27 August, 2026
உடன்படிக்கைப் பேழை. இன்றைய ஹிந்து திசை நாளிதழில் என் எழுத்து
உடன்படிக்கை பேழை என்றொரு சொற்றொடர் வேதாகமத்தில் அடிக்கடி வரும். அது என்ன உடன்படிக்கை பேழை? தூய்மையான தங்கத்தால் மூடப்பட்ட ஒரு புனித மரப்பெட்டி. இஸ்ரவேலுடன் கடவுள் தொடர்பு கொண்ட ஒரு சாதனமாக நம்பப்பட்டது. சித்திம் மரத்தால் செய்யப்பட்டு உள்ளேயும் வெளியேயும் தங்கத்தால் பூசுவார்கள். இதன் மூடியை "கிருபாசனம்" என அழைப்பார்கள் . அந்த மூடியின் மேல் இரண்டு வான தூதர்கள் நிற்பது போன்ற அமைப்பு இருக்கும் .
அந்த உடன்படிக்கை பேழைக்குள் ஆண்டவர் மோசேயிடம் தந்த பத்துக் கட்டளைகள் எழுதிய இரண்டு கற்பலகைகள் , மன்னா வைக்கப்பட்டிருந்த தங்கப் பாத்திரம், துளிர்த்த ஆரோனின் கோல் ஆகியவை இருக்கும் . இது "சாட்சிப் பெட்டி " என்றும் அழைக்கப்படும்.
மோசேயின் பிறப்பு ஒரு சுவாரசியமான விஷயம் . எகிப்து மன்னர் ஒருவர் எபிரேய மருத்துவப் பெண்களான சிப்ரா, பூவா இருவரிடமும் தன் நாட்டுல் பிறக்கும் குழந்தைகள் ஆண் மகவுகளாக இருந்தால் கொன்று விடுங்கள். பெண் குழந்தைகள் ஆனால் வாழ விடுங்கள் என்று கட்டளையிட்டிருந்தார். ஆனால் அந்தப் பெண்கள் ஆண் குழந்தைகளைக் கொல்லாமல் தப்புவித்து மன்னர் விசாரித்த போது எபிரேய பெண்கள் வலிமையானவர்களாக இருப்பதால் நாங்கள் போகும் முன்னே குழந்தை பெற்று விடுகிறார்கள் என்றனர். எனவே மன்னர் தன் குடிமக்களுக்கு ஆண் குழந்தைகள் பிறந்தால் நைல் நதியில் வீசி விட வேண்டும் என்றும், பெண் குழந்தைகள் பிறந்தால் வாழ விடலாம் என்றும் ஆணையிட்டார்.
அந்த சமயத்தில் லேவி குலப் பெண் ஒருத்தி அழகான ஆண்மகவை பெற்றாள். மூன்று மாதங்களாக மறைத்து வைத்துப் பின் முடியாத போது கோரைப் புல்லால் ஒரு பேழை செய்து அதன் மேல் நிலக்கீல் பூசி அதனுள் அக்குழந்தையை வைத்து நைல் நதியின் நாணலுக்கு இடையில் விட்டாள். குழந்தையின் சகோதரி மறைந்திருந்து பார்த்திருந்தாள்.
அப்போது பார்வோன் மன்னனின் மகள் நீராட வந்தாள். அந்த பேழையை எடுத்து அதனுள் ஒரு அழகான ஆண் குழந்தையைக் கண்டாள். அழும் குழந்தையைக் கண்ட அதன் சகோதரி இளவரசியிடம் சென்று " இந்த குழந்தையைப் பாலூட்டி வளர்க்க ஒரு செவிலியை நான் அழைத்து வரவா?" என கேட்கச் சம்மதம் கிடைத்ததும், குழந்தையின் தாயையே அழைத்து வந்தாள். குழந்தை வளர்ந்த பின் இளவரசியிடம் கொண்டு விட "நீரிலிருந்து கிடைத்த மகன்" என்பதால் "மோசே" எனப் பெயரிட்டு வளர்த்தாள்.
மோசே தன் இனத்தவன் ஆகிய எபிரேயனை எகிப்தியன் ஒருவன் அடிப்பதைப் பார்த்து சுற்றிலும் யாரும் இல்லை எனக் கண்டு அவனைக் கொன்று மணலுக்குள் புதைத்தார். தான் செய்தது வெளியே தெரிந்து விட்டது என்ற அச்சத்தில் , பார்வோன் மன்னன் தன்னை கொல்லத் தேடியதால் தப்பியோடி, மிதியான் நாட்டில் குடியேறி, சிப்போரா என்ற பெண்ணை மணந்தார். அந்த மிதியானில் சீனாய் மலையில், ஒரு எரியும் முட்புதரிலிருந்து ஆண்டவர் உரத்த குரலில் பத்து கட்டளைகளைக் கூறி, இரு கற்பலகைகளில் எழுதி, மோசே இடம் தந்தார்.
இந்தப் பத்து கட்டளைகளையும் முக்கியமான இரண்டு கட்டளைகளில் அடக்கலாம்.
(1) உன் முழு இதயத்தோடும் ஆன்மாவோடும் மனதோடும் உன் தேவனாகிய ஆண்டவரை அன்பு செய்வாயாக.
(2) உன்னை நேசிப்பது போல் உன் அண்டை வீட்டாரையும் அன்பு செய்வாயாக.
அத்தனை மதங்களும் போதிப்பது அன்பு ஒன்றைத் தானே. அன்பு செய்வோம்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!