24 October, 2026
#சினிமா விமர்சனம். டோரதி
மிக அதிகமாக பேசப்பட்ட படம் டோரதி. நெட்ஃப்ளிக்ஸ்சில் வந்து விட்டது.
படத்தில் ஆர்வத்தை தூண்டுவதற்காக ஆரம்பமே கார்த்தி (ரிஷிகாந்த்) போனில் சுப்புவைக் (சனந்த்) கொன்று விட்டேன் என்கிறான்.
பள்ளி நட்பில் கதை தொடங்குகிறது , புது மாணவனாக வந்து சேரும் கார்த்தியை சுப்பு தைரியமாக பழைய மாணவர்களிடமிருந்து பாதுகாப்புக் கொடுக்கிறான்.
ஆனால் வளர்ந்த பின் கேங்ஸ்டர் ஆன சுப்புவின் குடும்ப உறவினர் ஒருவர் சுப்பு ரத்தத்தை கண்டு அஞ்சுபவனாகவும் கார்த்தி துணிச்சலாய் இருப்பதாகவும் சொல்கிறார் . இது படத்தின் கருவை மெல்லிய கோடிட்டு காட்டல் .
ரிஷிகாந்த்தை ஏன் திடீரென்று ரஜினிகாந்த்தோடு ஒப்பிடுகிறார்கள் என நினைத்தேன். ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை யில்ல என்ற பாடலை "கல்யாண விருந்து" பாடல் நினைவுபடுத்துகிறது . ஆனால் ரஜினி முகத்தில் இருந்த அந்த ஒளி இங்கே கொஞ்சம் மிஸ்ஸிங் .
பல வருடங்களுக்ககு முந்திய காலகட்டத்தில் நடந்த நிகழ்ச்சியாகத் தான் காட்டுகிறார்கள் . இன்னும் பத்து வருஷத்துல எங்களை எல்லோரும் ஏற்றுக் கொள்வாங்கன்னு ஜீவா சொல்றாங்க . அதனால அது நிகழ்காலக் கதை அல்ல. படத்தை எதிர்மறையாக விமர்சனம் செய்பவர்கள் , அநேகமாக படத்தை பார்க்காதவர்களாகத் தான் இருப்பார்கள்.
படிப்படியாக சுப்பு கதாபாத்திரத்தின் மேல் நம் அனுதாபத்தை கூட்டுகிறார்கள் அன்றைய பொது ஜனத்திற்கு அவர்கள் மேல் இருந்த அருவருப்பை காட்டுவதற்காக ஒம்போது அஜக் என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதன் மூலம் பிறழ் பிறப்பு கொண்டவர்கள் மேல் அனுதாபம் இல்லாத அந்த காலத்தை உணர்த்துகிறார்கள்.
பத்து வரிகளில் சொல்லக் கூடிய வசனத்தை ஒற்றை வார்த்தையில் "வரேன்டி" என்பதன் மூலம் கார்த்தி சுப்புவின் பால் மாற்றத்தை ஏற்றுக் கொண்டதை புரிய வைத்தது இயக்குனரின் திறமை.
#ஸ்பாய்லர் இனி தான் படம் பார்க்கணும். படத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டாம் என நினைப்பவர்கள் இங்கேயே பை பை சொல்லி நகர்ந்து கொள்ளுங்கள்.
கொலையைத் தவிர்த்து தமிழ்ப் படமே எடுக்க முடியாது போல . இதிலும் அடியாளாக பணிபுரியும் கார்த்தியிடமே அவன் நண்பன் சுப்புவை கொல்லும் பணி ஒப்படைக்கப்படுகிறது. ஏன்? அதுதான் அனைவரும் அறிந்த ரகசியமாச்சே . 16 வயதினிலேயே பெண்ணாக உணர்ந்த சுப்பு அதை மறைத்து ஆணாக நடமாடிக் கொண்டிருந்தவன் தன் தந்தை, அண்ணன்கள் செய்யும் அடாவடியில் வெறுத்து பெண் உடை தரித்ததால் குடும்ப கௌரவம் போய்விடும் என்று தான் கொல்லும் பணி.
பின்னாளில் சுப்பு வும் கார்த்தியை விட்டு பிரிந்து விடக்கூடாது என்பதற்காகவே ஆணுடை தரித்து ஆணைப் போலவே அடாவடிகள் செய்ததாகச் சொல்கிறான். டோரதி (கீர்த்தி சுரேஷ் ) சுப்புவின் அண்ணனைத் திருமணம் செய்து வந்த சில நாட்களிலேயே தூக்கில் தொங்குகிறாள். அவளைத் தன் குடும்பத்தார் தான் கொன்று விட்டார்கள் என்று நம்பும் சுப்பு அந்த துயரத்தில் அவன் தோழி தனலட்சுமியைத் தாயாய் நினைத்து துயரத்தை கொட்டுகிறான்.
அதை கார்த்தி விசாரிக்கும் போது இப்போதைக்கு என் அழுகையை சகிக்கிறதுக்கு அவ ஒருத்தி தானே இருக்கிறாள் என்பான் . ஆண் பிள்ளை அழுவதை கேவலமாக பார்ப்பது ஒரு அடிமுட்டாள் தனம். ஆண் பிள்ளையானால் என்ன ? அவனுக்கும் இதயம் இருக்கிறது.
சுப்புவைத் தன் தங்கை தனலட்சுமியுடன் பார்த்த அண்ணனுக்கும் மன்னிப்பு கேட்க வந்த சுப்புவுக்கு தேரிச் செம்மண்ணில் நடந்த சண்டைக் காட்சி உண்மையில் சண்டைக் காட்சி அமைத்தவருக்கும் ஒளிப்பதிவு செய்தவர்க்கும் இடையே நடந்த சேவல் போட்டி . மிக அழகான காட்சி அது.
துணிச்சலோடு எடுக்கப்பட்ட படம். பார்த்தவர்கள் எதிர்மறை விமர்சனங்கள் தரமாட்டார்கள். கார்த்திக் சுப்புராஜ் இயக்கம் , இசைஞானியின் இசை, கணேஷ் சிவாவின் படத்தொகுப்பு, திருநாவுக்கரசு அவர்களின் ஒளிப்பதிவு, கணேஷ் சுப்புராயன் அவர்கள் அமைத்த சண்டை காட்சிகளோடு பூரண அலங்கார பூஷிதையாக வலம் வருகிறாள் டோரத்தி.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!