Bio Data !!

27 October, 2025

#உப்பேய்!! உப்பேய்

உப்பு விற்கப் போனா மழை வந்தது. மாவு விற்கப் போனா காற்றடித்தது என்று சொல்வதைக் கேட்டு இருக்கிறோம். அப்படி ஒரு மழை நாளில் மழை நின்ற பொழுதில் "உப்பேய்!" "உப்பேய்!" னு ஒரு குரல். சைக்கிளில் ஒரு சாக்கு மூட்டையை வைத்துக் கொண்டு ஒருவர் கல் உப்பு விற்றுக் கொண்டு வந்தார். இந்த உப்பை விற்று ஒரு மனுஷன் வாழ்க்கையை எப்படி நடத்த முடியும். அதை அவரிடமே கேட்போம் என வெளியே போனேன். "ஐயா ! உப்பு ஒரு படி எவ்வளவு?" "ஐம்பது ரூபா" ஒரு படி கொடுங்கன்னு வாங்கினதும் " ஐயா!எப்படி உப்பு வித்து பொழைக்க முடியுதா? என்ன லாபம் கிடைச்சிடப் போகுது?" என்று கேட்டேன். எனக்கு வேற வேல தெரியாதேம்மா. ஒரு சாக்கு உப்பு வித்தா நானூறு ரூபா கிடைக்கும். மூணு நாளா அலையறேன். வித்து முடிக்க முடியல" என்றார். மூணு நாளுக்கு நானூறு ரூபாய்னா ஒரு நாளுக்கு நூத்தைம்பது ரூபா கூட வரலையே. இதை வைத்து என்ன சமாளிக்க முடியும். கடையிலேயே கல் உப்பும் கிடைக்கிறதால யாரும் எங்க கிட்ட வாங்குறதில்ல. ஆனா நேரா உப்பளத்துல இருந்து வாங்கிட்டு வர்ரோம். இது தான்மா சுத்தம் என்றார். ஒரு படி உப்பு வாங்கினா அடுத்த ஒரு படி எவ்வளவு நாள் கழிச்சு வாங்கப் போறோம். நான் ஓய்வுக்கு பின்னரே சிறு தொழில் செய்பவரைத்தான் ஆதரிக்கிறேன். நீங்களும் ஆதரிக்கணும் எனத் தான் இந்த பதிவு.

25 October, 2025

#முறையிட ஒரு கடவுள்

#முறையிட ஒரு கடவுள் ஆசிரியர் : சர்வோத்தமன் சடகோபன் மணல் வீடு பதிப்பகம். விலை : ரூ 150/- முதல் பதிப்பு : டிசம்பர் 2020 ***** இது ஆசிரியரின் முதல் சிறு கதைத் தொகுப்பு. 14 சிறுகதைகளை தொகுத்திருக்கிறார். முதல் கதை தஸ்தாயெவ்ஸிகியின் புத்தக சாலை. இதில் நான் ரசித்த வரி ஒன்று உண்டு. "பார்வதி பேரழகி என்று சொல்ல முடியாது. கண்டிப்பாக அழகி. சிரிப்பதை ஙிட சிரிக்க முற்படும் தருணங்கள் அற்புதமானவை" கட்டுப்படுத்தி வரும் ஒரு கள்ளச் சிரிப்பு என் கண் முன் வந்தது. 2) ஷெனாய் கசிந்து கொண்டிருந்தது அடுத்த கதை. நன்கு படித்து நல்ல வேலையில் அமர்ந்து நன்கு சம்பாதித்துக் கொண்டிருந்தவர் ஸ்ரீநிவாச ராவ். அதை விட்டு தன் ஊருக்கே வந்து விவசாயம் பார்க்கிறார்.