27 October, 2025
#உப்பேய்!! உப்பேய்
உப்பு விற்கப் போனா மழை வந்தது. மாவு விற்கப் போனா காற்றடித்தது என்று சொல்வதைக் கேட்டு இருக்கிறோம்.
அப்படி ஒரு மழை நாளில் மழை நின்ற பொழுதில்
"உப்பேய்!"
"உப்பேய்!"
னு ஒரு குரல். சைக்கிளில் ஒரு சாக்கு மூட்டையை வைத்துக் கொண்டு ஒருவர் கல் உப்பு விற்றுக் கொண்டு வந்தார். இந்த உப்பை விற்று ஒரு மனுஷன் வாழ்க்கையை எப்படி நடத்த முடியும்.
அதை அவரிடமே கேட்போம் என வெளியே போனேன்.
"ஐயா ! உப்பு ஒரு படி எவ்வளவு?"
"ஐம்பது ரூபா"
ஒரு படி கொடுங்கன்னு வாங்கினதும் " ஐயா!எப்படி உப்பு வித்து பொழைக்க முடியுதா? என்ன லாபம் கிடைச்சிடப் போகுது?" என்று கேட்டேன்.
எனக்கு வேற வேல தெரியாதேம்மா. ஒரு சாக்கு உப்பு வித்தா நானூறு ரூபா கிடைக்கும். மூணு நாளா அலையறேன். வித்து முடிக்க முடியல" என்றார்.
மூணு நாளுக்கு நானூறு ரூபாய்னா ஒரு நாளுக்கு நூத்தைம்பது ரூபா கூட வரலையே. இதை வைத்து என்ன சமாளிக்க முடியும்.
கடையிலேயே கல் உப்பும் கிடைக்கிறதால யாரும் எங்க கிட்ட வாங்குறதில்ல. ஆனா நேரா உப்பளத்துல இருந்து வாங்கிட்டு வர்ரோம். இது தான்மா சுத்தம் என்றார். ஒரு படி உப்பு வாங்கினா அடுத்த ஒரு படி எவ்வளவு நாள் கழிச்சு வாங்கப் போறோம்.
நான் ஓய்வுக்கு பின்னரே சிறு தொழில் செய்பவரைத்தான் ஆதரிக்கிறேன். நீங்களும் ஆதரிக்கணும் எனத் தான் இந்த பதிவு.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!