Bio Data !!

09 April, 2025

"வார்த்தை" என்பது மிகவும் சக்தி வாய்ந்தது. பைபிளில் " வார்த்தை மனுவானார். நம்மிடையே குடி கொண்டார்" என்று வருகிறது. மற்ற மதங்களிலும் மந்திரங்கள் என்பது திருப்பித் திருப்பி சொல்லப்பட்ட வார்த்தைகளால் வலு பெற்றது. நல்லவற்றையே பேச வேண்டும். ஏதோ தீய ஒன்றைச் சொல்லும் போது வானிலுள்ள தேவதைகள் "ததாஸ்து" என்று சொல்லி விட்டால் "அப்படியே ஆகட்டும் என்ற அவற்றின் ஆசீர்வாதத்தால் தீயவை நிகழ்ந்து விடும் என்று நம் முன்னோர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம். வார்த்தை என்பது அவ்வளவு சக்தி வாய்ந்தது. ஆனால் பலர் அதை அறியாமல் மோசமான வார்த்தைகளை உச்சரிப்பதை நாகரீகமாக எண்ணி , திரைப்படங்களிலும், பாடல்களிலும், சோஷியல் மீடியாக்களில் கமென்ட்டுகளிலும் பயன்படுத்துகிறார்கள். இந்த அவசர உலகில் வார்த்தைகள் கூட சுருங்கி ஸ்மைலிகளாகி விட்டன. ஒரு முழு வார்த்தையை ஒரு எழுத்து உணர்த்தி விடுகிறது. "K" என்று மட்டும் சொல்வது நாம் ஒரு விஷயத்துக்கு உடன்படுவதாக எடுத்துக் கொள்ளப்படும். ஒரு விஷயத்தை நாம் சொல்லும் விதமே அதை எதிரிலிருப்பவர் ஏற்றுக் கொள்ளவும் மறுக்கவும் காரணமாகி விடும். வார்த்தைக்குச் சமமாய் அதைச் சொல்லும் தொனியும் முக்கியம் வாய்ந்தது. முக்கியமாக அலை பேசியில் பேசும் போது நம் தொனியில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். இன்று திருமணத்துக்கும் நிச்சயத்துக்கும் இடையே மண மக்கள் அதிகம் பேசிக் கொள்வதாலேயே பல விஷயங்கள் புரிந்து இருவருக்குமிடையே திருமணம் ஒத்து வராது என்று தெரிந்து திருமணங்கள் நிறுத்தப் படுகின்றன. விவாகரத்துக்கு அது பரவாயில்லை தான். அதிகம் பேசாதவர்கள் நல்லவர்கள் என்ற கருத்து நம்மிடையே இருக்கிறது. அவர்கள் நினைப்பதை நாம் தெரிந்து கொள்ள முடியாமல் போகும். அதனால் எனது விருப்பம் பேசா மடந்தைகளைக் காட்டிலும் லொட லொடப்பவர்களே.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!