தன் வீட்டிற்கு வரும் ராஜன் என்பவரை யார் என்ன காரியமாக வந்தார் என்பதைக் கேட்காமலே ஏற்றுக் கொள்கிறார். விஞ்ஞானத்தால் எதுவும் செய்ய முடியாது என்ற தன் தந்தையின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் வீட்டை விட்டு வெளியே வந்தவர் ராஜன். ஸ்ரீநி தன் மகன் உயிரைக் காக்காத நவீன மருத்துவத்தின் மேல் கொண்ட வெறுப்பால் உத்தியோகம் துறந்து கிராமம் வந்தவர். ராஜனின் தந்தையும் இறந்து போனார். ஸ்ரீநியின் மனைவி தன் மகன் இறந்த துக்கத்தில் தன் உயிரை மாய்த்துக் கொண்டவள். "பெண்களுக்கு குழந்தைகள் பிறந்த பின் கணவன் ஒரு பொருட்டே இல்லை" என்கிறார். ஓரளவு உண்மையாகக் கூட இருக்கலாம். இல்லையென்றால் தன் கணவனின் துயரம் பற்றி சிந்திக்காமல் தற்கொலை செய்வாளா? விவசாயம் பற்றி அதிகம் தெரியாது. ஆனாலும் என்ன நம் முன்னோர்கள் செய்த தொழில் தானே என்கிறார். என் தோழி விவசாய விருது பெற்றது மனதில் எழுகிறது. எனக்கு ரொம்ப பிடித்த கதை இது. எது சரி எது தவறு என்று குழம்பும் இன்றைய மன நிலை. 3) பூதக் கண்ணாடி. கதவை அவ்வளவு சிலாகித்து எழுதுகிறார். கதவு வழியே மட்டுமே நம்மால் உள்ளே போகவும் முடியும். வெளியே வரவும் முடியும். சுவரில் இது சாத்தியமில்லை என்கிறார். எனக்கு சுவர் போல ஒருவரையும் பக்கம் வர விடாத , இறுதி வரை தனக்கைன யாருமே இல்லாத மனிதர்களை நினைக்கத் தோன்றியது. 4) நீலம் என்ற கதை கொஞ்சம் தெளிவில்லாமல் இருந்தது. வெங்கடனை மீரா விரும்புவது போல் தான் வருகிறது. மீரா என்பது இந்துப் பெயர் தான். பின் யாருக்காக இஸ்லாத்துக்கு மாறுகிறான். ரஹ்மத்துல்லாஹ் என்று பெயர் மாற்றம் செய்கிறான்.அதை விசாரித்த போது மீராள், மீரான் என்று பெயர் முஸ்லிம்கள் வைப்பார்கள் என்றும் மீரா என்று அழைப்பார்கள் என்றும் சொன்னார்கள். 11) மனப் பிறழ்வு பற்றிய கதை "பிளவு" மன அழுத்த துயரத்தை கடந்து வந்தவர்களால் இதை நன்கு உணர முடியும். 12) " உலவ ஒரு வெளி" இதைக் கதை என்பதை விட கட்டுரை எனலாம். இது எண்கள் சூழ் உலகு என்கிறார். உண்மை. தன் ஊரில் தான் இங்கே செல்லக் கூடாது அங்கே செல்லக் கூடாது என்ற கட்டுப்பாடு என்றால் விடுதியிலும் அதையே சந்திக்கும் போது எனக்கு உலவ ஒரு வெளி கொடுங்கள. என்று கேட்கிறார். 14) தனிப் பெருங் கருணை: ஒரு பொறுப்பற்ற பையனாக ராமனைக் காட்டிக் கொண்டே வருகிறார்கள் ஆனால் ஒரு சண்டையில் அவன் நேர்த்தியைப் பார்த்து துருகன சொன்ன பிறகு தன்னைப் பற்றி சிந்துத்து பொறுப்புள்ளவனாக மாறுவதாக வருகிறது. எங்கும் திறமைகள் யாரோ ஒருவரால் தான் கண்டு பிடிக்கப்பட்டு மெருகேறுகிறது. நேற்று (25.10.2025) இல் பிச்சிவனத் தெரு, பாளையங்கோட்டையில் இந்த புத்தகம் பற்றி பேசினோம். விவசாயத்தையோ வேற எந்த தொழிலையோ புனிதப்படுத்திப் பேசுதல் அவசியமில்லை என்று ஒருவர் சொன்னார். விவசாயத்தில் வெற்றி பெற்றவர் கணக்கு இருக்கிறது தோற்றுப் போய் பழைய வேலைக்கே திரும்பிப் போனவர் கணக்கு இல்லை என்றார். சரியென்றே தோன்றியது.

