17 March, 2026
மிண்டியும் பறஞ்சும் அமேசான்
அமேசான் ப்ரைம்
மலையாளம்
இயக்குநர் : அருண் போஸ்
முக்கிய நடிகர்கள் : உன்னி முகுந்தன், ( சனல்) அபர்ணா பால முரளி. ( லீனா வர்கீஸ்) ஜாஃபர் இடுக்கி ( வர்கீஸ், லீனாவோட அப்பா) , மாலா பார்வதி ( சனலோட அம்மா.
மலையாளத்தில் மிண்டுறதுன்னாலும் பறையறதுன்னாலும் ஒரே அர்த்தம் தானே என்று சிந்தித்த படி படம் பார்க்கத் தொடங்கினால் மனதோடு மனது நெருக்கமாக பேசுவதற்கு பயன்படுத்துவது என்பது புரிந்தது. சரி தானா ன்னு மலையாளம் தெரிந்தவர்கள் தான் சொல்லணும். படத்துக்கு பெயர் மிகச் சரியானது கணவனை நினைத்து மனைவியும் மனைவியை நினைத்து கணவனும் முடிவெடுக்கிறார்கள்.
ஒரு சிலரது வாழ்க்கை எதிர் பாரா நிகழ்வுகள் நிறைந்ததாய் மேடும் பள்ளமுமாய் இன்பமும் துன்பமுமாய் கலந்து இருக்கும். ஒரு சிலருக்கு வாழ் நாள் முழுவதும் துன்பம் மிகுந்ததாய் இருக்கும். ஆனால் அபூர்வமாய் வெகு சிலருக்கு எந்த வித சிரமமும் இல்லாமல் ஐஸ் க்ரீம் தொண்டையில் வழுக்கிக் கொண்டு செல்வது போல் சுலபமாய் இருக்கும் வாழ்க்கை.
இந்தக் கடைசி வகையைச் சேர்ந்தவர்களின் கதை தான் படம். ஹீரோ வெளி நாட்டிலிருந்து தன் மனைவியைப் பார்க்க வருகிறார். விமான நிலையத்திலிருந்து தன் வீட்டிற்குச் சென்று தாயைக் கண்டு, தங்கையின் கணவரின் காரை எடுத்துக் கொண்டு மனைவியை வந்து சந்திக்கிறார். இதற்கு இடையில் ஒவ்வொரு நிகழ்வுக்கு தொடர்பாய் பழைய காட்சிகள் ப்ளாஷ் பேக்கில் இடைச் செருகலாய் வருகிறது.
கணவன் மனைவிக்கு இடையே ரொம்ப மென்மையாய் காதல் சீண்டல்கள். அருமையான பாடல்கள். எந்த ஒரு வில்லத்தனமும் இல்லாமல் வரும் அத்தனை கதா பாத்திரங்களும் மிக நல்லவர்கள்.
இப்படியான வாழ்க்கை ரொம்ப சுவாரஸ்யமற்றதாய் இருக்குமோ என நான் நினைத்தது மட்டுமே வில்லத்தனம்.
அழகான கதாநாயகன், நன்கு மெலிந்து உடல் எடை குறைத்த அழகான கதா நாயகி. இவர்களின் காதல் வீட்டுக்குத் தெரியும் போதும் பெரிதாய் பிரச்னையில்லை. பெரு மழையோடு பல நிலச் சரிவுகள் நடக்கும் பாதையில் சனலில் சுமுகமான பயணம், காதல் திருமணம் செய்த கணவனும் மனைவியும் திருமணமான ஆரம்பத்திலேயே நாடு விட்டு நாடு பிரிந்து இருந்தாலும் அவர்களிடையே எந்த ஒரு சிக்கலும் இல்லை. இப்படி போக்குவரத்தற்ற சாலையில் ஆட்டோ கியர் வண்டியில் பயணம் போவது போல் ஒரு படம் பார்க்க ஆசைப்பட்டால் இந்த படத்தைப் பார்க்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!