Bio Data !!

12 July, 2026

இதெல்லாம் சின்ன வயதில் மனதில் பதிந்த விஷயங்கள். அப்போ எங்க அப்பாயி எங்களோட தான் இருந்தாங்க. சித்து உருவமாக. தங்க நிறத்தில் இருப்பாங்க. தலை முடி சுருட்டையாக தோள் அளவு தான் இருக்கும். அதைத் தூக்கி கோடாலி முடிச்சு போட்டிருப்பாங்க. வீட்டில் எப்போதும் சட்டை இல்லாமல் சேலை அணிந்து முந்தானையைச் சுத்தி மார்புக்கு மேல் மறைத்து சொருகி இருப்பாங்க. காதின் பாம்படங்கள் சமயம் கிடைக்கும் போதெல்லாம் தோளுக்கு சேதி சொல்லும். கழுத்தில் கைகளில் சுருங்கி இருக்கும் தோலை அழுத்திப் பிடித்து விட்டால் அது நேராக கொஞ்ச நேரம் ஆகும். அது எனக்கு பிடித்த விளையாட்டு. அத்தனை நகங்களும் வளைந்து கிளியின் அலகு போல தோற்றம் அளிக்கும். வாசலில் நுழைந்ததும் உள்ள அறையில் ஜன்னலை ஒட்டி போடப்பட்ட பெஞ்சில் அமர்ந்து வெளியில் போவார் வருவோரை வேடிக்கை பார்ப்பது தான் பொழுது போக்கு. ஏண்டி இவளே என்பதுடன் பெயரைச் சேர்த்துத் தான் யாருடனும் பேச்சு தொடங்கும். பெரிய பெரிய பற்கள் எந்நேரமும் போட்டிருக்கும் வெற்றிலையால் காவி படிந்து சிரிக்கும் போது ஒரு வெள்ளந்தித் தனத்தை வெளிப்படுத்தும். திடீர்னு பையப் பைய மாடியேறிப் போவார்கள். அந்த சமயம் நானும் கூட ஏறினால் எங்க அம்மா " வேண்டாம் இங்கேயே இரு." எனத் தடுத்து விடுவார்கள். அந்த நேரம் அனேகமாக மதியம் மூன்று மணியாகத் தான் இருக்கும். மாடிக்கு ஏன் போகிறார்கள் என்பது எனக்கு ஆர்வம் கிளப்பும் விடை தெரியாக் கேள்வியாகவே இருந்தது. ஒரு நாள் யாருமில்லாத சமயம் மெல்ல ஏறி விட்டேன். அதற்குப் பிறகு பயந்து போய் போவதில்லை. சுவற்றில் மாட்டி இருந்த இயேசு நாதரின் படத்தின் முன் முழந்தாளிருந்து, ஒரு சின்ன சாட்டையால் தன்னை அடித்த படி செபம் செய்து கொண்டு இருந்தார்கள். ஒவ்வொரு முறை சாட்டை காற்றில் வீறிடும் போதும் விசுக் விசுக் என சத்தமிட்டது. கண்கள் மூடிய படி குரலில் மெல்லிய அழுகை கலந்து அவர்கள் செபித்தது மறுபடியும் மாடி ஏறிப் பார்க்கும் துணிவைத் தகர்த்து விட்டது.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!