24 October, 2025

#பைசன் காளமாடன். இயக்குநர் : மாரி செல்வராஜ். இசை : திவாஸ் கே பிரசன்னா முக்கிய நடிகர்கள் : துருவ் விக்ரம், பசுபதி, அனுபமா பரமேஸ்வரன், ரஷிஜா, அமீர், லால் ஒளிப்பதிவு: எழில் அரசு கே. ஏற்கனவே இரண்டு படங்களில் நடித்து அதிகம் பேசப்படாமல் இருந்த துருவ் இதில் பாய்ச்சல் காட்டி இருக்கிறார். கபடி விளையாட்டில் இவர் உடல் மொழி காளை மாட்டினை மனதில் வைத்துக் கொண்டு செயல்பட்டது போலவே தோன்றியது. இரண்டு கால்களையும் மாற்றி மாற்றி அடவு கட்டுவது போல் வைத்து பாய்வது, தலையாலேயே முட்டித் தள்ளி ஒருவன் முதுகு வழியாக குதித்து வந்து கோட்டைத் தொடுவது போன்ற செயல்கள் அந்த கபடி வீரனைத் தனித்துக் காட்டியது. ஒரு கபடி வீரனுக்கே உரிய கட்டு மஸ்தான உடம்பு. மனதில் இடறிய ஒரே விஷயம். கபடிக்கே உரித்தான சிறப்பு கபடி, கபடி, கபடி, கபடி என மூச்சு விடாமல் ஏதாவது ஒரு பாடலுடன் சொல்லியபடியே ஓடி எதிர் தரப்பினரைப் பிடிப்பது தான். இடையில் மூச்சு வாங்கி விட்டாலும் தோற்றதாக அர்த்தம். கபடியின் அழகே அது தான். அது மிஸ்ஸிங். மாரி செல்வராஜின் பதிவிலேயே இந்த கேள்வியை எழுப்பி உள்ளேன். பதில் சொன்னால் காரணத்தை புரிந்து கொள்ளலாம். இந்தக் கதையில் காதலைச் சொல்லாமலும் இருக்கலாம். ஆனால் எல்லா மனிதனின் வாழ்விலும் ஏதோ ஒரு காதல் கண்டிப்பாக இருக்கும். ஒன்றுமே இல்லாத இடத்தில் கூட ஒரு தலைக்காதல் இருக்கும். கதை நாயகனை விட ஒரு சில வயது கூடிய , தன் இனத்தையே சேர்ந்த பெண் மேல் உள்ள மெல்லிய காதல் மிக அழகாக சொல்லப் பட்டு இருக்கிறது. அந்தப் பெண்ணின் அண்ணன் ரொம்ப இயல்பாக நடித்திருக்கிறார். இரண்டு மலையாள நடிகைகள் ஒருவர் கிருட்டினா ( துருவ்) வின் காதலியாகவும், மற்றொருவர் அக்காவாகவும் நடித்திருக்கிறார்கள். ஏன் மலையாள நடிகைகள் எனச் சிலர் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். ஏன் கூடாது? தமிழ் மைந்தர்கள் அந்நிய மாநிலப் பெண்களைக் கொண்டாடி உயர் அந்தஸ்து கொடுத்தவர்கள் தானே. உதாரணம் குஷ்பூ, நயன்தாரா, நஸரீன், சிம்ரன், ஜோதிகா என இந்த வரிசை நீளுமே. மிகச் சிறப்பாக நடித்தும் ஓரளவே ஜொலிக்க முடிந்த ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற தமிழ் நடிகைகளும் இருக்கிறார்களே. நாம் ஏன் இந்த கேள்வியை எழுப்ப வேண்டும். இதற்கான பதிலை படத்திலேயே சொல்லி விட்டார். எதிர்க்கத் தான் செய்வார்கள். அத்தனை எதிர்ப்பையும் மீறித் தான் நீ ஜெயித்து வர வேண்டும் என. தன் நாயகனை சொல்ல வைத்த மாரி தனக்கும் இதையே தான் சொல்லிக் கொள்வார் என நினைக்கிறேன். வன்முறை மிக அதிகம். ஒழிந்து போன ஜாதிப் பாகுபாடை ஏன் கிளறுகிறார் என மனம் கூசாமல் கேட்கிறார்கள். பொட்டு வெடி வெடிப்பது போல் சுட்டுத் தள்ளுவதும் மனித சடலங்கள் சரமாரியாய் சரிந்து விழுவதையும் ரசித்துப் பார்ப்பவர்கள் இந்தக் கேள்வியை எழுப்புவது தான் ஆச்சர்யம். அமீர் , லால் இருவரும் முக்கியமான கதாபாத்திரங்களை எடுத்து வாழ்ந்திருக்கிறார்கள். இவர்களின் பேச்சு, உடல்மொழி, தோற்றம் போன்றவற்றில் அதிக அக்கரை தெரிகிறது. இயக்குநர் சிகரத்தின் படங்களில் வரும் சின்ன சின்ன பாத்திரங்கள் கூட மனதில் நிலைத்து நிற்கும். மாரி செல்வராஜின் படங்களிலும் அது போலவே. இயக்குவதில் அபாரத் திறமை பளீரிடுகிறது. இரத்தம் அதிகமாகக் காட்டப்படுவது போல் தோன்றினாலும் மனதில் பதிய வைக்க கலையில் கொஞ்சம் அதிகப்படி அனுமதிக்கப் பட்டது தானே. எனக்குப் பிடித்த இன்னொரு உத்தி. பைஸன் விளையாட ஜப்பானுக்குச் சென்றதை முதலில் காட்டி விட்டு அதன் பின் அதற்கான வழியில் பட்ட சிரமங்களைச் சொல்லும் போது எப்படியும் மீண்டு விடுவான் என்பது தெரிந்து விடுவதால் ஆசுவாசமாக பார்க்க முடிகிறது. இது தான் என் தேர்வும். கதையின் முடிவு தெரிந்து விடுவது என் ரசிப்பைப் பாதிக்காது. ஓ! இதற்காகத் தான் இதைச் சொல்லி இருக்கிறாரா என்று எழுத்தின் அழகை ரசிக்கக் கூட முடியும் என்னால். பதிவு நீள்கிறது. ஆனாலும் ரசித்த விஷயத்தை சொல்லாமல் விட முடியாது. பசுபதி துருவ்வின் அப்பாவாக ஒரு கனத்த பாத்திரத்தை எடுத்து நடித்திருக்கிறார். மிகச் சரியான தேர்வு. கடைசி கடைசியாக காவலர்களின் காலில் விழுந்து கெஞ்சும் போது கண் கலங்கி விடுகிறது நமக்கு. இசை படத்தின் உணர்வை கொஞ்சமும் பாதித்து விடாமல் பயணித்திருக்கிறது. "சாமக் கொடை தொடங்கிடுச்சு ராசா( பாடியவர் வி.எம் மகாலிங்கம்) "தென்னாட்டு தேசத்தில் வாழும் கூட்டம் ( பாடியவர் சத்யன்)" "ராசாத்தி ஒன் நினைப்பு கருவக் காட்டு முள்ளாச்சுடி(பாடியவர் நிவாஸ் கே பிரசன்னா) " "அத்தி வானக் காட்டுக்குள்ளே ( பாடியவர் அறிவு & வேடன்) ": " சின்ன சின்ன சீனிக்கல்லு ( பாடியவர் சின்மயீ)" பாடல்கள் என்னை மிகவும் ஈர்த்தன. இசையும் படமாக்கப்பட்ட விதமும் அவ்வளவு அழகு. ஒளிப்பதிவும் மிகச் சிறப்பு. அர்ச்சுனா விருது பெற்ற மனத்தி கணேசன் வழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட கதை. ஒரு வீரன் உருவாவது என்பது சாதாரண காரியமல்ல. அவன் தேர்வில் அரசியல் விளையாடி விடக் கூடாது. இது அன்றும் இன்றும் என்றும் ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மை தானே. படம் முடிந்து மிகவும் கனத்த மனதோடு தான் வெளியே வந்தேன். மதிப்பெண் : 4.5/5

