17 October, 2025
நாவல் : மானசரோவர்.
ஆசிரியர் : அசோகமித்திரன்.
காலச்சுவடு பதிப்பகம்.
விலை ரூபாய் 275/-
பக்கங்கள் : 215
முதல் பதிப்பு : டிசம்பர் 1989
கதை நிகழ்ந்த கால கட்டத்தில் பண்டிட்ஜி நேரு இறந்ததாக வருகிறது. அதாவது 1964 இல் நடந்த கதை. ஆனால் இந்த கால கட்டத்துக்கும் பொருந்துவதாகவே வருகிறது.
இரு நண்பர்களின் ஆத்மார்த்த நட்பு. அதில் ஒருவர் பிரபல நடிகர் சத்யன். மற்றவர் திரைக்கதை எழுதும் கோபால் . நடிகருக்கு அத்தனை பேரும் உச்ச பட்ச மரியாதை கொடுக்கிறார்கள். ஆனால் அவர் அதிகம் மதிப்பவர் கோபால்ஜி. அதனாலேயே தனக்கு சமமான மரியாதை அவருக்கும் கிடைக்க வேண்டும் என அழுத்தம் கொடுப்பவர் சத்யன்.
கதையை பகுதி பகுதியாக பிரித்து எழுதி இருக்கிறார். ஒரு பகுதியில் சத்யன் சொல்வது போல் வரும். அடுத்த பகுதியில் கோபால் தன்னிலையில் சொல்வது போல் வரும். இரண்டும் மாறி மாறி வரும். அது வாசிப்பதற்கு புதுமையாய் இருந்தது.
ஒரு சில பகுதிகள் நெஞ்சின் மறவா பகுதியில் உறைந்து விட்டன.
கோபால் சினிமாத் துறையில் இருப்பதால் அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருக்கலாம் என மனைவிக்கு சந்தேகம். அந்த சந்தேகம் ஒரு நாள் வெடித்து மன நிலை பிறழ்ந்த நிலைக்கு போய் விடுவார்கள். அந்த சமயம் அவர் மகனுக்கு சரியான காய்ச்சல். வீட்டைப் பூட்டி அவர் மருத்தவரை அழைக்கச் சென்று திரும்பி வரும் போது மகன் இறந்திருப்பான். முகப் பகுதியில் தலையணை இருக்கும். மூச்சுத் திணறி இறந்திருப்பான். மற்றவர்களிடம் அதை மறைத்த கோபால்ஜி தயங்கித் தயங்கி தனிமையில் தன் நண்பன் சத்யனிடம் சொல்லுமிடம்.
சியாமளா சினிமாவில் உப நடிகை. தன் கணவன் செய்த கொடுமையின் காரணமாக அவனை விட்டுப் பிரிந்து ராமநாதனுடன் வாழ்ந்து வருவாள். சத்யன் அவளை முதன் முதல் பார்த்தது கோபால்ஜியின் மகன் இறந்த வீட்டில். அசந்தர்ப்ப வசமாக அந்த நேரத்தில் அவள் மேல் அதிக ஈர்ப்பு வரும். அதன் பின் பார்க்கும் சந்தர்ப்பங்களில் ஈர்ப்பு கூடுமே ஒழிய குறையாது. சத்யன் பம்பாய்க்கு திரும்ப வேண்டிய நேரத்தில் அவளிடம் சொல்வார்.்" நீங்கள் உங்கள் குழந்தையுடன் கண்டிப்பாக பம்பாய்க்கு வர வேண்டும். வந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன்"
அவள்: நான் ஏன் பம்பாய் வர வேண்டும் என அதற்கு சத்யனின் பதில் " வீட்டுக்காரி ஆவதற்கு"
எவ்வளவு சுருக்கமாக அவள் மேல் தனக்கு இருக்கும் ஈடுபாட்டை சொல்லி முடிக்கிறார்.
நிறைய பேர் வாசித்திருக்கலாம். வாசித்தவர்கள் தங்கள் கருத்தைப் பகிருங்கள். தேடி வாசிக்க வேண்டிய புத்தகம்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!