Bio Data !!

22 August, 2026

Cocktail 2

ஹிந்தி திரைப்படம் காக்டெயில் 2. இயக்குநர் : 2012 இல் காக்டெயில் என்ற படத்தை இயக்கிய ஹேமி அவர்கள். முக்கிய கதாபாத்திரங்கள் ஷாகித் கபூர், ராஷ்மிகா மன்டனா, க்ருத்தி சனான், மீமீ படம் பார்த்ததிலிருந்து க்ருத்தி சனானின் பெரிய ரசிகை ஆகி விட்டேன் நான். முகம் அவ்வளவு அழகாக உணர்வுகளை வெளிப்படுத்தும். ராஷ்மிகாவுக்கு ஒரு துள்ளல் முகம். அவர் முகம் காட்டும் புன்னகை ஒரு நேரம் அசட்டுத் தனத்தை பிரதிபலிக்கும். அடுத்த நொடி களங்கமற்ற தனத்தைக் காட்டும். அதனால் கதாநாயகன் ஷாகித் பெரிதாய் ஈர்க்கவில்லை என்றாலும் படம் பார்க்க நினைத்தேன். பள்ளிக் காலம் தொட்டே நண்பர்களாகி அதன் பின் காதலர்களாகி லிவ் இன்னில் வாழும் நாயகனும் நாயகியும் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள். எந்த வித ஆட்சேபணையுமில்லாமல் திருமணம் வரை செல்கிறதே என யோசிக்கும் போது, தன் காதலன் வாய்ப்புக் கிடைத்தாலும் உத்தமனாக இருப்பானா என ஒரு உருப்படாத சந்தேகம் அவளுக்கு வருகிறது. வாய்ப்புக் கிடைத்தால் இரண்டாவதை அனுபவிக்கலாமே என எண்ணம் வரும் ஆணுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறாள். ஒரு பெண் காதலனுடன் போகும் போது அழகான பெண்ணை உடன் வைத்திருப்பதே ஆபத்து. அதில் என் காதலனுக்கு சோதனையை ஏற்படுத்தி அவன் மனச் சுத்தமுடையவன் தானா என உறுதிபடுத்திக் கொடு என அந்த அழகான பெண்ணிடமே பொறுப்பைக் கொடுத்தால் எவ்வளவு நாசம் விளையும். அது தான் கதைக்கான கரு. ஆனால் படத்தின் முடிவில் ரெண்டு பெண்களையும் இடதும் வலதுமாக அந்த காதலன் வாங்கும் போது ஆண்கள் மேல் இருக்கும் நம்பிக்கை அதிகரிக்கும் . எந்த ஒரு நட்பும் அறிமுகமானதும் ஒரு புத்துணர்ச்சி கொடுக்கும். ஆனால் இன்றைய சமூக ஊடகம் அந்த புத்துணர்ச்சி என்றும் இருக்கணும் என்பதை வலியுறுத்துகிறது. அது நடைமுறைக்கொவ்வாதது. இதைப் புரிந்து கொள்ளாததாலேயே பல உறவுப் பிளவுகள் நேர்கின்றன. இன்றைய தலைமுறைக்கு நல்ல புரிதலை உண்டாக்கும் ஒரு படம். ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு வசனங்கள் உண்டு. வேகமாகத் தொடரப் பழகி விட்டால் படம் நன்றாகவே புரியும். என்ன ஒன்று ஆரம்பத்தில் படம் ஒரு அடலட்ஸ் ஒன்லி படமாகவே இருக்கிறது. சிசிலி என்னும் இடத்தை "நன்றாகச்" சுற்றிக் காட்டி இருக்கிறார்கள். ஆனால் போகப் போக படம் தன் போக்கை மாற்றிக் கொள்கிறது. நல்ல ஒரு படம் பார்த்த உணர்வு.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!