13 August, 2026
#நூறு சாமி
திரைப்படம் : நூறு சாமி
இயக்குநர் : சசி
முக்கிய கதாபாத்திரங்கள் விஜய் ஆன்டனி , ஸ்வாசிகா, ( லப்பர் பந்து படத்தில் அடித்து ஆடியவர்) அஜய் திஷான், சக்தி, பாலாஜி சக்திவேல் , கருணாஸ் , லிஜோ மோள் மற்றும் பலர்.
OTT :zee5
" நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்னைப் போல் ஆகிடுமா" என்ற பாடல் வரி படத்தின் பேரைக் கொடுத்திருக்குமோ?
இது ஒரு கதாநாயகியின் படம் தான். விஜய் ஆன்டனி கடைசி நாற்பது நிமிடங்கள் தான் வருகிறார். கதாநாயகிக்கு தாராளமாக இடமளித்திருக்கிறார்கள். என்னா ஒரு நடிப்பு!! இரு வளர்ந்த பையன்களின் ஒற்றைத் தாயாக ( single mother) கலக்கி இருக்கிறார்.
மலையாளப் படங்களை அடியொற்றி நிறைய இடங்களில் நமக்கு ஸ்பூன் feeding செய்யாமல் நம்மை உணர வைக்கிறார்கள். ஒரு கதாபாத்திரம் அடிக்கடி சிகரெட் குடிப்பதையும், செல்வி என்ற அந்த இளம் விதவையிடம் அத்து மீறிப் பேசுவதையும் காட்டி வந்து , ஒரு முக்கியமான இடத்தில் ஆளைக் காட்டாமல் அந்த சிகரெட் பிடத்த ஒற்றைக்கையை மட்டும் காட்டி நம்மை உணர வைக்கிறார்கள்.
கதை நாயகி செல்வியின் அண்ணனாக வரும் கருணாஸ் சமுதாய விருப்பத்தை மீறி நடக்கும் ஒரு பெண்ணிடம் கடுமை காட்டும் அண்ணனை கண் முன்னே கொண்டு நிறுத்துகுறைந்த.
அடாவடி மனிதனாக வரும் இயக்குநர் பாலாஜி சக்திவேல் . அவருக்கு ஒரு அடிப்பொடி. தான் கதைக்குள் வரும் சந்தர்ப்பங்களில் எல்லாம் நமக்குள் ஒரு மென் பதற்றத்தை உண்டாக்குகிறார்.
பாஸ்கராக வரும் அஜய் திஷான் தந்தையற்று வளரும் ஒரு தலைமகனின் பொறுப்பை உணர்ந்து நடித்திருக்கிறார். தன் தாயை செல்வி , செல்வி என்று பெயர் சொல்லும் அழைக்கும் இரண்டாவது மகன் சக்தி ய்ட்யூபர் என்று நினைக்கிறேன். சரி தானா சொல்லுங்கள். அவனுக்கும் நல்ல எதிர்காலம் இருக்கிறது.
தனது வயதின் இருபதுகளிலேயே தன் கணவனை இழந்த ஒரு பெண் ஒரு கால கட்டத்தில் மறுமணம் புரிய நினைக்கிறாள். அப்போது கோபமாக மறுதலிக்கும் மூத்த மகன் தான் அவளது நாற்பதுகளில் முனைப்பெடுத்து திருமணம் செய்து வைக்க நினைக்கிறான். அந்த வாழாவெட்டி (?) மாப்பிள்ளை தான் விஜய் ஆன்டனி.
குறைந்த கால அளவே வந்தாலும் மனதில் ஆழப் பதிந்து விடுகிறார்.
படத்தோடு ஒன்றி வரும் பாடல்கள். இந்தக் காலத்தில் விவாகரத்தானவர்களே திருமணம் எளிதாகச் செய்யும் போது விதவை மறுமணம் ஒரு விஷயமா என நினைக்காதீர்கள். எங்கோ ஒரு கிராமத்தில் இன்னும் இது கடினமானதாக இருக்கலாம். ஒரு உண்மைக் கதையின் அடிப்படையில் எழுந்த கதை தான் இது என்கிறார்கள்.
இயக்குநர் சசி பல வருடங்களுக்கு முன் எடுத்த "பூ " படம் நம் மனதில் பச்சக் என்று ஒட்டிக் கொண்டது போல இதுவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
பார்க்காதவங்க பார்த்திடுங்க. ஒரு நல்ல feel கொடுக்கும் படம்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!