Bio Data !!

24 October, 2026

#சினிமா விமர்சனம். டோரதி

மிக அதிகமாக பேசப்பட்ட படம் டோரதி. நெட்ஃப்ளிக்ஸ்சில் வந்து விட்டது. படத்தில் ஆர்வத்தை தூண்டுவதற்காக ஆரம்பமே கார்த்தி (ரிஷிகாந்த்) போனில் சுப்புவைக் (சனந்த்) கொன்று விட்டேன் என்கிறான். பள்ளி நட்பில் கதை தொடங்குகிறது , புது மாணவனாக வந்து சேரும் கார்த்தியை சுப்பு தைரியமாக பழைய மாணவர்களிடமிருந்து பாதுகாப்புக் கொடுக்கிறான். ஆனால் வளர்ந்த பின் கேங்ஸ்டர் ஆன சுப்புவின் குடும்ப உறவினர் ஒருவர் சுப்பு ரத்தத்தை கண்டு அஞ்சுபவனாகவும் கார்த்தி துணிச்சலாய் இருப்பதாகவும் சொல்கிறார் . இது படத்தின் கருவை மெல்லிய கோடிட்டு காட்டல் . ரிஷிகாந்த்தை ஏன் திடீரென்று ரஜினிகாந்த்தோடு ஒப்பிடுகிறார்கள் என நினைத்தேன். ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை யில்ல என்ற பாடலை "கல்யாண விருந்து" பாடல் நினைவுபடுத்துகிறது . ஆனால் ரஜினி முகத்தில் இருந்த அந்த ஒளி இங்கே கொஞ்சம் மிஸ்ஸிங் . பல வருடங்களுக்ககு முந்திய காலகட்டத்தில் நடந்த நிகழ்ச்சியாகத் தான் காட்டுகிறார்கள் . இன்னும் பத்து வருஷத்துல எங்களை எல்லோரும் ஏற்றுக் கொள்வாங்கன்னு ஜீவா சொல்றாங்க . அதனால அது நிகழ்காலக் கதை அல்ல. படத்தை எதிர்மறையாக விமர்சனம் செய்பவர்கள் , அநேகமாக படத்தை பார்க்காதவர்களாகத் தான் இருப்பார்கள். படிப்படியாக சுப்பு கதாபாத்திரத்தின் மேல் நம் அனுதாபத்தை கூட்டுகிறார்கள் அன்றைய பொது ஜனத்திற்கு அவர்கள் மேல் இருந்த அருவருப்பை காட்டுவதற்காக ஒம்போது அஜக் என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதன் மூலம் பிறழ் பிறப்பு கொண்டவர்கள் மேல் அனுதாபம் இல்லாத அந்த காலத்தை உணர்த்துகிறார்கள். பத்து வரிகளில் சொல்லக் கூடிய வசனத்தை ஒற்றை வார்த்தையில் "வரேன்டி" என்பதன் மூலம் கார்த்தி சுப்புவின் பால் மாற்றத்தை ஏற்றுக் கொண்டதை புரிய வைத்தது இயக்குனரின் திறமை. #ஸ்பாய்லர் இனி தான் படம் பார்க்கணும். படத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டாம் என நினைப்பவர்கள் இங்கேயே பை பை சொல்லி நகர்ந்து கொள்ளுங்கள். கொலையைத் தவிர்த்து தமிழ்ப் படமே எடுக்க முடியாது போல . இதிலும் அடியாளாக பணிபுரியும் கார்த்தியிடமே அவன் நண்பன் சுப்புவை கொல்லும் பணி ஒப்படைக்கப்படுகிறது. ஏன்? அதுதான் அனைவரும் அறிந்த ரகசியமாச்சே . 16 வயதினிலேயே பெண்ணாக உணர்ந்த சுப்பு அதை மறைத்து ஆணாக நடமாடிக் கொண்டிருந்தவன் தன் தந்தை, அண்ணன்கள் செய்யும் அடாவடியில் வெறுத்து பெண் உடை தரித்ததால் குடும்ப கௌரவம் போய்விடும் என்று தான் கொல்லும் பணி. பின்னாளில் சுப்பு வும் கார்த்தியை விட்டு பிரிந்து விடக்கூடாது என்பதற்காகவே ஆணுடை தரித்து ஆணைப் போலவே அடாவடிகள் செய்ததாகச் சொல்கிறான். டோரதி (கீர்த்தி சுரேஷ் ) சுப்புவின் அண்ணனைத் திருமணம் செய்து வந்த சில நாட்களிலேயே தூக்கில் தொங்குகிறாள். அவளைத் தன் குடும்பத்தார் தான் கொன்று விட்டார்கள் என்று நம்பும் சுப்பு அந்த துயரத்தில் அவன் தோழி தனலட்சுமியைத் தாயாய் நினைத்து துயரத்தை கொட்டுகிறான். அதை கார்த்தி விசாரிக்கும் போது இப்போதைக்கு என் அழுகையை சகிக்கிறதுக்கு அவ ஒருத்தி தானே இருக்கிறாள் என்பான் . ஆண் பிள்ளை அழுவதை கேவலமாக பார்ப்பது ஒரு அடிமுட்டாள் தனம். ஆண் பிள்ளையானால் என்ன ? அவனுக்கும் இதயம் இருக்கிறது. சுப்புவைத் தன் தங்கை தனலட்சுமியுடன் பார்த்த அண்ணனுக்கும் மன்னிப்பு கேட்க வந்த சுப்புவுக்கு தேரிச் செம்மண்ணில் நடந்த சண்டைக் காட்சி உண்மையில் சண்டைக் காட்சி அமைத்தவருக்கும் ஒளிப்பதிவு செய்தவர்க்கும் இடையே நடந்த சேவல் போட்டி . மிக அழகான காட்சி அது. துணிச்சலோடு எடுக்கப்பட்ட படம். பார்த்தவர்கள் எதிர்மறை விமர்சனங்கள் தரமாட்டார்கள். கார்த்திக் சுப்புராஜ் இயக்கம் , இசைஞானியின் இசை, கணேஷ் சிவாவின் படத்தொகுப்பு, திருநாவுக்கரசு அவர்களின் ஒளிப்பதிவு, கணேஷ் சுப்புராயன் அவர்கள் அமைத்த சண்டை காட்சிகளோடு பூரண அலங்கார பூஷிதையாக வலம் வருகிறாள் டோரத்தி.

