Bio Data !!

15 August, 2026

நாவல் : வீனஸ் ஆசிரியர் : பா. கண்மணி முதல் பதிப்பு டிசம்பர் 2025 விலை : ரூ 180 வீனஸ் ஒரு அல்ட்ரா மாடர்ன், ஆண் பெண் இருவருக்குமான அழகு நிலையத்தின் பெயர். அதன் உரிமையாளர் ரஞ்சனி. "ஜெபரா மலர்க்கொத்தை வாங்கி அதன் செர்ரி பிங்க்கை நெஞ்சோடு மென்மையாய் அணைத்த ரஞ்சனி.....' கதைத் தொடக்கமே நம்மை அறிமுகமில்லாத ஒரு ஏரியாவுக்குள் கூட்டிச் செல்லப் போகிறது என மனசுக்குள் மணி அடித்துச் சொல்கிறது. அது தான் நடக்கிறது. பெங்களூரிலுள்ள ஒரு அழகு நிலையம் அதன் செயல்பாடுகள் அங்கு வருபவர்களின் மன நிலைகள் எல்லாம் நமக்குப் புதிதாக இருக்கிறது. அங்கு வரும் ரித்விக் ஒரு கலைஞன். முன்னணி ஆடை வடிவமைப்பாளர். பட்டு லுங்கியை முன் புறம் கொசுவித் தைத்து உடுத்தி மேலே ஒரு ஷெர்வானி அணிந்திருக்கிறார். அவருடன் கட்டுடல் கொண்ட ஒரு இளைஞரும் வருகிறார். ரித்விக்கின் மகனை விட ஏழெட்டு வயது மூத்தவராய் இருக்கலாம். அவனை அவர் காதலோடு பார்த்துக் கொண்டிருந்தார் என்று வருகிறது. " அத்தனை பெரிய ஆளுமையின் அலைக்ழிப்பைக் கண்ட ரஞ்சனி வியந்தாள் " என வருகிறது. இது போல் சில இடங்கள் கூடுதலாய் சில வரிகள் வந்திருந்தால் அநாகரீகமாக ஆகி இருக்கும் என்ற அளவில் அளவாகக் கத்தரிக்கப்பட்டு இருக்கின்றன. அழகு நிலையம் கதையின் களம் என்பதால் "எதைச் செய்ய வேண்டும் என்பது ்மட்டுமல்ல எதைச் செய்யக் கூடாது என்பதிலும் தோற்றப் பொலிவு அடங்கியிருக்கிறது " போன்ற அழகுக் குறிப்புகளும் கதையில் விரவிக் கிடக்கின்றன. ஒரு தனித்த , வளர்ந்த மகளை வளர்க்கும் தாயின் சிரமங்களையும் சொல்லி இருக்கிறார். தான் நினைத்தது நடக்காத போது மகள் "அப்புறம் எதுக்கு என் கஸ்டடியை எடுத்துக்கிட்டீங்க" என சுள் ளென கேட்கும் போது இப்படித்தானே பல குழந்தைகளும் இருக்கின்றன எனத் தோன்றுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் ஒரு கதா பாத்திரத்தை மையமாக வைத்து எழுதி இறுதியில் மெயின் கதையில் கொண்டு சேர்ப்பதை ஒரு உத்தியாகப் பயன்படு்தியது போல் தெரிகிறது. வித்தியாசமாக இருந்தது. "தன் காரியதரிசியை சின்னப் பெண்ணாகவே தேர்ந்தெடுக்கும் வாகேசனுக்கு மனைவி சின்னப் பெண்ணாகத் தெரிவதில் மட்டும் பிரச்னை. " இது பல பெண்களுக்கும் இருக்கும் ஆதங்கம் தான். தன் மனைவி என்னவெல்லாம் செய்யக் கூடாது என கட்டுப்பாடு விதிக்கிறார்களோ அதைச் செய்து வரும் பெண்ணை மனைவி உடனிருப்பதைக் கூட சட்டை செய்யாமல் வேடிக்கை பார்ப்பவர்கள் இருக்கத் தானே செய்கிறார்கள். இதைப் போல ஒரு பெண்ணின் ஆதங்கத்தைப் பல இடங்களில் வெளிப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர். "எவ்வளவு உயரத்தில் சென்றமர்ந்தாலும் பெண்ணைச் சுற்றி மொய்க்கும் ஈக்கள் வந்து விடும்" என்கிறார். உயர் பதவியில் இருக்கும் அந்தப் பெண்களின் முந்தானை விலகினால் கூட அந்த ஈக்கள் விட்டு வைக்காது என்கிறார். ஒரு வித்தியாசமான யோசனையையும் சொல்லி இருக்கிறார். "திருமணத்திற்குப் பிறகு ஐந்து வருடத்திற்கு ஒரு முறை தம்பதியரைச் சந்தித்து இந்த உறவைத் தொடர்வதில் உங்களுக்கு விருப்பமா எனக் கேட்க வேண்டுமாம். " சந்தியா எனும் கதாபாத்திரம் சொல்கிறது. இப்படிச் செய்தால் எத்தனை திருமணங்கள் தேறும். ஆனால் இருவருமே வாழ்க்கையை சரி வர நடத்திச் செல்லவும் வாய்ப்பிருக்கும். பெரு நகரத்தின் பல திசைகளையும் கண்ணோட்டங்களையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறது இந்த நாவல். அதுவே இதன் ப்ளஸாகவும் மைனஸாகவும் இருக்கிறது. பல இடங்களில் கதையோடு ஒன்ற முடியாமல் எட்டி நிற்பது போல இருக்கிறது. ஆனால் வாசிப்பதற்கு சுவாரஸ்யமான ஒரு நாவல்.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!