22 October, 2025

அமேசான் ப்ரைம் ",தணல்' தமிழ்ப்படம் இயக்குநர் : ரவீந்திர மாதவா முக்கிய கதாபாத்திரங்கள் : அதர்வா, அஸ்வின், லாவண்யா திரிபாதி ஒரு சில யூட்யூபர்களுக்கு சின்ன சின்ன பாத்திரங்கள் கொடுத்திருக்காங்க. அதற்கு பாராட்டுகள். முக்கியமாக ஒரு பாட்டியும் பேரனும். பாட்டி இந்த வயதுக்கு ரொம்ப எனர்ஜி. ஆனால் ரொம்பவே சின்ன ரோல். பேரன் அதர்வா கூட கான்ஸ்டபிளாக நெடு நேரம் வருகிறார். நல்லா படம் எடுத்தாலும் ஒரு சிலரை திருப்திப் படுத்துவதற்காக சண்டை, கவர்ச்சி நடனம் என இடையில் வைப்பார்கள் ஒரு காலத்தில். இப்போ படம் தொடங்கினதும் ஒரு பெரிய சண்டைக் காட்சியை வைத்து அதன் பின் அருமையான காதல் காட்சிகளை சேர்க்கிறார்கள். கசப்புக்குள்ளே இனிப்பைப் புகுத்தும் முறை. +2 தேர்வாக முடியாமல் படித்துக் கொண்டே இருக்கும் ஹீரோ. குரூப் 1 இல் தேர்வாகும் ஹீரோயின். இவர்களுக்கிடையேயான காதலே என்னைப் பொருத்த வரை ஆதரிக்கக் கூடாத ஒன்று. நீ தான் என்னை நல்லா பார்த்துப்ப வா நாம போய் திருமணம் செய்துக்கலாம் என்று ஒரு படித்த பெண் தன் அளவுக்கு படிப்பு இல்லாத ஒருவரிடம் சொல்வது ரொம்ப மோசமான ஒரு உதாரணம். அபூர்வமாக ஒன்றிரண்டு பேர் வாழ்க்கையில் சோபிக்கலாம். அதற்கு ஆணுக்கு ஒரு தெய்வீக மனம் வேண்டும். தன்னை விட எல்லா விதங்களிலும் உயர்ந்த பெண்ணை காம்ப்ளக்ஸ் இல்லாமல் ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை இன்று வெகு சிலருக்கே இருக்கிறது. அதர்வாவுக்கும் லாவண்யாவுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி ரொம்ப நல்லா இருக்குது. அந்தப் பொண்ணு நடிகை ரத்தி அக்னிஹோத்ரியின் சாயலில் இருக்குது. வில்லன் குழு நிறைய வங்கிகளை ஒரே நேரத்தில் கொள்ளையிட துணிகிறார்கள். தற்செயலாக ரவுண்ட்ஸ் செல்லும் அதர்வா குழுவினர் தெரிந்து கொள்கிறார்கள். இருட்டுப் பின்னணியில் ஒரு சில நிமிடங்கள் காட்சிப்படுத்துவது வேண்டுமானால் இயல்பாய் இருக்கும். இவ்வளவு அதிக நேரம் போவது கண்ணுக்கு எரிச்சலாய் இருக்கிறது. படம் ஆரம்பிக்கும் போது ஒரு சண்டை வந்ததே அதற்குத் தொடர்பான அஸ்வினின் ப்ளாஸ்பேக் கதை ஒரு கார்ட்டூன் படம் போலப் போடப்பட்டு சொல்லப்படுகிறது. இதுவும் இப்போது அடிக்கடி காணப்படும் ரசிக்க முடியாத ஒரு செயல் முறை. நாம என்ன சின்ன பிள்ளைகளா கார்ட்டூனில் கதை சொல்ல. நாம் வில்லன் என நினைப்பவர் உண்மையில் வில்லன் இல்லை. கண்களை நனைக்கும் படத்தின் இரண்டாவது பகுதியை உங்களுக்குச் சொல்லாமலே விட்டு விடுகிறேன். படம் பார்க்கலாம். (3.5/5)

