12 July, 2026
21 பெண்களின் சிறுகதைகளைத் தொகுத்து வெளிவந்துள்ள " மான் குட்டிகளும் பருந்துகளும்" புத்தகத்தைப் பற்றி ஒரு சிறிய அறிமுகம். எனது மாயக் கண்ணன் என்ற சிறுகதையும் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
முதல் கதை புதிய மாதவி எழுதிய "நினைவு நாள்"
சில ஆண்கள் காடு மலை எல்லாம் சுற்றித் திரிந்து தகவல் சேகரித்து எழுதுவது தான் சிறந்த எழுத்துன்னு நினைக்கிறாங்க. அறிவுக்கு இணையா உணர்வுகளும் முக்கியமானவை தான்.
உணர்வுப் பாதிப்பை உண்டாக்கும் கதைகளை பெண்களால் தான் சிறப்பாக எழுத முடியும். அதற்கொரு உதாரணம் இந்த சிறுகதை நினைவு நாள்.
மனைவி இறந்த கணேஷும் கணவனை இழந்த மீனாவும் மறுமணம் புரிந்து கொள்கிறார்கள். எதைப் பேசினாலும் தன் இறந்து போன மனைவியிடமே வந்து பேச்சை முடிப்பது தான் "மனைவி மீதி இவ்வளவு அன்பா" என்று வியந்து திருமணம் புரிய வைத்தது.
ஆனால் மீனாவுக்கு திருமணத்துக்குப் பின் அதுவே மன உழைச்சலைத் தந்தது.கணேஷின் மனைவி உமா இறந்த ஆண்டு நினைவு நாள் அன்று வீட்டை அதகள் படுத்தி விடுவான். அதை மிக அழகாக விவரித்திருக்கிறார்.
ஆனால் சாலை விபத்தில் இறந்து போன மீனாவின் கணவன் ரமேஷின் இறந்த நாள் சத்தமில்லாமல் கடந்து போகும். இந்த ஆர்ப்பாட்டம் மீனா செய்திருந்தால் கணேஷ் அதை எப்படி எதிர்கொண்டிருப்பான். இதை சிந்திக்க வைக்கத் தான் பெண்ணெழுத்து தேவையாய் இருக்கிறது.
கணேஷ் பேசிக் கொண்டிருந்தான். உமா கேட்டுக் கொண்டிருந்தாள் . மீனா மௌனமாக இருந்தாள் அவள் மௌனத்தை ரமேஷுடன் இரவுகளும் கேட்டுக் கொண்டிருந்தன என அழகாக முடித்திருந்தார்.
என்னை உடைத்துப் போட்ட ஒரு வரி உண்டு " தலையணையை எடுத்து வயிற்றோடு வைத்துச் சேர்த்துக் கட்டிக் கொண்டு கால்கள் இரண்டையும் மடக்கிப் பனிக்குடம் உடைக்கப் போகும் குழந்தையைப் போல படுத்திருந்தாள்"
இது தான் அந்த வரி.
அகிலாவின் " காயம்" என்ற சிறுகதை. ஒவ்வொரு பெண்ணுக்குமே சிறு வயதில் நடந்த நிகழ்வால் , யாரிடமும் சொல்ல முடியாமல் போய் , அழுத்தமான காயமாய் மனநில் பதிந்த விஷயம் ஏதாவதொன்று இருக்கும். அது இல்லாத பெண் பாக்கியசாலி. ஆரோக்கியமான குடும்ப வாழ்வைப் பெற்றிருப்பாள். அத்தகைய ஒரு பெண்ணின் கதை தான் காயம். ஊட்டி போகும் வழியிலுள்ள கேத்தியின் இளங்காலைப் பொழுதின் வர்ணனையோடு கதை தொடங்குகிறது. அங்கே யூக்கலிப்டஸின் மணம் எல்லா வீடுகளிலும் இருப்பதற்கான காரணமாக இவர் சொல்லப்படுவது அனேகமாக உண்மையாகவும் இருக்கலாம். "கண்கள் ஒரு நல்ல பேச்சு கடத்தி. வெகு சகஜமாக பாலம் போட்டு விடலாம். கண்களைத் தவிர்ப்பவர்களை பேச முற்படாதவர்களாக சங்கோஷப்படுபவர்களாக கொள்ளலாம்" என்கிறார். மன நலம் சார்ந்த மிகச் சரியான உண்மை. திருமணத்துக்கு முன்பே கருவுற்றதால் தற்கொலை செய்து கொண்ட ஒரு பெண்ணைப் பற்றி கூறுகையில் "ரொம்ப ஸ்டைலா டிரஸ் பண்ணிக்கும். திமிரா பேசும். அப்புறம் எவன் பார்த்துகிட்டு சும்மா இருப்பான் " என்று அங்கிருந்த ஒரு பெண் சொல்வதாக எழுதி தற்கொலைக்கான காரணத்தையும் அடிக்கோடிட்டு காட்டுகிறார். இதே போல தன் இள வயதில் நடந்து நேர் மறை முடிவெடுத்த ஒரு பெண்ணுக்கும் தனக்கும் உள்ள தொடர்பை சுவாரஸ்யமாகச் சொல்லி கதையை நகர்த்திய தருணத்தில் "அப்படியும் இருக்கலாமென நினைத்தேன்" என்று எழுதி அதிர்ச்சி தருகிறார். சிறு குழந்தைகளை சிறு வயது தானே என்று எண்ணி அலட்சியமாக நடத்தாதீர்கள். அது அவர்களின் உள் மன ஆறாதக் காயமாக இருந்து வளர்ந்த பின் குடும்ப வாழ்க்கையைக் கூட பாதிக்கும் வாய்ப்புண்டு் .
