினாராம். எதற்கென்றால் பறந்து வந்து காரின் வைப்பரில் ரெக்கை மாட்டிக் கொள்ள படபடத்துக் கொண்டிருந்த ஒரு பட்டாம்பூச்சியை எடுத்து பறக்க விட்டு விட்டு பயணத்தைத் தொடர்ந்தாராம். இவர் மனிதர்களிடம் அன்பாக இருந்ததில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை. -> ஏழை எளியவர்களிடம் பழகியதைப் போலவே அவரால் அதிகாரிகளிடமும் பழக முடிந்திருக்கின்றது. அதனாலேயே வலு குறைந்தவர்களுக்குத் தேவையானதைப் பெற்றுத் தர முடிந்திருக்கிறது. -> சட்ட மன்ற உறுப்பினர் திரு அப்துல் வஹாப் தன் பேச்சில் குறிப்பிட்டது போல பாழடைந்து பல சமூக குற்றங்கள் நடக்கச் சாதகமான இடமாக இருந்த மேடைப் போலீஸ் ஸ்டேஷனை , பல அரசு அதிகாரிகளையும் அரசியல் தலைவர்களையும் அழைத்துச் சென்று காட்டி இன்று அழகு மிகுந்த ஒரு இடமாக மாற்றியதில் பெரும் பங்கு நாறும்பூநாதன் சாருடையது. -> இயக்குநர் சுகா அவர்கள் கண்ணீரை தடுக்க முடியாமல் பேசிய போது நம்மாலும் கண்ணீருக்குத் தடை போட முடியவில்லை. அவர் உதவி செய்த சிலருடைய பெயர்களை குறிப்பிடுகின்றோம் ஆனால் பிறருக்குத் தெரியாமல் பலருக்கு உதவி செய்து இருக்கிறார். -> ஓவியர் பொன் வள்ளி நாயகத்துக்கு மிகுந்த ஆதரவாக இருந்து நெல்லையில் சாகித்திய அகடமி விருது பெற்றவர்களின் புகைப்படங்களை வரைந்து நெல்லை புத்தக கண் காட்சியில் வைத்தது முதல் சென்னை அண்ணா நூலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்து வைப்பது வரை பெரும் உறுதுணையாக இருந்திருக்கிறார் நாறும்பூநாதன். நம் முயற்சியில் நாம் முன்னேறுவதைப் பார்த்தே பொறாமைப்படுபவர்களின் ்மத்தியில் பலருடைய திறமைகளை கண்டறிந்து அவர்கள் வெளியுலகத்துக்குத் தெரிய பெரும் முயற்சி எடுத்திருக்கிறார். அரசு அதிகாரி ரேவதி அவர்கள் பேசும் போது தனக்கு அவர் தந்த ஊக்கத்தால் தான் இரண்டு புத்தகங்கள் வெளியிட்டதாக குறிப்பிட்டார். அவர் பேச்சில் சொன்ன இன்னொரு முக்கியமான விஷயம் நம் அனைவருக்கும் பயன் படக் கூடியது. " யாரையாவது சந்திக்க வேண்டும் என நினைத்தால் உடனே சந்தித்து விடுங்கள். யாரிடமாவது பேச வேண்டும் என்று தோன்றினால் உடனே பேசி விடுங்கள். ஏனென்றால் தள்ளிப் போடுவதால் தவற விட நேரிடும். நாளை அவர் இல்லாமல் போய் விடலாம் என்றார்.உண்மை. தொகுத்துச் சொன்னால் நாறும்பூநாதன் தன்னை அறுத்து ஒறுத்து அடுத்தவருக்கு உதவி இருக்கிறார். தன்னை முன்னிலைப்படுத்தாமல் அடுத்தவர் உயர உதவி இருக்கிறார். இறந்து போன பலரையும் உயிரோடு வைத்தவர் என்று பேசினார்கள். ஆம் மறந்து போயிருக்கக் கூடிய பலரைப் பற்றிய தகவல்களைத் தேடிச் சேர்த்து ஆவணப்படுத்தி இருக்கிறார். சிறந்த கம்யூனிஸ்ட் என்பவர் முதலில் சிறந்த மனிதராக இருக்க வேண்டும். அந்த வகையில் தோழர் நாறும்பூநாதன் ஒரு மிகச் சிறந்த கம்யூனிஸ்ட். அவர் தெய்வத்தை நம்பாதவராக இருந்திருக்கலாம் ஆனால் தெய்வ குணம் நிறைந்தவராக இருந்திருக்கிறார். போற்றுவோம். பின் தொடர்வோம்.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!