Bio Data !!

06 June, 2026

# மன ஒடுக்கம். Inferiority complex க்கு மிக அழகான தமிழ்ச் சொல் மன ஒடுக்கம். சிறு வயதிலிருந்தே என்னிடம் தன்னம்பிக்கை மிகுந்து இருந்ததை உணர்ந்திருக்கிறேன். நான் பெரிய அழகி எல்லாம் இல்லை. என் இரு தங்கைகளும் எங்க அப்பாவைப் போல பொன் தோல் உடையவர்கள். நான் எங்க அம்மாவைப் போல மாநிறம். "உங்க தங்கச்சியா. பார்த்தா தெரியவே இல்ல. " இது நிறத்தை மட்டுமே குறிப்பிடுவது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். மூவரில் உயரமும் உயரத்துக்கு ஏற்ற உடம்பும் உடையவள் நான். அது ஒரு பொருட்டாகவே ஆரம்பத்தில் இருந்ததில்லை. இதே ஒடுக்கத்தை என் மகளும் சந்தித்திருக்கிறாள். ஒருத்தி அப்பாவைப் போல. மற்றொருத்தி என்னைப் போல. இப்போ கொஞ்சம் மாற்றம். "உங்க அக்காவா? பார்த்தா தெரியவே இல்ல" ஆனா எங்க அப்பா என்னை ஒரு ஆண் பிள்ளையைப் போல வளர்த்தார். வங்கி, தபால் நிலையம், ரயில் நிலையம் ஒவ்வொரு இடத்துக்கு அவர் போகும் போதும் என்னை அழைத்துச் செல்வார். பெண் பிள்ளைகள் எங்க பகுதியில் சைக்குள் ஓட்டாத போது என் 12 வயதில் Francis என்ற ஒரு அண்ணனை வைத்து எனக்கு சைக்கிள் ஓட்டச் சொல்லித் தந்தார். நல்லா ஓட்டப் பழகியவுடன் தாமு என்ற பக்கத்து வீட்டுப் பையனோட போட்டி போட்டு ஓட்டி பால் கொண்டு வந்த ஒரு சிறுமி மீது மோதி வீட்டுக்குப் புகார் வந்த போது சமாதானம் செய்து பணம் கொடுத்து அனுப்பினார். என்னை முதுகில் தட்டி கவனமா ஓட்டணும் என்றார். இப்படி பதினைந்து வயது வரை அவர் போட்ட அடித்தளம் தான் இன்று வரை கட்டடத்தை உறுதியாக நிற்க வைத்திருக்கிறது. அதனால் அன்று முதல் இன்று வரை என் பலங்களை மட்டும் நினைத்திருக்கிறேன். பலவீனங்களை பலப்படுத்த மட்டுமே கவனத்தில் கொண்டிருக்கிறேன். என் தன்னம்பிக்கையே என்னை மேலும் மேலும் அழகாக்கியது. இப்போ அடுத்த பக்கத்துக்கு வருவோம். சமுதாயம் சொல்லும் பல பலங்கள் இருந்தும் அடுத்தவரோடு பொருத்திப் பார்த்து தன்னை தாழ்வாக நினைத்துக் கொள்வார்கள் ஒரு சிலர். அதுவே எந்த ஒரு காரியத்திலும் இறங்கும் துணிச்சலைத் தராது. போதாததற்கு துணிந்து இறங்குபவர்களை இளக்காரமாகப் பேச வைக்கும். இது தான் நம் பெர்சனாலிட்டியை எவ்வளவு அழகானவராக இருந்தாலும் அசிங்கமாகக் காட்டும். நம் பிள்ளைகளோ பேரப் பிள்ளைகளோ வளரும் போதே அவர்களுக்குள் தாழ்வு மனப்பான்மை வந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதிகம் வீட்டில் நடக்கும் Body shaming, அறிவை ஒப்பிட்டுப் பேசுதல் போன்றவற்றால் தான் மன ஒடுக்கமே உண்டாகும். அதைத் தவிர்க்க வேண்டும். மற்ற திறமைகள் தானாக வளர்ந்து விடும். நான் மிகவும் அஞ்சுவது மன ஒடுக்கம் உடையோருடனான நட்பு, உறவு.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!