ஆசிரியர் இளம்பிறை எழுதிய
"பூரணக் குட்டி" மற்றுமொரு கதை. வட்டார மொழி இவர்களுக்கு நன்றாக கை வருகிறது. பூரணக் குட்டி பெயர் காரணம் பதற வைக்கும். கழிப்பறை வீட்டில் இல்லாததால் மலம் கழிக்கப் போன வயற் காட்டிலேயே இவளை பெற்றெடுத்திருப்பார்கள் பூரணக் குட்டியின் தாய். இன்று கூட வீட்டில் கழிப்பறை இல்லாமல் பெண் போன இடத்தில் கற்பு அழிக்கப்பட்டு கொலையும் செய்யப்படும் செய்தி கேள்விப்படுகிறோம். இந்த கதை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக வந்திருந்தால் ஒரு முத்திரை கதையாக ஆகி இருக்க வாய்ப்புண்டு.
தனலட்சுமி பாஸ்கரன் எழுதிய யாசகம் ஒரு கதை கோவில் வாசலில் பூ விற்கும் பெண்ணிடம் அங்கே பிச்சை எடுத்துக் கொண்டிருந்த பெண் குழந்தைகளைப் பற்றி ஞானசுந்தரி விசாரிக்கிறாள் கேட்டு முடித்ததும் இறைவனிடம் தனக்காக வேண்டாமல் அவர்களுக்காக யாசகம் கேட்கிறாள். வாசகம் கேட்ட கையோடு அந்தப் பகுதி கவுன்சிலருக்கு ஒரு விண்ணப்பமும் எழுதி இருக்கலாமோ என்று எனக்குத் தோன்றியது
இந்த சிறுகதை தொகுப்பில் நான் எழுதிய மாயக்கண்ணன் என்ற சிறுகதையும் உண்டு . பொதுவாகவே ஆண்கள் எளிதில் சில விஷயங்களை நம்பி விடுவார்கள் ஆனால் பெண்கள் நுண்ணறிவோடு வரக்கூடிய ஆபத்தையும் யோசித்து இயங்குவார்கள் இந்த கதையில் அப்படி ஒரு அவசர தனத்தில் தனக்கு சீட்டு விளையாடும் இடத்தில் அறிமுகமான ஒருவனை தன் தங்கைக்கு திருமணம் முடித்துக் கொடுத்து அது எவ்வளவு பெரிய சிக்கலில் போய் நின்றது என்பதை சிறுகதையாக சொல்லி இருக்கிறேன்.
21 பெண்களின் சிறுகதைகளை 25 நாட்களில் தொகுத்து ஒரு தொகுப்பாக வர பெரும் முயற்சி செய்த ஜோஸ்வின் பாவா அவர்களின் சிறுகதை பாப(வ)நாசம் அதாவது பாபநாசம் எடுத்துக்கலாம் பாபநாசம்னு எடுத்துக்கலாம் ஒரு பள்ளி ஆசிரியர் தன் மாணவர்களை அழைத்துக்கொண்டு தாமிரபரணி நதியை சுத்தம் செய்யும் பணிக்கு செல்கிறார்கள் பனிம வயது பிள்ளைகளை பத்திரமாக அழைத்துச் சென்று கொண்டு விடுவது என்பது பெரும் பணி ஒரு சின்ன சிக்கல் கடந்து பத்திரமாக அழைத்து வந்து சேர்த்தாலும் பணியை விட்டு நீக்கப்பட்டதாக அந்தப் பெண்மணிக்கு கடிதம் வருகிறது பல இடங்களில் சம்பளம் வந்தால் போதும் மெனக்கடல் வேண்டாம் என சிலர் முடிவெடுப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது பொறுப்பெடுத்தால் தானே பிழைகள் ஏற்பட என்று ஒரு பாதுகாப்பு ஜோனிலேயே தன் பனிக்காலத்தை முடித்து விடுவார்கள் ஒரு பெண் ஆசிரியரின் பரிதாப நிலையை சொல்லும் கதை
அர்ஷா எழுதிய "அதிகாரத்தின் களிமண் பொம்மைகள்" சூர்ய பிரகாஷ் தலைமைச் செயல் அதிகாரி. கம்பீர ஆண். தன்னை அழகாக வெளிப்படுத்தக் கூடியவர்.வாசிப்பு பழக்கமுடையவர். கணினியில் நவீன செயல்பாடுகள் நன்கு அறிந்தவர். அவர் அலுவலகத்தில் புதிதாக பணிக்குச் சேர்ந்த தமிழரசு கணவனால் நிராகரிக்கப்பட்டவர். அலுவலகங்களில் பெண்ணை தன் வயப்படுத்த ஆண்கள் பயன்படுத்தும் உத்திகளை சிறப்பாகக் கையாள்வதில் வல்லவர் சூர்ய பிரகாஷ். ஆனால் தமிழரசி அவர் பெண்களை எடைபோட்டு வைத்திருப்பதிலிருந்து எப்படி மாறுபட்டவள் என்பதை தெளிந்த நீரோடை போலச் சொல்லும் கதை.
மொத்தத்தில் பல விருதுகள் வாங்கினவர்கள் முதல் தம் முதல் சிறுகதை எழுதியவர் வரை இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருப்பது இதன் சிறப்பு. ஒரு சில வெளிநாட்டு பெண்களும் இடம் பெற்றிருப்பதால் அகில உலகத்தின் பெண்களின் உணர்வுகளைப் புரிந்த கொள்ள உதவும் ஒரு தொகுப்பாக இருக்கிறது.
தொகுப்பாசிரியர் ஜெ.பி ஜோஸ்ஃபின் பாபா
Swasam பதிப்பகம்.
தொடரபு கொள்ள வேண்டிய அலைபேசி எண் : 8148066645
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!