24 October, 2025
#பைசன் காளமாடன்.
இயக்குநர் : மாரி செல்வராஜ்.
இசை : திவாஸ் கே பிரசன்னா
முக்கிய நடிகர்கள் : துருவ் விக்ரம், பசுபதி, அனுபமா பரமேஸ்வரன், ரஷிஜா, அமீர், லால்
ஒளிப்பதிவு: எழில் அரசு கே.
ஏற்கனவே இரண்டு படங்களில் நடித்து அதிகம் பேசப்படாமல் இருந்த துருவ் இதில் பாய்ச்சல் காட்டி இருக்கிறார். கபடி விளையாட்டில் இவர் உடல் மொழி காளை மாட்டினை மனதில் வைத்துக் கொண்டு செயல்பட்டது போலவே தோன்றியது. இரண்டு கால்களையும் மாற்றி மாற்றி அடவு கட்டுவது போல் வைத்து பாய்வது, தலையாலேயே முட்டித் தள்ளி ஒருவன் முதுகு வழியாக குதித்து வந்து கோட்டைத் தொடுவது போன்ற செயல்கள் அந்த கபடி வீரனைத் தனித்துக் காட்டியது. ஒரு கபடி வீரனுக்கே உரிய கட்டு மஸ்தான உடம்பு.
மனதில் இடறிய ஒரே விஷயம். கபடிக்கே உரித்தான சிறப்பு கபடி, கபடி, கபடி, கபடி என மூச்சு விடாமல் ஏதாவது ஒரு பாடலுடன் சொல்லியபடியே ஓடி எதிர் தரப்பினரைப் பிடிப்பது தான். இடையில் மூச்சு வாங்கி விட்டாலும் தோற்றதாக அர்த்தம். கபடியின் அழகே அது தான். அது மிஸ்ஸிங். மாரி செல்வராஜின் பதிவிலேயே இந்த கேள்வியை எழுப்பி உள்ளேன். பதில் சொன்னால் காரணத்தை புரிந்து கொள்ளலாம்.
இந்தக் கதையில் காதலைச் சொல்லாமலும் இருக்கலாம். ஆனால் எல்லா மனிதனின் வாழ்விலும் ஏதோ ஒரு காதல் கண்டிப்பாக இருக்கும். ஒன்றுமே இல்லாத இடத்தில் கூட ஒரு தலைக்காதல் இருக்கும். கதை நாயகனை விட ஒரு சில வயது கூடிய , தன் இனத்தையே சேர்ந்த பெண் மேல் உள்ள மெல்லிய காதல் மிக அழகாக சொல்லப் பட்டு இருக்கிறது. அந்தப் பெண்ணின் அண்ணன் ரொம்ப இயல்பாக நடித்திருக்கிறார்.
இரண்டு மலையாள நடிகைகள் ஒருவர் கிருட்டினா ( துருவ்) வின் காதலியாகவும், மற்றொருவர் அக்காவாகவும் நடித்திருக்கிறார்கள். ஏன் மலையாள நடிகைகள் எனச் சிலர் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். ஏன் கூடாது? தமிழ் மைந்தர்கள் அந்நிய மாநிலப் பெண்களைக் கொண்டாடி உயர் அந்தஸ்து கொடுத்தவர்கள் தானே. உதாரணம் குஷ்பூ, நயன்தாரா, நஸரீன், சிம்ரன், ஜோதிகா என இந்த வரிசை நீளுமே. மிகச் சிறப்பாக நடித்தும் ஓரளவே ஜொலிக்க முடிந்த ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற தமிழ் நடிகைகளும் இருக்கிறார்களே. நாம் ஏன் இந்த கேள்வியை எழுப்ப வேண்டும். இதற்கான பதிலை படத்திலேயே சொல்லி விட்டார். எதிர்க்கத் தான் செய்வார்கள். அத்தனை எதிர்ப்பையும் மீறித் தான் நீ ஜெயித்து வர வேண்டும் என. தன் நாயகனை சொல்ல வைத்த மாரி தனக்கும் இதையே தான் சொல்லிக் கொள்வார் என நினைக்கிறேன்.