22 October, 2026

வாசித்த போது வந்த இந்த ஒரு வரி நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றை நினைவுபடுத்தியது. "படத்தைப் போடுங்கைய்யா" என்று மொத்த கொட்டாயே கத்தியது." இது தான் வந்த வரி. டென்ட் கொட்டாய்ல மட்டுமல்ல தியேட்டர்லயுமே அந்த நாட்கள்ல நிறைய விளம்பரங்கள் வரும். அது போர் அடிச்சு போகும் போது இப்படிக் கத்துவாங்க. எங்க ஊர் மக்கள் ரொம்ப குசும்புக் காரங்களா? ஒரு நாள் தியேட்டர்ல ( எந்த படம்னு ஞாபகம் இல்ல. இருந்தாலுமே எதுக்கு வம்பு) படம் தொடங்கி அரைமணி நேரம் ஓடிடுச்சு. படு மொக்கை படம். போர் அடிச்சாலே தியேட்டரின் அமைதி கொஞ்சம் கொஞ்சமாய் கலைந்து சலசலப்பு உருவாகும். அங்கங்கே பெருமூச்சு பேரலையாய் எழும். அந்த நேரத்தில யாரோ ஒருவர் "படத்தைப் போடுங்கய்யா" என்று கத்தினார். படம் போட்டு அரை மணி நேரத்துக்கு மேல ஆச்சுது. அவர் அப்படி சொன்னதும் மொத்த தியேட்டரும் "கொல்" லெனச் சிரித்தது. அதன் பிறகு மக்கள் எரிச்சலோட படம் பார்க்காம ஜாலியா சிரிச்சு கமென்ட் அடிச்சுகிட்டே பார்த்து முடிச்சாங்க. ஜாலியான உங்கள் சினிமா அனுபவங்களையும் பகிருங்களேன்.