17 October, 2025

நாவல் : மானசரோவர். ஆசிரியர் : அசோகமித்திரன். காலச்சுவடு பதிப்பகம். விலை ரூபாய் 275/- பக்கங்கள் : 215 முதல் பதிப்பு : டிசம்பர் 1989 கதை நிகழ்ந்த கால கட்டத்தில் பண்டிட்ஜி நேரு இறந்ததாக வருகிறது. அதாவது 1964 இல் நடந்த கதை. ஆனால் இந்த கால கட்டத்துக்கும் பொருந்துவதாகவே வருகிறது. இரு நண்பர்களின் ஆத்மார்த்த நட்பு. அதில் ஒருவர் பிரபல நடிகர் சத்யன். மற்றவர் திரைக்கதை எழுதும் கோபால் . நடிகருக்கு அத்தனை பேரும் உச்ச பட்ச மரியாதை கொடுக்கிறார்கள். ஆனால் அவர் அதிகம் மதிப்பவர் கோபால்ஜி. அதனாலேயே தனக்கு சமமான மரியாதை அவருக்கும் கிடைக்க வேண்டும் என அழுத்தம் கொடுப்பவர் சத்யன். கதையை பகுதி பகுதியாக பிரித்து எழுதி இருக்கிறார். ஒரு பகுதியில் சத்யன் சொல்வது போல் வரும். அடுத்த பகுதியில் கோபால் தன்னிலையில் சொல்வது போல் வரும். இரண்டும் மாறி மாறி வரும். அது வாசிப்பதற்கு புதுமையாய் இருந்தது. ஒரு சில பகுதிகள் நெஞ்சின் மறவா பகுதியில் உறைந்து விட்டன. கோபால் சினிமாத் துறையில் இருப்பதால் அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருக்கலாம் என மனைவிக்கு சந்தேகம். அந்த சந்தேகம் ஒரு நாள் வெடித்து மன நிலை பிறழ்ந்த நிலைக்கு போய் விடுவார்கள். அந்த சமயம் அவர் மகனுக்கு சரியான காய்ச்சல். வீட்டைப் பூட்டி அவர் மருத்தவரை அழைக்கச் சென்று திரும்பி வரும் போது மகன் இறந்திருப்பான். முகப் பகுதியில் தலையணை இருக்கும். மூச்சுத் திணறி இறந்திருப்பான். மற்றவர்களிடம் அதை மறைத்த கோபால்ஜி தயங்கித் தயங்கி தனிமையில் தன் நண்பன் சத்யனிடம் சொல்லுமிடம். சியாமளா சினிமாவில் உப நடிகை. தன் கணவன் செய்த கொடுமையின் காரணமாக அவனை விட்டுப் பிரிந்து ராமநாதனுடன் வாழ்ந்து வருவாள். சத்யன் அவளை முதன் முதல் பார்த்தது கோபால்ஜியின் மகன் இறந்த வீட்டில். அசந்தர்ப்ப வசமாக அந்த நேரத்தில் அவள் மேல் அதிக ஈர்ப்பு வரும். அதன் பின் பார்க்கும் சந்தர்ப்பங்களில் ஈர்ப்பு கூடுமே ஒழிய குறையாது. சத்யன் பம்பாய்க்கு திரும்ப வேண்டிய நேரத்தில் அவளிடம் சொல்வார்.்" நீங்கள் உங்கள் குழந்தையுடன் கண்டிப்பாக பம்பாய்க்கு வர வேண்டும். வந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன்" அவள்: நான் ஏன் பம்பாய் வர வேண்டும் என அதற்கு சத்யனின் பதில் " வீட்டுக்காரி ஆவதற்கு" எவ்வளவு சுருக்கமாக அவள் மேல் தனக்கு இருக்கும் ஈடுபாட்டை சொல்லி முடிக்கிறார். நிறைய பேர் வாசித்திருக்கலாம். வாசித்தவர்கள் தங்கள் கருத்தைப் பகிருங்கள். தேடி வாசிக்க வேண்டிய புத்தகம்.

15 October, 2025

#மகள் மகள்கள் என் தேவதைகள் எனக்கு ரெண்டு பெண் குழந்தைகள். எனக்கு ரொம்ப குற்ற உணர்ச்சி உண்டு. [ ] காதல் திருமணம் செய்ததால் அந்த பெண் குழந்தைகளை வயிற்றில் சுமந்த போது சரியான போஷாக்கோ கவனிப்போ கொடுக்கவில்லை என்று. [ ] பெரிய மகள் இன்று ஏதாவது உடல் பிரச்னை சொன்னால் எனக்கு கவலைப் புழு போல் குடைகிறது. அந்தத் தவறை செய்திருக்கக் கூடாதோ. இன்னும் கொஞ்ச காலம் காத்திருந்து வயிற்றில் பிள்ளையைத் தாங்கி இருக்கணுமோ. சரி செய்ய முடியாத தவறைச் செய்து விட்டேனே. அந்த மகள் வயிற்றில் இருக்கும் போதே , நான் கவலைப்படும் போது முட்டி முட்டி ஆறுதல் சொன்னவள். இன்றும் எங்களுக்கு ஒன்று என்றால் ஆண் பிள்ளை போல் எங்களைப் பற்றி சிந்திப்பவள். இவள் தேவதை அல்லாமல் வேறென்ன. [ ] இரண்டாவது மகள் நான்கு வருடம் கழித்து நாங்க கொஞ்சம் ஸ்டெடி ஆகிக்கிட்ட பின்னால தான் உண்டானாள். ஆனாலும் நெல்லையில் இருந்து நாகர்கோயிலுக்கு தினம் ரயில் பயணம். நிலையத்திலிருந்து அலுவலகத்துக்கு அரை மணி நேரம் நடைப் பயணம். குழந்தை ஆரோக்கியமாக பிறந்தது என்றாலும் அலைக்கழிப்பு. ஒரு நாள் டிரெயின் புறப்பட்டு விடுமோ என்ற பதற் றத்தில் நிலையத்தில் கவுத்துப் போட்ட "ப" போல் கிடக்குமே சரளைக்கற்கள் அதன் மேல் வயிற்றுப் பிள்ளையோடு ஏறி , இறங்கி போன அனுபவம் இன்றும் நினைத்தால் அடி வயிறு கலங்கும். அதற்கு ஈடு செய்யும் விதமாய் என் மகள்கள் பிள்ளை உண்டான போது ஆகச் சிறந்த கவனிப்பு செய்து என் குற்ற உணர்ச்சியைக் கொஞ்சம் தணித்துக் கொண்டேன். பாசமும் பரிவும் என் பிள்ளைகள் எனக்கு வாரி வழங்குகிறார்கள். அதுவும் நான் பலவீனப்படும் நேரத்தில் பக்க பலமாய் நிற்கிறார்கள். அது தான் இன்னும் கொஞ்ச காலம் கூடுதலாய் வாழ்ந்து என் கடனைக் கழிக்க வேண்டும் என்ற உந்துதலைத் தருகிறது.

