Bio Data !!

10 October, 2025

செல்ஃபி எடுக்கும் தம்பி பெயர் மதார். கவிஞர் மதார். இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு வெளியிட்ட பெருமை எனக்கு உண்டு. அதன் பின் கொஞ்ச காலம் இடைவெளி. இப்போ தொடர்ந்து எழுதுகிறார். "வெயில் பறந்தது" " மாயப் பாறை" என்ற இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார். ஒரு வாட்ஸ் அப் குழு வைத்து மாதம் ஒரு புத்தகத்தைப் பற்றி பேசிகிறார்கள். கடைசி சனிக்கிழமை அன்று இந்த கூட்டம் கூடுகிறது. செப்டம்பர் மாதம் நடக்க வேண்டிய கூட்டம் வசதி இன்மையால் அக்டோபர் முதல் சனியன்று நடந்தது. எனக்கு வாய்ப்பிருந்ததால் கலந்து கொண்டேன். சிறிய குழு தான். 100 சதம் வாசிப்பில் ஆர்வமுள்ளவர்கள். இவர்களின் ஆழமான வாசிப்பு ஆச்சர்யத்துக்குள்ளாக்கியது. தாம் சொல்வதற்கு தொடர்புடையவற்றை வேற நாவலில் இருந்து வரிகளைச் சொல்லி என்னை வியக்க வைத்தார்கள். அன்று வந்திருந்தவர்கள். சாமுவேல் - ரயில்வே பணி தீவிர வாசிப்பாளர் சுடலைமுத்து - வாசிப்பில் தீவிரமானவர். தமிழ் அயல் இலக்கியங்களைக் கரைத்துக் குடித்தவர். இவரது ஞாபக சக்தி பார்த்து ஆச்சர்யப்பட்டுப் போனேன். பேசத் தான் தயக்கமாக உள்ளது என்றார். இந்த சிறிய குழுவில் பேசி பழகிக் கொள்ளுங்கள் என்று சொல்லி வந்தேன். இளங்காமணி - பேராசிரியர், ஆய்வில் ஈடுபாடுள்ளவர். மூன்று ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். மதார் - கவிஞர், 2 கவிதைத் தொகுப்புகள் எழுதியுள்ளார். பேசப்பட்ட புத்தகம் அசோகமித்திரன் எழுதிய " மானசரோவர்" அங்கேயே நண்பர் சாமுவேல் அந்தப் புத்தகம் இரவல் தர நான் வீட்டுக்கு வந்து வாசிக்கத் தொடங்கி விட்டேன். நன்றி சாமுவேல். இந்த மாதத்தில் வாசிக்க வேண்டிய புத்தகத்தை வாங்கிக் கொள்ளலாம். அங்கங்கே சிறியதும் பெரியதுமாய் தாமரைப் பூக்கள் மலர்ந்து கொண்டு தான் இருக்கின்றன நெல்லை என்னும் பெருங்குளத்தில்.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!