#உஷார் படுத்தும் பதிவு

கொஞ்ச நாட்களுக்கு முன்னால என் கணவர் போனில் ஒரு அழைப்பு வந்தது. "உங்கள் எண்ணிலிருந்து நிறைய பேசி இருக்கிறீங்க. நாங்க TRAI ல இருந்து பேசுறோம்" னு. நாங்க ரெண்டு பேரும் விழுந்து விழுந்து சிரிச்சோம். ஏன்னா போன்ல பேசுறதுன்னா என் வீட்டுக்காரருக்கு அவ்வளவு அலர்ஜி. எல்லோரும் வெளியே போகும் போது தான போனை எடுத்திட்டு போவாங்க. இவர் வெளியே போகும் போது வீட்டுல வச்சுட்டு போயிடுவார். அந்த மனுஷனுக்கு இப்படி ஒரு கால். இப்போ நேற்று ஒரு அழைப்பு. தலைமை செயலகத்தில் இருந்து பேசுறதாச் சொல்லி அவருடைய பேர், வீட்டு விலாசம், ஆதார் எண் முதற் கொண்டு சரியா சொல்லி "நீங்க டெல்லி போயிருக்கீங்களா? இல்லை. டெல்லியில உங்க பேர் அட்ரஸ்ல ஆதார் கார்டை proof ஆக் கொடுத்து ஒரு சிம் வாங்கி இருக்கிறாங்க. அதுக்கு நான் என்ன செய்யணும்." இப்படி உரையாடல் நடந்தது. இதைக் கேட்டுக் கொண்டே வந்த நான் என்ன விஷயம் னதும் சொன்னார். நான் " ஸ்பீக்கர்ல போடுங்க. யார் வடக்கத்தி காரங்களா? னு கேட்டேன். நான் சொல்வதைக் கேட்டதும் காலைக் கட் பண்ணிட்டாங்க. பிறகு ஒரு வீடியோ வந்தது. நாம வீட்டுல பேசுற எல்லாத்துக்கும் சம்பந்தமாத் தான் வீடியோ வந்திடுமே. ஒரு குறிப்பிட்ட வங்கியின் தகவல்கள் hack செய்யப்பட்டதாகவும் அதனால் நம் பணம் பறி போக வாய்ப்பில்லை என்றும் ஆனால் எல்லா தகவல்களையும் மிகச் சரியாகச் சொல்லி நம்மை ஏமாற்ற வாய்ப்புண்டு என் றும் வந்தது. எல்லா தகவல்களும் சரியாகச் சொல்லும் பட்சத்தில் OTP கேட்டால் கொடுத்திடுவோம். பணம் பறி போய் விடும். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் OTP ஐ மட்டும் சொல்லி விடாதீர்கள். முக்கியமாக அவர்கள் குறி வைப்பது வயதானவர்களைத் தான். இளைஞர்கள் அளவு டெக்னாலஜி தெரிந்திருக்க மாட்டார்கள் என்ற எண்ணம் தான். ஆதார் கார்ட் எங்கேயாவது கொடுத்து இருக்கிறீர்களா என்று கேட்டிருக்கிறாங்க. . இவர்' எங்கே போனாலும் முதல்ல ஆதார் கார்டைத் தான கேட்கிறாங்க" என்றார். வங்கியின் பல தகவல்களுக்கு பாஸ்வர்ட் தொலையேசி எண்ணும் பிறந்த நாளும் இணைந்ததாகத் தான் வைத்திருக்கிறார்கள். ஆதார்ல பிறந்த தேதி கிடைச்சிட்டா ஆபத்து தான. நம்ம அலைபேசி எண்ணில் அழைத்து நம்ம பேரைச் சரியாச் சொல்லி பல விதமான ஏமாற்று அழைப்புகள் வருகின்றன. பயப்படாம கூலா பதில் சொல்லுங்க. எந்த வித கூடுதல் தகவலும் சொல்லிடாதீங்க. இது ஒரு எச்சரிக்கைப் பதிவு.