11 October, 2025

படம் பெயர் : Hrithayapoorvam OTT : Hotstar. இயக்குநர் : சத்யன் அந்திகாடு. முக்கிய கதாபாத்திரங்கள் : மோகன் லால், சங்கீதா, மாளவிகா மோஹனன், சித்திக் , லாலு அலெக்ஸ், சங்கீத் ப்ரதாப். மோகன்லால் பெயர் சந்தீப் பாலகிருஷ்ணன். அவருடைய இதயம் பழுதடைந்ததால் , இறந்த ஒருவருடைய இதயம் சந்தீப்புக்கு பொருத்தப்படுகிறது. "சென்னையில் ஒரு நாள்" படத்தில் அந்த இதயம் குறைந்த நேரத்துக்குள் எப்படி அடுத்தவருக்கு வைக்கப் பட்டது என்பதை தமிழில் படமாக்கி இருந்ததைப் பார்த்திருக்கிறோம். தன் தந்தையை அன்பு செய்யும் மகள் அந்த இதயத்தை மாற்று அறுவை சிகிச்சை செய்ததால் தன் தந்தையை சந்தீப்பிடம் கண்டால் என்ன நடக்கும் என்பதை மலையாளத்தில் படமாக்கி இருக்கிறார்கள். மனித மனத்தின் மெல்லிய உணர்வுகள் , தான் அன்பு செய்த ஒருவரின் இதயத்தை சுமந்து இருப்பதே அடுத்தவரையும் அன்பு செய்ய போதுமானது என்பதைக் காட்டும் காட்சிகள் படத்துக்கு இனிமை சேர்க்கின்றன. இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த ஒருவர் படத்தின் ஹீரோவாக இருக்கிற காரணத்தாலேயே எல்லோரையும் அடித்து துவம்சம் செய்வது, ரொம்ப இயல்பாக எடுக்கப்படும் மலையாளப் படங்களுக்கு முரணாகத் தெரிகிறது. இறந்தவரின் மனைவியாக சங்கீதா நடித்திருக்கிறார். அட! நம்ம சங்கீதாங்க. நடிகர் விஜய்யின் ஆரம்ப காலப் படங்களில் ஜோடியாக நடித்தாரே அவரே தான். சந்தீப் ஒரு cloud kitchen நடத்துகிறார். Cloud kitchen என்னும் கான்செப்ட் நமக்கு அறிமுகப்படுத்தப் படுகிறது. தான் மிகவும் நேசித்த தந்தையின் இதயத்தை தாங்கி நிற்கும் சந்தீப் தன் நிச்சயதார்த்த நிகழ்வில் பங்கு கொள்ள வேண்டும் என விரும்புகிறாள் மகள். அவளின் வற்புறுத்தலால் செல்லும் இடத்தில் அடிபட்டு அங்கே அதிக நாள் இருக்க நேர்கிறது. சந்தீப்பை முழு நேரமும் கவனித்துக் கொள்ள ஒரு ஆண் அட்டன்டட்டும் கூடவே இருக்கிறார். அவர் கட்டுப்படுத்துவது ஆரம்பத்தில் சந்தீப்புக்கு கோபத்தை வரவழைத்தாலும் போகப் போக நண்பர்களாகிறார்கள். மெல்லிய நகைச்சுவை படம் முழுவதும் அலையாடுவது. நிச்சயதார்த்த நிகழ்வு கோலாகலமான ஆட்டம் பாட்டம்களுக்கு இடம் கொடுப்பது. எல்லாம் சேர்ந்து கதையின் கனத்தைக் கொஞ்சம் நிரவி இடுகிறது. சுயநலம் நிறைந்த மனிதர்களுக்கு நடுவே , இரத்த தானம், உடல் தானம், உடல் உறுப்புகள் தானம் கொடுக்கும் உயர்ந்த உள்ளங்களும் இருக்கத் தான் செய்கின்றன. இறந்தவர்களை எரித்து , ஒரு பிடி சாம்பலாய் கரைத்து விடாமல் தானம் கொடுத்து இன்னொரு உயிரை வாழ வைக்க உதவலாம் என்ற நல்ல எண்ணத்தை விதைத்த வகையில் இந்த படத்துக்கு வாழ்த்துச் சொல்லலாம் பார்ப்பதன் மூலமாக.