வன்முறை மிக அதிகம். ஒழிந்து போன ஜாதிப் பாகுபாடை ஏன் கிளறுகிறார் என மனம் கூசாமல் கேட்கிறார்கள். பொட்டு வெடி வெடிப்பது போல் சுட்டுத் தள்ளுவதும் மனித சடலங்கள் சரமாரியாய் சரிந்து விழுவதையும் ரசித்துப் பார்ப்பவர்கள் இந்தக் கேள்வியை எழுப்புவது தான் ஆச்சர்யம்.
அமீர் , லால் இருவரும் முக்கியமான கதாபாத்திரங்களை எடுத்து வாழ்ந்திருக்கிறார்கள். இவர்களின் பேச்சு, உடல்மொழி, தோற்றம் போன்றவற்றில் அதிக அக்கரை தெரிகிறது.
இயக்குநர் சிகரத்தின் படங்களில் வரும் சின்ன சின்ன பாத்திரங்கள் கூட மனதில் நிலைத்து நிற்கும். மாரி செல்வராஜின் படங்களிலும் அது போலவே. இயக்குவதில் அபாரத் திறமை பளீரிடுகிறது. இரத்தம் அதிகமாகக் காட்டப்படுவது போல் தோன்றினாலும் மனதில் பதிய வைக்க கலையில் கொஞ்சம் அதிகப்படி அனுமதிக்கப் பட்டது தானே.
எனக்குப் பிடித்த இன்னொரு உத்தி. பைஸன் விளையாட ஜப்பானுக்குச் சென்றதை முதலில் காட்டி விட்டு அதன் பின் அதற்கான வழியில் பட்ட சிரமங்களைச் சொல்லும் போது எப்படியும் மீண்டு விடுவான் என்பது தெரிந்து விடுவதால் ஆசுவாசமாக பார்க்க முடிகிறது. இது தான் என் தேர்வும். கதையின் முடிவு தெரிந்து விடுவது என் ரசிப்பைப் பாதிக்காது. ஓ! இதற்காகத் தான் இதைச் சொல்லி இருக்கிறாரா என்று எழுத்தின் அழகை ரசிக்கக் கூட முடியும் என்னால்.
பதிவு நீள்கிறது. ஆனாலும் ரசித்த விஷயத்தை சொல்லாமல் விட முடியாது. பசுபதி துருவ்வின் அப்பாவாக ஒரு கனத்த பாத்திரத்தை எடுத்து நடித்திருக்கிறார். மிகச் சரியான தேர்வு. கடைசி கடைசியாக காவலர்களின் காலில் விழுந்து கெஞ்சும் போது கண் கலங்கி விடுகிறது நமக்கு.
இசை படத்தின் உணர்வை கொஞ்சமும் பாதித்து விடாமல் பயணித்திருக்கிறது. "சாமக் கொடை தொடங்கிடுச்சு ராசா( பாடியவர் வி.எம் மகாலிங்கம்) "தென்னாட்டு தேசத்தில் வாழும் கூட்டம் ( பாடியவர் சத்யன்)" "ராசாத்தி ஒன் நினைப்பு கருவக் காட்டு முள்ளாச்சுடி(பாடியவர் நிவாஸ் கே பிரசன்னா) " "அத்தி வானக் காட்டுக்குள்ளே ( பாடியவர் அறிவு & வேடன்) ": " சின்ன சின்ன சீனிக்கல்லு ( பாடியவர் சின்மயீ)" பாடல்கள் என்னை மிகவும் ஈர்த்தன. இசையும் படமாக்கப்பட்ட விதமும் அவ்வளவு அழகு. ஒளிப்பதிவும் மிகச் சிறப்பு.
அர்ச்சுனா விருது பெற்ற மனத்தி கணேசன் வழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட கதை. ஒரு வீரன் உருவாவது என்பது சாதாரண காரியமல்ல. அவன் தேர்வில் அரசியல் விளையாடி விடக் கூடாது. இது அன்றும் இன்றும் என்றும் ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மை தானே. படம் முடிந்து மிகவும் கனத்த மனதோடு தான் வெளியே வந்தேன்.
மதிப்பெண் : 4.5/5
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!