19 October, 2026

குளத்தில் கல் எறியாதீர்.

குளத்தில் கல் எறியாதீர். யூட்யூப் பணம் கொடுக்க ஆரம்பித்த பிறகு வெகு சில பெண்கள் பணம் கிடைக்கிறது என்பதற்காக ரொம்பவும் தரம் தாழ்ந்து வீடியோ போடுறாங்க. என் உடல் என் சுதந்திரம் என்ற அளவில் பெண் குழந்தைகளும் எவ்வளவு கவர்ச்சிகரமாகத் தூண்டும் விதத்தில் ஆடை அணிய முடியுமோ அவ்வளவு கவர்சிகரமாக ஆடை அணிகிறார்கள். இதற்கும் குளத்தில் கல் எறிவதற்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கிறீர்களா? ஆண் மனது ஒரு குளம் போலத் தான். வெளிப் பார்வைக்கு அமைதியாகத் தெரியும். ஆனால் கலங்கி விட்டால் குடும்பம் குழந்தை எதை இழந்தாவது அதை அடையத் துடிப்பார்கள். தான் ஆசைப்பட்டது கிடைக்கும் வரை இரை தேடும் புலியின் கண்களை ஒத்துத் தான் அவன் நிலை இருக்கும். கொதி நிலையில் இருக்கும் தன் உடம்பு குளிர கிடைப்பவரை, அது குழந்தைகளாக இருந்தால் கூட பலியாக்கி விடுகிறார்கள். குளத்தில் கல் எறிபவருக்குத் தண்டனை கிடைப்பதில்லை அதனாலேயே தன் தவறு புரியாமல் இருக்கிறார்கள். இயற்கையிலேயே கொடூர குணம் கொண்டவர்கள் இருப்பார்கள் . நான் சொல்வது அவர்களை அல்ல. தூண்டப்பட்டு தவறிழைப்பவர்கள். அந்த பாவத்துக்கு நாம் ஆளாக வேண்டாமே!!