10 October, 2025

செல்ஃபி எடுக்கும் தம்பி பெயர் மதார். கவிஞர் மதார். இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு வெளியிட்ட பெருமை எனக்கு உண்டு. அதன் பின் கொஞ்ச காலம் இடைவெளி. இப்போ தொடர்ந்து எழுதுகிறார். "வெயில் பறந்தது" " மாயப் பாறை" என்ற இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார். ஒரு வாட்ஸ் அப் குழு வைத்து மாதம் ஒரு புத்தகத்தைப் பற்றி பேசிகிறார்கள். கடைசி சனிக்கிழமை அன்று இந்த கூட்டம் கூடுகிறது. செப்டம்பர் மாதம் நடக்க வேண்டிய கூட்டம் வசதி இன்மையால் அக்டோபர் முதல் சனியன்று நடந்தது. எனக்கு வாய்ப்பிருந்ததால் கலந்து கொண்டேன். சிறிய குழு தான். 100 சதம் வாசிப்பில் ஆர்வமுள்ளவர்கள். இவர்களின் ஆழமான வாசிப்பு ஆச்சர்யத்துக்குள்ளாக்கியது. தாம் சொல்வதற்கு தொடர்புடையவற்றை வேற நாவலில் இருந்து வரிகளைச் சொல்லி என்னை வியக்க வைத்தார்கள். அன்று வந்திருந்தவர்கள். சாமுவேல் - ரயில்வே பணி தீவிர வாசிப்பாளர் சுடலைமுத்து - வாசிப்பில் தீவிரமானவர். தமிழ் அயல் இலக்கியங்களைக் கரைத்துக் குடித்தவர். இவரது ஞாபக சக்தி பார்த்து ஆச்சர்யப்பட்டுப் போனேன். பேசத் தான் தயக்கமாக உள்ளது என்றார். இந்த சிறிய குழுவில் பேசி பழகிக் கொள்ளுங்கள் என்று சொல்லி வந்தேன். இளங்காமணி - பேராசிரியர், ஆய்வில் ஈடுபாடுள்ளவர். மூன்று ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். மதார் - கவிஞர், 2 கவிதைத் தொகுப்புகள் எழுதியுள்ளார். பேசப்பட்ட புத்தகம் அசோகமித்திரன் எழுதிய " மானசரோவர்" அங்கேயே நண்பர் சாமுவேல் அந்தப் புத்தகம் இரவல் தர நான் வீட்டுக்கு வந்து வாசிக்கத் தொடங்கி விட்டேன். நன்றி சாமுவேல். இந்த மாதத்தில் வாசிக்க வேண்டிய புத்தகத்தை வாங்கிக் கொள்ளலாம். அங்கங்கே சிறியதும் பெரியதுமாய் தாமரைப் பூக்கள் மலர்ந்து கொண்டு தான் இருக்கின்றன நெல்லை என்னும் பெருங்குளத்தில்.

08 October, 2025

#விழித்தெழு இளைஞனே!!

இளைஞனே!! விழித்தெழு!! உன் வயதில் விவேகானந்தர் என்னவெல்லாம் செய்திருந்தார் எண்ணிப் பார். கண் சிமிட்டும் விளக்கின் ஒளியில் நீ ரசிக்கும் முகம் நாயகனாக இருக்கும் வரை சரி. தலைவனாக இருக்கும் போதுமா? ஆணானாலும் பெண்ணானாலும் அழகுக்கு ஏன் இப்படி அடிமைப் பட்டு கிடக்கிறாய். உன் குருதியில் உருப்பெற்று கண்கள் ஒளிர சிரிக்கும் உன் மழலைகளை விட அழகு உலகில் எவருக்குண்டு. கண்ணுக்குத் தொலைவிலிருக்கும் அழகில் மயங்காதே!! அருகில் போனால் தான் அந்த நிலவின் மேடு பள்ளங்கள் புலப்படும். அறிவை மயக்கும் காந்தத்திலிருந்து எட்டியே நில். புத்தியோடு பிழைத்துக் கொள்.

01 October, 2025

#நேரம் தவறாமை

# நேரம் தவறாமை ஒருவரிடமிருந்து பணத்தைக் கொள்ளை அடித்தால் எவ்வளவு பெரிய தவறோ அதை விடப் பெரிய தவறு பிறருடைய நேரத்தைக் கொள்ளை அடித்தல். ஆனால் முன்னதற்கு தண்டனை உண்டு. பின்னதற்கு இல்லை. நாம் சாதாரணமாகவே பார்க்கிறோம். எந்த ஒரு கூட்டமும் சொன்ன நேரத்துக்கு தொடங்குவதில்லை. இன்னும் கொஞ்சம் ஆட்கள் வரட்டும்னு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கடந்து கூட தொடங்குவதுண்டு. நான் சொன்னது சாதாரணக் கூட்டங்கள். சிறப்புக் கூட்டங்கள் இன்னும் கூட நேரமாகலாம். அதிலும் சிறப்புப் பேச்சாளரை கடைசியாகத் தான் பேசச் சொல்வார்கள். அவர்களுக்காகத் தான் மக்கள் இருப்பார்களாம். புத்தக கண்காட்சிகளிலும் சில புத்தக வெளியீடுகளிலும் இதனாலேயே எனக்கு நல்ல பேச்சாளர்களின் பேச்சைக் கேட்க முடியாமல் போனதுண்டு. நான் நிகழ்ச்சி தொடங்குவதாகச் சொன்ன நேரத்துக்கு போயிருப்பேன். எனக்கு attoted time ஆன இரண்டு மணி நேரம் முடிந்திருக்கும். கிளம்பி விடுவேன். இதனால் உனக்குத் தானே பாதிப்பு என்றால் பரவாயில்லை அந்த பேச்சைக் கேட்க யூட்யூப் போல இப்போ எத்தனையோ வழிகள் இருக்கின்றன. என்னிடம் ஒரு சிலர் கேட்பதுண்டு. உங்களால் எப்படி இவ்வளவு விஷயங்களில் செயல்பட முடிகிறது என. அதற்கு முக்கிய காரணம் நேரப் பங்கீடு தான். இதற்கு பழகி விட்டால் நம் உடலே ஒரு கடிகாரமாகி இந்த காரியத்துக்கான நேரம் முடிந்து விட்டது என சொல்லி விடும். நான் ஒரு புத்தகம் அரை மணி நேரம் படிக்க வேண்டும் என்றோ, ஒரு திரைப்படம் OTT இல் அரை மணி நேரம் பார்க்க வேண்டும் என்றோ நினைத்திருப்பேன். போதுமே முடிச்சிடுவோமான்னு தோணும் போது கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஆகி இருக்கும். இதற்கு Biological clock என்போம். எனவே இனி ஒரு முடிவெடுப்போம் . எந்த ஒரு நிகழ்வுக்கும் குறித்த நேரத்தில் செல்வோம். அதை விட முக்கியம் நிகழ்வுகளை குறித்த நேரத்தில் தொடங்குவோம். ஒரு முறை ஒரே ஒரு முறை குறித்த நேரத்தில் தொடங்குங்கள் வந்தவர்கள் குறைவாக இருந்தாலும். அடுத்த கூட்டத்துக்கு அத்தனை பேரும் சரியான நேரத்தில் வந்து இருப்பார்கள். சரியான நேரத்தில் தொடங்கவில்லையா பங்கு கொள்ள வந்தவர்கள் கிளம்பி விடுங்கள். கொஞ்சம் வேணுமானால் க்ரேஸ் டைம் கொடுக்கலாம். அடுத்த கூட்டம் சரியான நேரத்தில் நடக்கும். நேரம் தவறாமைக்கு மிகச் சரியான உதாரணம் எங்க ஊரைச் சேர்ந்த "மேலும் " சிவசு ஐயா. இவர் ஓய்வு பெற்ற கல்லூரிப் பேராசிரியர். "மேலும்" என்ற அமைப்பு மூலம் இலக்கியக் கூட்டங்கள் நடத்துகிறார். சரியான நேரத்தில் தொடங்கி விடுவார். எத்தனை பேர் வந்திருக்கிறார்கள் என்பது தொடங்கும் நேரத்தை பாதிப்பதில்லை. இதை அத்தனை பேரும் கடைப்பிடிக்கலாமே. ஒரு காலத்தில் "நேரமே போக மாட்டேங்கிது" ன்னு சொல்லக் கேட்டிருப்போம். இப்போ யாராவது சொல்றாங்களா? அப்போ நேரம் என்பது எவ்வளவு முக்கியமானது் அதை அநாவசியமாக செலவிடலாமா? செலவிட வைக்கலாமா? சிந்திப்போம்.
நம்ம முக நூல்ல அடிக்கடி நண்பர்கள் வரிசையில ( frd list) இருக்கிறாங்க ஆனா லைக்கோ கமென்ட்டோ போடுறதில்லை. அதனால " களை எடுக்கப் போறேன் " னு அடிக்கடி சிலர் எழுதுறதப் பார்த்திருக்கிறேன். இது கூட 4000 நண்பர்கள் சேர்ரது வரை நாம கவலைப்பட வேண்டுவதில்லை. ஏன்னா இன்னும் ஆயிரம் நண்பர்கள் சேர்க்கலாம். அதில் கவனமா வடிகட்டிட்டா போதும். ஆனா நாம் களை எடுக்க வேண்டிய இன்னொரு முக்கியமான இடம் இருக்குது. அது நம்ம மெயில் ஐடி. எனக்கு கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு முன் மெயில் ID ஏற்படுத்தும் போது 15 GB free கொடுத்திருந்தாங்க. அப்போ அது அடேங்கப்பா என்று தோன்றியது. இப்போ அதில் அதிக இடம் நாம் நிரப்பி விட்டோம் , கிட்டத்தட்ட 15 GB முடியப் போகுது என்பதால் கூடுதலா பணம் கட்டி இடம் (space) வாங்கிக்கோங்கன்னு வருது. Drive இல் நாம் சேர்த்திருக்கும் விஷயம், மெயிலில் உள்ளவை எல்லாம் அடங்கும். மெயிலை ஒரு குறிப்பிட்ட காலத்தில் google ஏ டெலிட் செய்யும். இருந்தாலும் அதில் இணைப்புகள் இருந்தால் மெயில் அதிக இடத்தை அடைத்துக் கொள்ளும். உள்ளே போய் பார்த்தா வேண்டாத குப்பை எல்லாம் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கிறது. வேலையில் இருந்தப்போ இடையிடையே மெயில் சுத்தம் செய்யும் பணி செய்வேன். இப்போ பத்து வருஷமா அதைச் செய்யல. நீங்கள் பணம் கட்டி space பெற்றுக் கொள்ளா விட்டால் அந்த மெயில் ஐடி இனி வேலை செய்யாது என்று வந்த உடன் தான் ஆபத்து புரிந்தது. அத்தனை அலுவலகங்களிலும் கொடுத்து வைக்கப்பட்டுள்ள மெயில் ஐடி வேலை செய்யவில்லை என்றால் பேராபத்தாச்சே. உடனே உட்கார்ந்து stock clearance மாதிரி mail clearance வேலை செய்தால் உடனே 3 GB free space கிடைத்து விட்டது. உடனடி ஆபத்து தவிர்க்கப்பட்டது. அதனால் களை எடுக்கும் வேலையை இங்கே தொடங்குங்கள். நமக்கு தேவைப்படாத பல விஷயங்களும் அங்கு இருக்கும். அதை அப்போ அப்போ டெலிட் செய்திடணும். சொல்லணும்னு தோணுச்சு. ஏற்கனவே தெரிஞ்சவங்க வேற பதிவுகளை பார்க்க போயிடலாம். தெரியாதவங்க பயற்படுத்திக் கோங்க. வரட்டா!!!