17 October, 2026

#பிரசவம் மறு பிறவி

#பிரசவம் என்பது மறுபிறவி பிரசவம் என்பது பெண்களுக்கு மறு பிறவி தான். கரு தரிப்பதற்கே இன்று பல தம்பதியர் பெரும் பிரயத்தனம் எடுக்க வேண்டி இருக்கிறது. மன அழுத்தம் நிறைந்த இன்றைய வாழ்க்கைச் சூழல் இயல்பாக நடக்க வேண்டிய ஒன்றிற்கு மருத்துவ மனையில் கால் கடுக்க நிற்க வைத்திருக்கிறது. கை நிறைய பரிசோதனை முடிவுகளோடும் மனம் நிறையப் பாரத்தோடும் வரிசையில் காத்திருக்கும் தம்பதியரைப் பார்க்க மனம் வலிக்கத் தான் செய்கிறது. மாதாந்தர நோவு அவர்களை உடலோடு எவ்வளவு மன வலிகளையும் சுமக்க வைக்கிறது என்பதைச் சொல்லத் தான் வேண்டும். காதல் திருமணத்தால் குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்காமலும் , வறுமையினாலும் வயிற்றில் ஏந்திய குழந்தைகளை பத்திரமாக இறக்கி வைக்கும் வரை தாய் படும் பாடு பெறும் பாடு. தாய் தந்தை பார்த்து செய்த திருமணத்தில் பெற்றவர்களின் அதீத கவனிப்பினால் சதைப் பிடிப்பான குழந்தைகள் உயரம் அதாவது நீளமும் கூடி இருந்தால் வயிற்றில் சுழன்று தலை கீழே இறங்க இடம் பத்தாமல் அதனால் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுக்க வேண்டியும் நேரிடலாம். அந்தக் காலத்துல பிள்ளத் தாச்சிய கண்ணு கலங்காம பார்த்துக்கணும் பாங்க. ஆனால் இன்று பல காரணங்களால் மன உளைச்சலுக்கு ஆளாகிற தாய்க்கு ரத்தம் அழுத்தமும் கூடி உரிய காலம் வரை வயிற்றில் வைத்திருக்க முடியாமல் அவசர அவசரமாக அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுக்க வேண்டி வருகிறது. அறுவை சிகிச்சைக்காக முதுகில் தண்டு வடத்தில் ஊசி குத்த பெண் உடலை வில் போல் வளைப்பார்கள் எத்தனை பேருக்கு இது தெரியும். அப்படி வளைத்துப் போடப்படும் ஊசி குத்திய வலியை அவள் குழந்தை பெற்ற பிறகும் வாழ்நாள் முழுவதும் சுமக்க வேண்டும். இதுக்குத் தான் நல்லா உழைக்கணும் அப்பத்தான் இயற்கையா பிரசவம் ஆகும்கிறவங்களுக்கு ஒண்ணு சொல்ல விரும்பறேன். நம் உடலின் உள் பகுதியில் உள்ள உறுப்புகள் எல்லாம் கொஞ்சம் கூட இடம் வீணாகி விடாமல் மிக நேர்த்தியாக அடுக்கப்பட்டிருக்கின்றன. குழந்தை சுமப்பதால் விரிவடையும் கர்ப்பப்பை இயற்கை முறையில் குழந்தை பிறந்த பிறகும் ஒரு சிலருக்கு பல காரணங்களால் தொய்வடைந்து இறங்கி கர்ப்ப வாய் வரை வந்து முட்டும். அத்தகைய பெண்களுக்கு தினசரி பணிகளைச் செய்வதிலும் வேகமாக நடப்பதிலும் பெரும் சிரமம் இருக்கும். கர்ப்பப்பை இறங்கியதால் உள்ளே அழகாக அடுக்கப்பட்டிருந்த வரிசை கலைந்து சிறுநீர்ப்பையும் ஒரு சிலருக்கு இறங்கி விடும். இறங்கிய கர்ப்பப்பை தொற்று நோய்க்கிறுமிகளால் பாதிக்கப்பட்டு பின்னாளில் கான்சராகும் வாய்ப்புள்ளதால் அறுபது வயதுக்குப் பிறகு கூட அறுவை சிகிச்சை செய்து கர்ப்பப்பையை நீக்குவார்கள். அப்போதும் மயக்கத்திற்காக அதே வில் வளைப்பு சிகிச்சை நடக்கும். இப்பொழுது சொல்லுங்கள். பிரசவம் என்பது மறு பிறவியா இல்லையா. குழந்தை பிறப்பு ரொம்பக் குறைந்து விட்டது தமிழ்நாட்டில் தமிழர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது. ஒன்றோடு நிறுத்தாதீர்கள் என்று சின்னத்திரையில் நிகழ்ச்சி நடத்துகிறோமே மனித குலம் தழைக்க இத்தனை அவலங்களைக் கடந்து வரும் பெண்ணிடம் அனுசரணையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர வைக்கவும் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டாமா? இது வரை நான் சொன்னது பிரசவம் என்ற ஒரு நதியைப் பற்றி மட்டும் தான். மூட் ஸ்விங், ஹார்மோனல் மாறுபாடு எனப் பேசப் பல கிளை நதிகளும் இருக்கின்றன. கண்டிப்பாகப் பேசுகிறேன்.்